கருவுக்கு எதிராக ஆணைக்குழுவில் ஊழல் முறைப்பாடு | தினகரன்

கருவுக்கு எதிராக ஆணைக்குழுவில் ஊழல் முறைப்பாடு

தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சபாநாயகர் கரு ஜயசூரிய தமது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென குறிப்பிட்டு சபாநாயகருக்கு எதிராக தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தினர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஏற்றுக்கொண்டு அறிக்கையொற்றை விடுத்ததன் மூலம் சபாநாயகர் தமது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இதன்மூலம் இலஞ்ச, ஊழல் விசாரணை சட்டத்தில் 70ஆவது ஷரத்தை அவர் மீறி செயற்பட்டுள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று கருத்துத் தெரிவித்த திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீடாதிபதி கலாநிதி ராஜா குணரட்ண,

எவரேனும் அரச அதிகாரியொருவர் தமது பதவிக்குரிய அதிகாரத்தை உபயோகித்து ஒரு நபருக்கு ஏதாவது இலாபம் பெறும் வகையில் செயற்படுவாராயின் அது தமது பதவியை ஊழலுக்கு உட்படுத்துவதாக இலஞ்ச ஊழல் விசாரணை சட்டத்தின் 70 ஷரத்தின் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய குற்றமொன்றுக்காக ஆகக் குறைந்தது 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சிறப்புரிமை சட்டத்தின் குற்றங்கள் தொடர்பான 2ஆவது ஷரத்துக்கு இணங்க பாராளுமன்றத்தில் சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஜனாதிபதியின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் எனவுள்ளது. ஆனால் சபாநாயகர் அதனை மீறிச் செயற்பட்டுள்ளார். இதற்கிணங்க இலஞ்ச, ஊழல் விசாரணைச் சட்டத்தின் 70 ஆவது ஷரத்தின் கீ்ழ் சபாநாயகர் தமது பதவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றத்துக்கு ஆளாகியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள விரிவுரையாளர் சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் வண்ணஜயசுமன, கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பில் எமக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமென சங்கத்துடன் தொடர்புடைய சட்ட பீட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிரகாரம் நாம் இந்த முறைப்பாட்டை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினருக்கு ஒப்படைத்தோம்.

சபாநாயகர் சில தினங்களுக்குள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டமை எத்தகைய காரணத்தை கொண்டது என்பது தொடர்பில் சிக்கல் எமக்கிருக்கிறது. ஒரு தரப்பினரால் அவருக்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதா? அப்படியில்லாவிட்டால் அவரை சிறைப்படுத்திக் கொண்டு பலவந்தமாக இதனை செய்வதற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு முயற்சியா? என்றும் சிந்திக்கவேண்டியுள்ளது.

அப்படியில்லாவிட்டால் இலாபத்தை நோக்கமாக இதனைச் செய்கின்றாரா? என்பது தெரியவில்லை. வயது முதிர்ந்த நிலையில் மானசீகமாக பாதிக்கப்பட்டு்ள்ளாரா? என்றுகூட எங்களால் சிந்திக்க வேண்டியுள்ளது. எவ்வாறாக இருந்த போதிலும் இத்தகைய பரஸ்பரம் முரண்பட்ட அறிக்கையானது நாட்டின் அரசியலமைப்புக்கும், சம்பிரதாயத்துக்கும், ஒழுக்க விழுமியத்துக்கும், பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளுக்கும் விரோதமானதாகும். எனவே மிக விரைவாக இதனை விசாரணைக்கெடுத்து சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் தேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் மாதுலுவே கம்மிஸ்ஸர தேரர், திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் நெம்சிறி ஜயதிலக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். (!ஸ)


Add new comment

Or log in with...