Friday, March 29, 2024
Home » சட்டக்கல்லூரிக்கு ஜனாதிபதியின் தலையீட்டில் புதிய இடம்

சட்டக்கல்லூரிக்கு ஜனாதிபதியின் தலையீட்டில் புதிய இடம்

- முதற் கட்டமாக 40 பேர்ச்சஸ் காணி

by Rizwan Segu Mohideen
December 6, 2023 7:36 pm 0 comment

– 150 வருடத்தை கொண்டாடும் சட்டக்கல்லூரி 3 ஜனாதிபதிகளை உருவாக்கியுள்ளது

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (06) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அதற்கான இணக்கத்தை தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் 150 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடவிருக்கும் சட்டக்கல்லூரி 3 ஜனாதிபதிகளை உருவாக்கியுள்ளது எனவும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியொன்றை சட்ட கல்லூரிக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சட்டக் கல்லூரியின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அவசியமான திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் முதற் கட்டமாக 40 பேர்ச்சஸ் காணியை ஒதுக்குமாறும், திட்டத்துக்கு அவசியமான மேலதிக இடப்பரப்பை நீதி அமைச்சுடன் கலந்தாலோசித்த பின்னர் பெற்றுக்கொடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

இங்கு கருத்து தெரிவித்த சட்டக்கல்லூரி அதிபர் கலாநிதி. அதுல பதிநாயக்க 150 வருடங்கள் பூர்த்தியாகும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க ஒரு துண்டு காணி கூட கிடைக்கவில்லை என்பதால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமைக்காக நன்றி கூறினார்.

இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், சட்டக்கல்லூரி மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT