1st ODI: PAKvNZ; போல்ட் ஹெட்ரிக்; போட்டி நியூசிலாந்து வசம் | தினகரன்

1st ODI: PAKvNZ; போல்ட் ஹெட்ரிக்; போட்டி நியூசிலாந்து வசம்

1st ODI: PAKvNZ; போல்ட் ஹெட்ரிக்; போட்டி நியூசிலாந்து வசம்-1st ODI: PAKvNZ; Trent Boult Hat-Trick-NZ won by 47 Runs

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

T20 தொடரை முழுமையாக கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரையும் தம் வசப்படுத்தும் முனைப்புடன் களம் கண்ட பாகிஸ்தான் அணி நேற்று (07) துபாயில் நடைபெற்ற முதலாவது  போட்டியில் தோல்வியைச் சந்தித்தது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி மீண்டும் ஒருமுறை விக்கெட்டுக்களை சரமாரியாக இழக்க ஆரம்பித்தது.

எனினும் மிகசிறப்பாக விளையாடிய ரோஸ் டெய்லர் மற்றும் டொம் லதாம் ஜோடி சிறந்த இணைப்பாட்டத்தின் மூலம் நியூசிலாந்து அணியை ஓரளவு உயர்வான நிலைக்கு கொண்டு சென்றனர். டெய்லர் 80 ஓட்டங்களையும் டொம் லதாம் 68 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

இதன்படி நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ஓட்டங்களைப் பெற்றது.

பந்து வீச்சில் சஹீன் அப்ரிடி மற்றும் சாதாப் கான் தலா 4 விக்கெட்டுகளையும் இமாட் வசீம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

267 எனும் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஒருநாள் போட்டிகளுக்காக வரவழைக்கப்பட்ட ட்ரெண்ட் போல்டின் பந்து வீச்சு திணரடிக்கச் செய்தது.

T20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் வெற்றிகளுக்கு ஏதுவாக இருந்த பக்கர் சமான், பாபர் அசாம் மற்றும் ஹபீஸ் ஆகியோரை ஓரே ஓவரில் ஹெட்ரிக் மூலம் வீழ்த்தி பாகிஸ்தான் அணியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் ட்ரென்ட் போல்ட். சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் நியூசிலாந்து சார்பாக ஹெட்ரிக் சாதனை படைத்த 3 ஆவது வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணியை சொய்ப் மலிக் மற்றும் இமாமுல் ஹக் ஜோடி சிறப்பான 63 ஓட்ட இணைப்பாட்டத்தின் மூலம் மீண்டும் போட்டிக்குள் போட்டி விறுவிறுப்பாக மாறியது. எனினும் மேலும் 2 ஓட்டங்களைப் பெருவதற்கிடையில் இருவரும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து களம் புகுந்த அணித்தலைவர் சர்பராஸ் மற்றும் இமாட் வசீம் ஜோடி மிக சிறப்பாக ஆடி பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையையை உயர்த்தியது.

எனினும் தொடர்ந்து நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்து வீச்சினை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. சர்பராஸ் 64 ஓட்டங்களையும் இமாட் வசீம் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட் மற்றும்  பேர்குசன் தலா 3 விக்கெட்டுக்களையும் கொலின் டி க்ரேன்ட்ஹோம் 2 விக்கெட்டுக்களையும் டிம் சவ்தி மற்றும் இஷ் ஷோதி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக ட்ரென்ட் போல்ட் தெரிவு செய்யப்பட்டார்.

நியூசிலாந்து 266/9 (50)
ரோஸ் டெய்லர் 80 (112)
டொம் லதாம் 68 (64)

சஹீன் அப்ரிடி 4/46 (8)
சாதாப் கான் 4/38 (10)
இமாட் வசீம் 1/38 (10)

பாகிஸ்தான் 219/10 (47.2)
சர்பராஸ் 64 (69)
இமாட் வசீம் 50 (72)
இமாமுல் ஹக் 34 (46)
சொய்ப் மலிக் 30 (50)

ட்ரென்ட் போல்ட் 3/54 (10)
லொகி பேர்குசன் 3/36 (9.2)
கொலின் டி க்ரேன்ட்ஹோம் 2/40 (10)


Add new comment

Or log in with...