ஜனாதிபதியின் சிம்மாசன உரையுடன் சபையை 21க்கு ஒத்திவைக்க ஏற்பாடு | தினகரன்

ஜனாதிபதியின் சிம்மாசன உரையுடன் சபையை 21க்கு ஒத்திவைக்க ஏற்பாடு

இடைப்பட்ட காலத்தினுள் பிரேரணைகள் சமர்ப்பிக்கலாம்

ஜனாதிபதியின் சிம்மாசன உரையுடன் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடும் பாராளுமன்றம் மீண்டும் 21 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்படுமென சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றம் கூடியது முதல் 21 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்துக்குள் ஐக்கிய தேசியக் கட்சி விரும்பினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க முடியுமென்றும் அவர் கூறினார். சபாநாயகர் அக் கடிதத்தை ஏற்று, நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் பதிவுசெய்து 05 நாட்களுக்குப் பின்னர் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

எனினும் இச் செயற்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டைப் பொறுத்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி முதலில் பாராளுமன்றத்தை 16 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தில் முதல் முறையாக 14 ஆம் திகதி கூடவிருக்கும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி சிம்மாசன உரையாற்றுவார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிவிப்புக்களைத் தொடர்ந்து பாராளுமன்றம் மீண்டும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுமென்றும் திலங்க சுமதிபால எம்.பி கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...