இலங்கைக்கு 462 ஓட்டங்கள் வெற்றி இலக்கு | தினகரன்

இலங்கைக்கு 462 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஜென்னிங்ஸ் அபார சதம்

2-வது இன்னிங்சில் ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடிக்க இலங்கைக்கு 462 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

இலங்கை−இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இங்கிலாந்து அறிமுக வீரர் பென் போக்ஸ் (107) சதத்தால் 342 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மொயீன் அலியின் (4) அபார பந்து வீச்சால் 203 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பின்னர் 139 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பேர்ன்ஸ் 23 ஒட்டங்களிலும், மொயீன் அலி, ஜோ ரூட் ஆகியோர் தலா 3 ஓட்டங்களிலும் வெளியேறினார்கள்.

அதன்பின் தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் ஸ்டோக்ஸ் 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது இங்கிலாந்து 2-வது இன்னிங்சை இடைநிறுத்தியது.

ஜென்னிங்ஸ் 146 ஓட்டங்களுடனும் , சாம் குர்ரான ஓட்டம் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி சார்பில் தில்ருவான் பெரேரா, ஹேரத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து (139+322) 461 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 462 ஓட்டகள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 462 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக கருணாரத்ன மற்றும் கௌசால் சில்வா களமிறங்கினர்.இருவரும் முறையே 7,8 ஓட்டங்கள் பெற்றுகளத்தில் உள்ளனர்.இலங்கை அணி ஆட்ட நேரமுடிவில் 15 ஓட்டங்கள் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியை வி்ட 447 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.10 விக்கெட் கைவசம் உள்ளது. இன்று போட்டியின் நான்காவது நாளாகும்.

ஏ.ஆர்.பரீத்


Add new comment

Or log in with...