ஜெயாவை இழிவுபடுத்தும் வசனங்களை நீக்க வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம் | தினகரன்

ஜெயாவை இழிவுபடுத்தும் வசனங்களை நீக்க வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசையும் ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தும் வசனங்களை நீக்க வலியுறுத்தி நேற்று மதுரையில் ‘சர்கார்’ படம் ஓடிய சினிப்பிரியா தியேட்டர் முன் எம் எல் ஏ தலைமையில் அதிமுகவினர் முற்றுகைப் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த தியேட்டரில் நேற்று மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் கதையில் தொடங்கி அதன் வசனங்கள் வரை சர்ச்சைகள் கொடிகட்டிப் பறந்தது. தற்போது இந்தப் படத்தின் ஒரு காட்சியில், தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் துணை நடிகர்கள் தூக்கி எறிவது போன்ற காட்சி இருப்பதாகவும் அப்படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியதாகவும் அதிமுகவினர் கடந்த சில நாட்களாக கொந்தளிப்பில் உள்ளனர்.

நேற்று மதியம் மதுரையில் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ‘சர்கார்’ படம் ஓடிய அண்ணாநகர் சினிப்ரியா கொம்ப்ளக்ஸ் தியேட்டர் முன் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நடிகர் விஜய்யைக் கைது செய்ய வேண்டும், சர்காரில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளையும் காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

அதனால் தியேட்டர் முன் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.


Add new comment

Or log in with...