பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி வெற்றி; டிரம்புக்கு பின்னடைவூ | தினகரன்

பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி வெற்றி; டிரம்புக்கு பின்னடைவூ

அமெரிக்காவில் இடம்பெற்ற இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை இடங்களை வென்றிருப்பது குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக கட்சியினர் அமெரிக்க கொங்கிரஸின் கீழ் சபையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது கடந்த எட்டு ஆண்டுகளில் இது முதல்முறையாகும். இது பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் டிரம்பின் குடியரசு கட்சியனர் செனட் சபையில் தமது பிடியை இறுக்கியுள்ளனர்.

அமெரிக்க கொங்கிரஸ் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டதாகும்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமெரிக்க இடைக்கால தேர்தல் ஜனாதிபதி டிரம்புக்கு தீர்க்கமானதாக இருந்தது. இதுவரையான அவரது பதவிக்காலம் மற்றும் அவரது எதிர்கால திட்டங்களை தீர்மானிப்பதாக இந்த தேர்தல் கருதப்பட்டது.

எனினும் வெள்ளை மாளிகையில் இல்லாத கட்சி இடைக்கால தேர்தலில் வெற்றிபெறும் வரலாற்று பாணியை உறுதி செய்வதாகவே தேர்தல் முடிவுகள் உள்ளன. எனினும் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும்போது, பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்துவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிகம் நடந்திராத ஒன்றாகும்.

பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி தலைவியும் தற்போது சமாநாயனர் பதவிக்கான வாய்ப்பை பெற்றிருப்பவருமான நான்சி பெலோசி, “அனைவருக்கும் நன்றி, நாளை அமெரிக்காவின் புதிய நாளாகும்” என்று வொஷிங்டனில் ஆதரவாளர்கள் முன் குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மும்முரமாக பிரசாரம் செய்தார். “வாக்குச்சீட்டில் எமது நாட்டின் பண்பு தங்கியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். “எமது வாழ்வில் மிக முக்கியமான ஒரு தேர்தலாக இது இருக்கக் கூடும்” என்று அவர் ட்விட்டர் ஊடே குறிப்பிட்டிருந்தார்.

எனினும் செனட் சபை பற்றி கவனம் செலுத்தி இருக்கும் டிரம்ப், அங்கு பெற்ற வெற்றியை பெருமையுடன் ட்விட்டரில் சிலாகித்துள்ளார்.

பிரதிநிதிகள் சபையில் 435 ஆசனங்களுக்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதோடு இதில் ஜனநாயக கட்சியினர் 23 இடங்களுக்கு மேல் அதிக ஆசனங்களை வென்றுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம், டிரம்பின் ஆட்சியின் மீதுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து ஜனநாயக கட்சியால் விசாரணைகளை மேற்கொள்ள இயலும்.

அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள குடியேற்ற கொள்கை, வரி விதிப்பு, அமெரிக்க–மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது போன்ற பல்வேறு விவகாரங்களில் ஜனாதிபதி டிரம்பிற்கெதிரான தாக்குதலை ஜனநாயக கட்சி தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கொண்டுவந்த ஒபாமா கேர் எனப்படும் மருத்துவ காப்பீடு திட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய குடியுரிமை கொள்கை போன்வற்றை அமல்படுத்துவதில் டிரம்ப் நெருக்கடிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி பிரதிநிதிகள் சபையில் என்ன சட்டமூலங்கள் வைக்கப்படுகின்றன என்பது ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். இந்த புதிய கட்டுப்பாட்டால், ஜனாதிபதி டிரம்ப் சட்டபூர்வமாக முன்னிறுத்தும் சில சட்டமூலங்கள் தடைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் சாத்தியமான வர்த்தக முரண்பாடுகளை விசாரிக்கவும் 2016இல் ரஷ்யாவுடன் அவரது தேர்தல் பிரசாரத் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் ஜனநாயகக் கட்சியால் இனி முடியும். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் அதிகளவிலான பெண்கள் போட்டியிட்டுள்ளனர். இதுவரை வந்த முடிவுகளின்படி ஜனநாயக கட்சியை சேர்ந்த 80 பெண்களும், குடியரசு கட்சியைச் சேர்ந்த 12 பேரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜனநாயக கட்சியின் 29 வயதான அலெக்சாண்ட்ரியா ஒகாசியொ மற்றும் அபி பின்க்ரோர் பிரதிநிதிகள் சபைக்கு தெரிவான இளம் பெண்களாக பதிவாகியுள்ளனர்.

அதேபோன்று ராஷிதா தலைப் மற்றும் இல்ஹான் ஒல்மார் கொங்கிரஸ் சபைக்கு தெரிவான முதல் முஸ்லிம் பெண்களாகவும் ஷரிஸ் டேவிட்ஸ் மற்றும் டெப்ரா ஹாலண்ட் முதல் லத்தீன் அமெரிக்க பெண்களாகவும் பதிவாகினர்.

எனினும் 100 ஆசனங்கள் கொண்ட செனட் சபையில் குடியரசு கட்சி தனது ஆசனங்களை 51 இல் இருந்து 54 ஆதகரித்துக் கொண்டுள்ளது. இதன்மூலம் டிரம்ப் தனது நிறைவேற்று மற்றும் நீதித்துறையில் மேற்கொள்ளும் நியமனங்களை உறுதி செய்ய அவருக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி டிரம்ப், “இன்றிரவு மிகப்பெரிய வெற்றி. அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...