ஓட்டுநரின்றி சென்ற ரயில் தடம்புரளச் செய்து நிறுத்தம் | தினகரன்

ஓட்டுநரின்றி சென்ற ரயில் தடம்புரளச் செய்து நிறுத்தம்

அவுஸ்திரேலியாவில் ஓட்டுநரில்லாமல் விரைந்து சென்ற ரயில் ஒன்று தொலைவிலிருந்து தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது.

இரும்புத் தாது அந்தச் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டிருந்தது. 268 பெட்டிகளைக் கொண்ட அந்தச் சரக்கு ரயில் மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் சுமார் 1 மணி நேரம் ஓட்டுநரில்லாமல் சென்றது.

சுரங்க நிறுவனமான பி.எச்.பியுக்கு சொந்தமான அந்த ரயில் தடம் புரண்டதில் சுமார் 1,500 மீற்றர் ரயில் தண்டவாளம் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

ஓட்டுநரில்லா ரயிலால் விபத்து நேரக்கூடுமென அஞ்சிய நிறுவனம், வேண்டுமென்றே ரயில் தண்டவாளத்தில் மாற்றம் செய்து ரயிலைத் தடம் புரளச் செய்தது.

2 கிலோமீற்றர் நீளமுள்ள ரயிலின் ஒரு பெட்டியைச் சோதனை செய்ய ஓட்டுநர் வண்டியிலிருந்து இறங்கியபோது அவரில்லாமலேயே ரயில் நகர ஆரம்பித்துள்ளது. ஓட்டுநரில்லாமல் ரயில் எப்படி நகர்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...