Thursday, March 28, 2024
Home » உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நால்வர் இந்தியர்கள்

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நால்வர் இந்தியர்கள்

by sachintha
December 7, 2023 6:24 am 0 comment

ஒருவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் இந்தாண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 4 பெண்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் வெளியாகும் பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இப்போது 2023ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், ஊடக பிரபலங்கள் எனப் பலரும் இடம்பெற்றுள்ளனர்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை 20ஆவது ஆண்டாக இவ்வருடமும் இப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளனர். அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். பொழுதுபோக்குத் துறையில் இருக்கும் ஒருவர் உச்சமான 5 இடங்களுக்குள் வருவது இதுவே முதன்முறையாகும். கடந்த 2022இல் 79 ஆவது இடத்தில் இருந்து ஸ்விப்ட் ஒரே ஆண்டில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் சமீபத்தில் நடத்திய ஈராஸ் இசைப் பயணம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அவரது சொத்து மதிப்பும் $1.1 பில்லியனை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலில் இந்தியாவில் இருந்து மொத்தம் 4 பெண்கள் இடம்பிடித்துள்ளனர். குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் சக்திவாய்ந்த பெண்ணாக இருக்கிறார். அவர் இந்த பட்டியலில் 32ஆவது இடத்தில் உள்ளார். அதேபோல எச்.சி.எல் ​ேகார்ப்பரேஷன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா (60வது இடம்), ஸ்டீல் அத்தாரிட்டி ஒஃப் இந்தியா தலைவர் சோமா மொண்டல் (70 ஆவது இடம்), மற்றும் பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா (76 இடம்) ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

நிர்மலா சீதாராமன் கடந்த 2019 மே மாதம் மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். ேகார்ப்பரேட் விவகார அமைச்சகத்தையும் அவரே கவனித்து வருகிறார். தீவிர அரசியலில் வருவதற்கு முன்பு அவர் இங்கிலாந்தின் வேளாண் பொறியாளர்கள் சங்கம் மற்றும் பி.பி.சி உலக சேவை ஆகியவற்றில் இருந்ததாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. அதேபோல தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT