மாகாண சபைத் தேர்தலை அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் | தினகரன்

மாகாண சபைத் தேர்தலை அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்

அமைச்சர் மஹிந்த அமரவீர

மாகாணசபை தேர்தலை அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் எதிர்வரும் சில மாதங்களில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு அமைவாகவே புதிய பிரதமரும் அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், சபாநாயகர் அரசியல் அமைப்புக்கு முரணாக செயற்படுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஐந்து இலட்சம் பலாக் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.

விவசாய அமைச்சின் “நாம் பயிர் செய்து நாம் உண்போம்” என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் பலாமரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றியஅமைச்சர்,

மாகாணசபை தேர்தலையடுத்து ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். பாராளுமன்றத்தைக் கலைக்கப்போவதாக சிலர் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. மக்களை திசைதிருப்புவதற்காக சிலர் செயற்படுகின்றனர்.

சபாநாயகர் அரசியல் அமைப்புக்கு முரணாக செயற்படுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதி அரசியல் ரீதியாக மேற்கொண்டுள்ள முடிவை நாட்டு மக்களில் 75 சத வீதமானோர் அங்கீகரித்துள்ளனர்.

அரசியல் யாப்பிற்கு அமைவாகவே ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். எமது அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உண்டு. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாட்டின் நலனை முதன்மைப்படுத்தி செயற்படும் அரசாங்கமே தற்பொழுது பதவி ஏற்றுள்ளது.

உழுந்து, மிளகாய் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களை நாம் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு ஏற்கனவே நாம் திட்டங்களை ஏற்படுத்தி யுள்ளோம். மாம்பழ வலயம் ஒன்று யாழ்ப்பாணத்திலும், உழுந்து வலயம் வவுனியாவிலும் உருவாக்கப்படும். பிரதேசங்களுக்கு ஏற்றவாறான உற்பத்தி வலயங்களை நாம் ஏற்படுத்தி வருகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...