Friday, March 29, 2024
Home » பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கும் சுற்றுலாத் துறை

பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கும் சுற்றுலாத் துறை

by sachintha
December 7, 2023 6:00 am 0 comment

சுற்றுலாத் துறையினரைப் பெரிதும் கவர்ந்திழுக்கக் கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இந்நாடு, நாலாபுறமும் கடலால் சூழப்பட்டிருக்கிறது. அதேநேரம் எழில்மிகு கடற்கரைகளையும் கண்கவர் நீர்வீழ்ச்சிகளையும் நீர்த்தேக்கங்களையும் இயற்கை வனங்களையும் இயக்கையாகவே பெற்றுக் கொண்டுள்ள இந்நாடுவருடத்தின் 365 நாட்களும் சிறந்த சீதோஷண நிலையையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

நீண்ட வரலாற்று பாரம்பரித்திற்கு உரிமை கொண்டாடும் இந்நாடு, ஆரம்ப காலம் முதல் விவசாயப் பொருளாதார நாடாகத் திகழுகிறது. இந்த நிலையில் தனித்துவம் மிக்க நீர்வள நாகரிகத்தை கட்டியெழுப்பிய பெருமையையும் பெற்றுக் கொண்டிருக்கின்றது இந்தத் தேசம்.

இவ்வாறு உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய பல்வேறு வளங்களையும் இயற்கையாகவே இந்நாடு பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில்தான், இலங்கையைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு உல்லாசப் பயணத்துறையைப் பெரிதும் பயன்படுத்திக் கொள்ள முடியும்’ எனப் பொருளதாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அது முற்றிலும் உண்மையான கூற்றாகும். உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையில் அமையப் பெற்றுள்ள வளங்களை ஒழுங்குமுறையாகவும் திட்டமிட்ட அடிப்படையிலும் பயன்படுத்த வேண்டும். அதன் ஊடாக பெருமளவிலான அந்நிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அது நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பவதற்கு பாரிய பங்களிக்கும் துறையாக மாறும்.

இந்நாட்டின் உல்லாசப் பயணத்துறையை பொருளாதாரத்திற்கு மேலும் பங்களிக்கும் வகையில் மேம்படுத்த வேண்டிய தேவையும் காணப்படவே செய்கிறது.

அதேநேரம் கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் இந்நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. அதன் விளைவாக நாட்டில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் கொதிநிலையின் பின்புலத்தில் உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்தது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெறும் 29 ஆயிரத்து 802 உல்லாசப் பயணிகள் மாத்திரம்தான் இந்நாட்டுக்கு வருகை தந்தனர். அவ்வருடம் இந்நாட்டுக்கு வருகை தந்த மொத்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையே வெறும் 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 ஆகும்.

பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளான நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடத்தின் ஜுலை மாதத்தின் பின்னர் விரிவான அடிப்படையில் ஆரம்பித்தார். அத்திட்டங்கள் குறுகிய காலப்பகுதி முதல் பயனளிக்கத் தொடங்கின.

அதன் விளைவாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இந்நாட்டுக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் மாதா மாதம் அதிகரிப்பு ஏற்படத் தொடங்கியது. இதற்கேற்ப இவ்வருடம் ஜனவரி முதல் ஒவ்வொரு மாதமும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவ்வருடத்தின் மே மாதம் தவிர்ந்த எல்லா மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இவ்வாறான அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது. இதனை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதன்படி இவ்வருடத்தின் இற்றை வரையான காலப்பகுதியில் இந்நாட்டுக்கு அதிகூடிய எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக நவம்பர் பதிவாகியுள்ளது. இம்மாதத்தில் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 496 உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இவ்வருடத்தின் முதல் 11 மாதங்களிலும் 13 இலட்சம் உல்லாசப் பயணிகள் வருகை தந்திருப்பதாகவும் அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே இவ்வருடம் நிறைவடையும் போது கடந்த வருடத்தை விடவும் இரு மடங்கு உல்லாசப் பயணிகள் வருகை தந்த ஆண்டாக இவ்வருடம் பதிவாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனால் இந்நாட்டின் சுற்றுலாத்துறையை நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் வகையில் கட்டியெழுப்புவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கேற்ப சுற்றுலாத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும். அதன் ஊடாகபுதிய தொழில்வாய்ப்புக்கள் உருவாகும். அது வேலையின்மையைக் குறைக்க உதவும் துறையாகவும் மாறும். அப்போது இந்நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்கு பங்களிக்கும் முக்கிய துறையாக சுற்றுலாத்துறை திகழும் என உறுதிப்படக்கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT