சபாநாயகரின் கருத்தினால் வீண்பிரச்சினைகள்! | தினகரன்

சபாநாயகரின் கருத்தினால் வீண்பிரச்சினைகள்!

'இன்றைய அரசியல் பரபரப்பு நிறைந்த சூழலில் சபாநாயகர் ஒரு நடுவர் மாத்திரமே' என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா எமக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

கேள்வி : புதிய பிரதமர் நியமனம் சட்டவிரோதமென இச்சந்தர்ப்பத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதல்லவா?

பதில் : புதிய பிரதமரின் நியமனம் தொடர்பாக அரசியலமைப்புக்கு உட்பட அனைத்து சட்டதிட்டங்களையும் எண்ணிப் பார்த்தே கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். அரசியலமைப்பின்படி பிரதமரை நியமிக்கும் பூரண அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. சாதாரண சட்டத்தின் கீழ் நியமிக்கவும் அதேபோல் நீக்கவும் அதிகாரம் உண்டு.இந்த பாராளுமன்றம் 2015 ஓகஸ்ட் மாதம் பொதுமக்களின் வாக்குகளினாலேயே அமைக்கப்பட்டது.

அன்று எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதாவது 115 ஆசனங்கள் கிடைக்கவில்லை. அவ்வாறான சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பெற்ற பாராளுமன்ற உறுப்பினரென கருதப்படுகின்ற ஒருவரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. அவ்வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

கேள்வி : அமைச்சரவை தற்போது சட்டப்பிரகாரம் கலைக்கப்பட்டுள்ளதல்லவா?

பதில் : ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவு அரசிடமிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் அமைச்சரவை சட்டவிரோத அமைச்சரவையாக மாறியது. அதன் பிரகாரம் மீண்டும் பிரதமர் ஒருவரை நியமிக்க அவருக்கு அதிகாரமுண்டு.

கேள்வி : அரசியலமைப்பில் ஜனாதிபதியின் அதிகாரத்தில் 19வது திருத்தத்தின் மூலம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதல்லவா?

பதில் : 19வது திருத்தத்தில் பிரதமரை நியமிப்பது தொடர்பாக எவ்வித மாற்றமும் நிகழவில்லை. அந்த சட்டங்கள் அப்படியே இருந்தன. 78 இன் ஆரம்ப அரசியலமைப்பின்படி ஜனாதிபதியால் அமைச்சர்கள் நியமிக்கப்படும் போது அவருக்குத் தேவையென்றால் மாத்திரம் பிரதமரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள முடியும்.

கேள்வி : சபாநாயகர் அரசாங்கத்தின் பெரும்பான்மையை உறுதி செய்யுமாறு கூறுகின்றார். இதன் காரணமாக பாரிய கருத்து மோதல்கள் சமூகத்தில் உருவாகியுள்ளதல்லவா?

பதில் : சபாநாயகரின் கூற்று காரணமாக இவ்வேளையில் மோதலொன்று உருவாகியுள்ளது. சபாநாயகருக்கு அவ்வாறு செயற்பட எவ்வித அதிகாரமும் இல்லை. சபாநாயகர் என்பவர் பாராளுமன்றம் கூட்டப்பட்டுள்ள வேளையில் செயற்படும் ஒருவராவார். பாராளுமன்றம் கூட்டப்பட்ட வேளையிலேயே சபாநாயகரது அதிகாரம் செயல்படும். அவ்வேளையில், அவர் சுயாதீன நடுவராக செயற்பட வேண்டும்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு வந்துள்ள வேளையில் பாராளுமன்றத்தில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். இவ்வேளையிலும் பாராளுமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டுள்ளன. சபாநாயகரால் அவ்வாறு கூறுவதற்கு எவ்வித அதிகாரமுமில்லை. அந்தக் கூற்றினால் சர்வதேச ரீதியிலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சாபாநாயகர் என்பவர் விளையாட்டொன்றின் போது நடுவராக இருக்க வேண்டியவரேயாவர்.

கேள்வி : அரசியலமைப்பு மற்றும் நிறைவேற்று அதிகார முறை இருந்தாலும் இந்த நிறுவனங்கள் இரண்டிற்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளதல்லவா?

பதில் : இங்கு எவ்வித மோதலும் இல்லை. அரசியலமைப்பின் நான்காவது அரசியலமைப்புப்படி அதிகாரப் பகிர்வு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பு அதிகாரம் செயற்படுத்தப்படுவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாலான பாராளுமன்றத்தால்தான். மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவரால்தான் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட நிறைவேற்று அதிகாரம் செயற்படுத்தப்படும். நீதிமன்ற அதிகாரம் செயற்படுவது அரசியலமைப்பின்படி அமைக்கப்பட்ட நீதிமன்றத்தின் மூலமே. அங்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. பிரதமரை நியமிக்கும் அதிகாரம் முற்று முழுதாக நிறைவேற்று அதிகாரமாகும். அதற்குக் காரணம் பிரதமர் என்பது நிறைவேற்றுப் பதவியாகும். நாட்டின் பிரதமராக இருந்தாலும் அவர் அமைச்சரவையின் பிரதிநிதியே. அவர் தனது நிறைவேற்றதிகாரத்தை அமைச்சரவையிலேயே செயற்படுத்த முடியும். அவர் பாராளுமன்றத்தில் செயற்படுவது பாராளுமன்றம் கூட்டப்படும் வேளையிலேயே.

கேள்வி : அடிக்கடி எமக்கு 1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் மீது தெளிவில்லாத விடங்கள் உள்ளதாக தெரிகிறதல்லவா?

பதில் : 78 அரசியலமைப்பில் மற்றும் திருத்தப்பட்ட அரசியலமைப்பில் எவ்வித குறைகளும் இல்லை. தெளிவில்லாத இடங்களில் அர்த்தங்களைக் கூறுவதற்கு உயர்நீதிமன்றத்துக்கு பூரண உரிமையுண்டு.

கேள்வி : எவ்வாறாயினும் இவ்வேளையில் பாராளுமன்ற கூட்டம் நிறைவு செய்யப்பட்ட பின்னர் நிலையற்ற தன்மை தோன்றியுள்ளதல்லவா?

பதில் : சுயாதீன குடிமக்களாக இருந்து நோக்குகையில் பலவித மாற்றங்கள் நடைபெறுவது எமக்குத் தெரிகிறது. சரத் என். சில்வாதான் ஒரு பக்கத்தில் இருந்து மற்றைய பக்கத்துக்குச் செல்ல சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்தாரென்ற கருத்து நிலவுகிறது. அவ்வாறான தீர்ப்பொன்றை நானொருபோதும் வழங்கியதில்லை.

அவ்வேளையில் முன்னாள் பதில் நீதியரசர் ரஞ்சித் அமரசூரிய வழங்கிய தீர்ப்பே அது. அதை என் மீது சுமத்தியவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். பாராளுமன்ற உறுப்பினர்களால் மனச்சாட்சியின்படி ஒரு பக்கமிருந்து இன்னொரு பக்கத்துக்கு போக முடியும். ஆனால் தற்போது நடைபெறுவது மனச்சாட்சிக்கு அப்பால் சென்ற சந்தர்ப்பமாகும். ஒரு நாளைக்கு ஒரு இடத்தில், மறுநாள் இன்னொரு இடத்திற்குச் செல்லும் நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது. அது மொத்த அரசியலமைப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உறுதியற்ற நிலைமையின் கீழ் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமென்பதே எனது கருத்தாகும். அதற்கான முழு உரிமையும் மக்களிடமே உள்ளது. அந்த அதிகாரத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். சபாநாயகரும் பக்கச்சார்பாக செயற்படுவதாகத் தெரிகிறது. தற்போதைய நிலைமையில் பாராளுமன்றம் கூட்டப்பட்டால் பெரும் மோதல் உருவாகக் கூடும். தற்போது 100 மில்லியன் 200 மில்லியனுக்கு கட்சி மாறுவதாக மக்கள் கூறுகிறார்கள். இவ்வாறான சூழலில் அரச தலைவராக ஜனாதிபதி செய்ய வேண்டியது மக்களிடம் உள்ள அரசுரிமை அதிகாரத்தை மீண்டும் மக்களுக்கே வழங்குவதாகும்.

கேள்வி : அவ்வாறு தேர்தலுக்கு செல்ல முடியுமா?

பதில் : முதலில் அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதா என அறிய வேண்டும். 1978 ஆரம்ப அரசியலமைப்பில் அரசைக் கலைக்கும் அதிகாரம் 70வது அரசியலமைப்புக்கு இருந்தது. பாராளுமன்றம் கூட்டப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்னர் அரசாங்கத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு பூரண அதிகாரமிருந்தது. ஒரு வருடத்திற்குள் பாராளுமன்றத்தைக் கலைப்பதாயின், பெரும்பான்மையானோரின் விருப்பத்தின் பேரில் அல்லது வரவு செலவுத் திட்டம் நிராகரிக்கப்படும் வேளையில் இது சாத்தியமாகும்.

இந்நிலைமை 2002 ஆம் ஆண்டு ஏற்பட்டது. ரணில் விக்கிரமசிங்க அன்றும் 19வது திருத்தத்தைக் கொண்டு வந்தார். அங்கு பெரும்பான்மையினரின் அங்கீகாரமில்லாமல் ஜனாதிபதியினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாதென்ற யோசனையைக் கொண்டு வந்தார். இது மிக முக்கியமான பிரச்சினையென்பதால் உச்சநீதிமன்றத்தில் ஏழு பேரடங்கிய நீதிபதிகளின் நடுவர் குழுவுக்கு இப்பிரச்சினை கொண்டு போகப்பட்டது. அவர்களின் வாதமென்னவென்றால் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரமென்பதாகும். மக்கள் அதிகாரத்தின் பொறுப்பாளர் மற்றும் அதனைச் செயற்படுத்துபவர் ஜனாதிபதி என்று உச்சநீதிமன்றம் முழுமனதாக தீர்ப்பு வழங்கியது. அதனை பிறருக்கு வழங்கினால் மக்களின் உரிமை அதிகாரம் பிறருக்கு வழங்கப்பட்டதாக முடிவு செய்யப்படும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதியின் கலைக்கும் அதிகாரத்தை நீக்குமென்றால் அது அரசியலமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது சரத்துக்கு எதிரானதாகும். கலைப்பதென்பது மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு அங்கீகரிக்கப்படுவதுடன், பொதுமக்களின் வாக்கெடுப்பின் மூலம் அது முடிவு செய்யப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள். அதனால், ரணில் விக்கிரமசிங்க அந்த சட்டத்தை கைவிட்டார்.

கேள்வி : 19 வது திருத்தச் சட்டத்தின்படி நான்கரை வருடங்கள் செல்லும் வரை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாதல்லவா?

பதில் : இந்த 19வது திருத்தத்தை கொண்டுவரும் போது நான்கரை வருடங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாதென 70வது அரசியலமைப்பின் சரத்தொன்றை இணைத்தார்கள். 19வது திருத்தச் சட்டத்தை தயாரிக்கும் போது ஜனாதிபதியின் அதிகாரத்தையும் அதில் உள்ளடக்கினார்கள். 33வது அரசியலமைப்பை திருத்தி 33 – 2 (ஆ) சரத்தின்படி அரசியலமைப்பிலோ அல்லது வேறு சட்டத்திலோ ஏதேனுமொன்று குறிப்பிடப்பட்டால் அதற்கு மேலதிகமாக ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டவும் கூட்டத் தொடரை நிறைவு செய்யவும் கலைக்கவும் அதிகாரமுண்டென சரத்தொன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதிக்கு பூரண அதிகாரமுண்டு. அதைத் தவிர 983 இலக்கம் 1 என்னும் பாராளுமன்ற தேர்தல் சட்டம் செயல்படுகின்றது. அச்சட்டத்தில் 10வது பிரிவில் தெளிவாக ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்படும் சந்தர்ப்பத்திலோ அல்லது தேர்தலொன்று தேவையென்று கூறப்படும் சந்தர்ப்பத்திலோ வேட்பாளர்கள் நியமனங்களை வழங்க வேண்டிய முறை, அதன் முடிவுத் திகதி, தேர்தல் நடத்தப்படும் நாள், பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் நாள் என்பவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

ரசிக்கா ஹேமமாலி
தமிழில்: வீ. ஆர். வயலட்


Add new comment

Or log in with...