அரசியலமைப்பு வரம்பை மீற சபாநாயகர் முற்படக் கூடாது! | தினகரன்

அரசியலமைப்பு வரம்பை மீற சபாநாயகர் முற்படக் கூடாது!

நாட்டில் இன்று நிலவுகின்ற அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்ற சபாநாயகரின் தலையீடு காரணமாக அப்பதவிக்குரிய கௌரவம், அபிமானம் கேள்விக்குறியதாக ஆக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தோடு மட்டுப்படுத்த வேண்டிய அதிகாரங்களை சபாநாயகர் எல்லை தாண்டி பயன்படுத்த முற்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நீதித்துறை சார்ந்தோரும் இதே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றனர். பாராளுமன்றத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் சபாநாயகர் தன் அதிகாரங்களை வெளியேஎந்தச் சூழ்நிலையிலும் பயன்படுத்த முடியாது என்பதை முழுமையான ஆதாரங்களுடன் சட்டவல்லுநர்கள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளனர்.

எந்தவொரு தரப்பிடமும் பெரும்பான்மையைக் நிரூபிக்குமாறு சபாநாயகரால் பாராளுமன்றத்தில்தான் கேட்க முடியும். பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், சபாநாயகர் அவ்வாறு கோர முடியாது. அதேசமயம் ஜனாதிபதி தமக்கிருக்கும் அதிகாரத்துக்கமைய பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருக்கும் நிலையில், பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகரால் கோர முடியாது. அதற்கான எந்தவித உரிமையும் சபாநாயகருக்குக் கிடையாது.

அதேசமயம், சபாநாயகர் எந்த நிலையிலும் பக்கம் சார்ந்தவராக இயங்க முடியாது. ஒரு கட்சியின் மூலம் பாராளுமன்றத்துக்கு பிரேரிக்கப்பட்ட ஒருவர்தான் சபாநாயகராக தெரிவு செய்யப்படுவார். அவர் சபாநாயகர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிமிடத்திலிருந்து பொதுவானவராகவே நோக்கப்படுகின்றார். நீதித்துறையினரால் சுட்டிக்காட்டப்பட்டிருப்பது போன்று அவர் நடுநிலையாளராகவே(அம்பயர்) இருப்பார். அதிலிருந்து அவர் எந்த விதத்திலும் விலகிச் செயற்பட முடியாது.

சுதந்திர இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் எந்தவொரு சபாநாயகரும் தன்னிச்சையாகவோ, பக்கச்சார்புடனோ செயற்பட்டதற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் காண முடியாதுள்ளது. ஏதாவதொரு விடயத்தில் குறைபாடு காணப்படுவதாக அவர் உணர்வாரானால் அவரால் நிறைவேற்றதிகாரத்துக்குச் சவால் விடுக்க முடியாது. தனக்கு நியாயம் தேவையென அவர் கருதுவாரானால் நீதிமன்றத்தைத்தான் நாட முடியும். தன்னிச்சையாகவோ, அச்சுறுத்தும் விதத்திலோ அவர் இயங்க முடியாது. இதுதான் பாராளுமன்ற ஜனநாயக மரபாகும்.

கடந்த சில நாட்களாக நிலவுகின்ற அரசியல் பரபரப்பில் சபாநாயகர் தலையிட்டிருக்கவே கூடாது. தேவையெனக் கருதும் பட்சத்தில் ஜனாதிபதியிடம் ஆலோசனை பெற்றிருக்க முடியும். அவ்வாறான ஆலோசனையில் தமக்குத் திருப்தி ஏற்படாது போனால் நீதித்துறையை நாடியிருக்க வேண்டும். ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வை முன்கூட்டியே கூட்டுமாறு ஜனாதிபதியை கட்டாயப்படுத்தும் அதிகாரம் சபாநாயகருக்குக் கிடையாது.

இந்த விடயத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய மிதமிஞ்சிய விதத்தில் தலையிட்டதன் காரணமாக பாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவே நோக்க முடிகிறது. அது மட்டுமன்றி சபாநாயகருக்குரிய மகத்துவம் கூட பலவீனப்பட்டுப் போயுள்ளது. ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியிருப்பது போன்று, பலவீனப்பட்ட சபாநாயகராகவே அவரை நோக்க வேண்டியுள்ளது. பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாக இப்படிப்பட்ட அவப்பெயருக்குள் சபாநாயகர் தள்ளிவிடப்பட்டுள்ளார்.

அரசியலுக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையில் குழப்பங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு இருக்கவே செய்கின்றது. நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு விதிகள், ஷரத்துகளுக்கிடையில் அது முரண்பட்டிருப்பினும் ஒட்டுமொத்தமாக யாப்பை நோக்குகின்ற போது அந்த நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதை வெளிப்படையாகவே காண முடிகிறது.

பாராளுமன்றத்தின் அமர்வை மீளக்கூட்டுவதற்கு தீர்க்கமான நாளை நிர்ணயித்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தியிருக்கும் நிலையில், அதற்கு சவால் விடும் விதத்தில் முன்கூட்டி சபையைக் கூட்டுமாறு சபாநாயகரால் எந்த விதத்திலும் கட்டாயப்படுத்த முடியாது. அது சபாநாயகருக்குரிய கடப்பாடு அல்ல. பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது மீண்டும் கூடும் வரையில் சபாநாயகர் மௌனமாகவே இருக்க வேண்டும். இந்த விடயத்தில் சபாநாயகர் தனது அதிகார எல்லையை மீறிச் செயற்படுகின்றார் என்றே நோக்க வேண்டியுள்ளது.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு தரப்பினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சபாநாயகர் செயற்பட முன்வந்தமை அவரது நடுநிலை போக்குக்கு முற்றிலும் முரண்பட்டதொன்றாகும். இதன் காரணமாக ஜனநாயக விழுமியங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாராளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் பிழையான வழிகாட்டலாகவே இதனைக் கொள்ள வேண்டியுள்ளது. இதன் மூலம் நாடு ஜனநாயக நெறிமுறையிலிருந்து விலகிச் செல்லக் கூடிய அச்சமே உருவாகியுள்ளது.

அரசியலமைப்பில் குறிப்பிட்ட அளவில் தமது அதிகார எல்லைக்குள் செயற்படுவதை விடுத்து சபாநாயகர் எல்லை தாண்டி செல்ல முற்படுவதால் அப்பதவிக்கு அவர் பெரும் களங்கத்தையே ஏற்படுத்தியுள்ளார். நாட்டில் ஜனநாயகம் சீர்குலைவதற்கு அது ஒரு காரணியாக அமைந்து விடக் கூடாது. சபாநாயகர் தனது தன்னிச்சைப் போக்கைக் கைவிட வேண்டும். ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டிருக்கும் திகதியில் பாராளுமன்ற அமர்வு கூடும் போது இந்த விடயத்தை அரசியலமைப்புக்கு அமைவான வழியில் கையாண்டு பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க இடமளிக்க வேண்டுமென்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...