இலங்கை வரலாற்றில் இவ்வாறான சபாநாயகரை நான் கண்டதில்லை! | தினகரன்


இலங்கை வரலாற்றில் இவ்வாறான சபாநாயகரை நான் கண்டதில்லை!

இலங்கை வரலாற்றில் இவ்வாறான சபாநாயகரை நான் கண்டதில்லை!

 'இப்படிப்பட்ட பலவீனமான சபாநாயகர் ஒருவரை வாழ்நாளில் கண்டதே இல்லை' என்கிறார் ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

கேள்வி: - ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் விருப்புவாக்குகளைப் பெற்ற நீங்கள் 2001ம் ஆண்டில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினீர்கள். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சரவை அல்லாத அமைச்சுப் பதவி உங்களுக்கு வழங்கப்பட்டது. அன்று முதல் 17 வருடங்களின் பின்னர் இந்த அரசாங்கத்தில் உங்களுக்கு அமைச்சரவை அல்லாத அமைச்சுப் பதவி கிடைத்திருக்கின்றது. இப்போது என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: - இது ஒரு சிறப்புக்குரிய நிலை. இந்நிலையினுள் பல பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. உண்மையில் இது மிகவும் தற்காலிகமானது என்றே நான் நினைக்கின்றேன். நாட்டின் தற்போதைய நிலையினுள் சர்வதேச ஊடகங்களின் செயற்பாடுகள் தற்போதைய அரசாங்கத்திற்கு பாதிப்பானதாக அமைந்துள்ளன. எனவே அந்த பாதிப்பான நிலையினை நீக்குவதற்காகச் செய்யப்பட்ட தற்காலிக வேலைத்திட்டமே இது. நான் முன்னர் அரசாங்கங்களில் பல அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கின்றேன்.

இவ்வாறான நிலையின் அடிப்படையில் ஏற்படும் சிலசில குழப்பங்களைத் தடுப்பதற்கே இச்சந்தர்ப்பத்தில் ஏற்பட்டுள்ள தேவைக்கு அமைய ஜனாதிபதி எனக்கு இந்த அமைச்சுப் பதவியைத் தந்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு, ஊடகம் மற்றும் நிதி போன்றன மிகவும் முக்கியமான அமைச்சுக்களாகும். எனவே நான் என்ன செய்தேன் என்பதை விட என்னால் என்ன செய்ய முடியும்?, அதன் ஊடாக எந்தளவுக்கு நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்? என்பதே முக்கியமானதாகும்.

கேள்வி: - புதுமையான வகையில் நாட்டில் கட்சித் தாவல் அன்றாடம் இடம்பெறும் ஒன்றாக உள்ளது. இந்த கட்சி மற்றும் நிறத்தை மாற்றுவது தொடர்பில் உங்களது கருத்து என்ன?

பதில்: - இது தொடர்பில் தெளிவாகக் கூற வேண்டியிருப்பது என்னவெனில் கட்சி மாறுவது அல்ல, கட்சி மாறுவதன் தன்மையே முக்கியமானதாகும். ஏதேனும் நோக்கங்களுக்காக தான் இருக்கும் அரசியல் நிலையிலிருந்து மாறுவது பிரச்சினையல்ல. காரணம் கட்சியின் கொள்கை மாறுகின்றது. மேற்கொள்ளும் தீர்மானங்கள் காலத்திற்கு காலம் மாறுபடும். பச்சை நிறம், நீல நிறம், சிகப்பு நிறம் என்று மாறுவதல்ல, ஒரு நோக்கத்திற்காக நாட்டைப் பற்றிச் சிந்தித்து மக்களைப் பற்றிச் சிந்தித்து கட்சி மாறுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை.

எவ்வாறாயினும் நாம் இறுதியில் மக்களுக்கே கட்டுப்பட்டிருக்கின்றோம். 2015ம் ஆண்டில் நாட்டைப் பொறுப்பேற்ற போது அந்த அரசாங்கம் இவ்வாறு தேசியவாதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும், தேசிய வளங்களை விற்கும் என எவரும் நினைக்கவில்லை. இவ்வாறு செய்யக் கூடாது. இவ்வாறு செய்வதால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்டும் கட்சிக்காகப் பொறுத்துக் கொண்டிருந்தவர்களும் இருக்கின்றார்கள். எனினும் நேரத்திற்கு ஏற்ப நியாயமான தீர்மானங்களை மேற்கொள்வது அவரவர்களின் உரிமையாகும்.

கேள்வி: - தலைகளை மாற்றி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் நீங்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கின்றீர்கள்?

பதில்: - அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்குத் தலைகள் தேவையே. தலைகள் இல்லாமல் அரசாங்கத்தை அமைக்க முடியாது. அது அத்தியாவசியமாகும். முன்னைய அரசாங்கம் தேசிய வளங்களை சொற்ப பணத்திற்காக விற்பதாயின், தேவையற்ற வகையில் அரசியலமைப்பை மாற்றுவதாயின், அதன் ஊடாக நாடு பாதிப்புக்களுக்கு உள்ளாகுமாயின் அந்த அரசாங்கம் அதிகாரத்தில் இருப்பதை விட ஜனநாயம் என்ற வரையறைக்குள் இருந்து கொண்டு செயற்படுகின்றதா என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தலைகள் மாறுவதால் நாட்டுக்கு நல்லது நடக்குமாயின் நாட்டு மக்களுக்கு நல்லது நடக்குமாயின் அது தவறானது என நான் நினைக்கவில்லை.

கேள்வி: - இச்சந்தர்ப்பத்தில் சபாநாயகரின் செயற்பாடுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: - நான் கண்ட பலவீனமான, கட்சி சார்பான சபாநாயகரே இவர். இலங்கை வரலாற்றில் இவ்வாறான ஒரு சபாநாயகரை நான் கண்டதில்லை. பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துள்ளதாக ஜனாதிபதி வர்த்தமாணியில் அறிவித்திருக்கும் போது இல்லை, பாராளுமன்றம் இந்த தினத்தில் கூட வேண்டும் என அவர் கூறுகின்றார்.

அதன் பின்னர் இதற்கு வேறு தினம் ஒன்றைக் கூறுகின்றார். அதே போன்று ஜனாதிபதி அவரோடு பேசும் போது பிரதமருக்கு பாராளுமன்றத்தில் அனைத்தும் தயார், அவரது அலுவலகமும் தயார் என்று கூறிவிட்டு மறுபக்கத்தில் வேறு ஒன்றைக் கூறுகின்றார். இதனால்தான் கூறுகின்றேன் அவர் மிகவும் பலவீனமான ஒரு சபாநாயகர் என்று.

கேள்வி: - பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்க்கமான தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி 14ம் திகதி என அறிவித்திருக்கின்றார். சபாநாயர் வேறு தினத்தைக் கூறுகின்றார். இது குழப்பமான ஒன்றுதானே?

பதில்: - அரசியலமைப்புக்கும், நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் குழப்பங்கள் இருக்குமாயின் அது நீதிமன்றத்திலேயே தீர்க்கப்பட வேண்டும். நாமும் அதனையே கூறுகின்றோம். எனினும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு என்ன என்பதை அவர்கள் அறிவார்கள்.

மக்கள் இறையாண்மையோடு செயற்படும் போது அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்று துறைகளும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்றுள்ளது. அரசியலமைப்புக்கும், நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் குழப்பங்கள் இருக்குமாயின் அதற்கான தீர்வு அரசியலமைப்பில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் உள்ள பிரச்சினை பாராளுமன்றத்தை ஒத்தி வைத்ததுதான் என்றால் அந்த உரிமை நாட்டின் நிறைவேற்று அதிகாரத்திற்கு உள்ளது. அதாவது ஜனாதிபதிக்கு உள்ளது. சபாநாயகர் அரசியலமைப்பைப் பார்க்காமல்தான் இவ்வாறான விடயங்களைக் கூறுகின்றார்.

கேள்வி: - சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கூட்டம் ஒன்றின் போது ஏழு மாதங்களினுள் மூன்று பேருக்கு பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு கூறியதாக ஜனாதிபதி கூறினார். அவருக்கு ஏழு மாதங்களினுள் மூன்று பேரிடம் அந்தளவு நம்பிக்கை எவ்வாறு உண்டானது?

பதில்: - இது மிகவும் இலகுவானது. அதற்கான பதிலை ஜனாதிபதி அவரது பேச்சிலேயே கூறினார். பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் கிடைத்த பெரும்பான்மையினை அறிந்து கொண்டதாக ஜனாதிபதி கூறினார். எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் வேலைத்திட்டங்கள் பொருளாதாரத்தை பின்னடையச் செய்யும் வேலைத்திட்டங்கள் என்பதாலேயே அவர் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டார். அந்நிலையினைப் புரிந்து கொண்டு அவர் நன்றி மறக்காமல் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்பை வழங்க வேண்டும் எனத் தீர்மானித்ததாகக் கூறினார். எனவே அவர் அந்த தீர்மானங்கள் அனைத்தையும் மேற்கொண்டது மிகவும் நிலையான மற்றும் நியாயமான அடிப்படையின் கீழேயாகும் எனக் கூற முடியும்.

கேள்வி: - தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் மூன்றாவது தெரிவாக இருந்ததாகவும், இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு இது அந்தளவுக்கு நல்லதல்ல என்றும் சிலர் கூறுகின்றனரே...

பதில்: - அது நல்லதில்லைதான். எனினும் அதற்கு ஜனாதிபதியே பதிலை வழங்கியிருக்கின்றார். ஐக்கிய தேசிய கட்சிக்கு இரண்டு தடவைகள் சந்தர்ப்பத்தை வழங்கியதாக அவர் கூறுகின்றார். எனினும் மஹிந்த ராஜபக்ஷ என்பவர் அந்த அனைவரையும் புரட்டிக் கொண்டு செல்லக் கூடிய ஒருவர் என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொள்கின்றார்.

ஜனாதிபதியின் அன்றைய உரையில் 'நாட்டின் தேசியவாதத்தை மதிக்கும், கலாசாரத்தை அறியும், நாட்டை நேசிக்கும், ஜனநாயக ரீதியில் என்னோடு பயணிக்கக் கூடிய, எனக்குப் பொருத்தமான ஒருவரை நான் தேடினேன். பிரதமர் பதவியை கரு ஜயசூரிய வேண்டாம் என்றார். சஜித் பிரேமதாசவும் பிரதமர் பதவியை பொறுப்பேற்க முடியாது எனக் கூறி விட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவோடு மோத முடியாது என சஜித் கூறிய, கரு ஜயசூரிய கூறிய பிரதமர் பதவி ரணிலோடு மோதுவதற்கல்ல, ரணிலை புரட்டிப் போட்டுவிட்டுச் செல்லக் கூடிய மஹிந்த ராஜபக்ஷவை நான் பிரதமராக்கினேன்' எனக் கூறினார். எனவேதான் அந்த பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டார்.

கேள்வி: - அரசியலமைப்பு எந்தளவு செல்லுபடியாக இருந்தாலும் குறைபாடுள்ள, முழு நாடும் விமர்சிக்கும் அரசியலமைப்பு ஏன் மாற்றப்படாதுள்ளது?

பதில்: - 19வது அரசியலமைப்புத் திருத்தம் என்பது மிகவும் அவசரமாக, ஓரிருவரின் தேவையின் பிரகாரம் சர்வதேசத்தின் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட ஒரு பேப்பராகும். அதற்கு நாமும் கைகளை உயர்த்தினோம். அதற்கு நாமும் பொறுப்புக் கூற வேண்டும். அந்த சந்தர்ப்பத்தில் நாடு மிகவும் அராஜக நிலையில் இருந்தது. வேறு மாற்றுவழிகள் இல்லாமையால் நாமும் அதற்கு இணங்கினோம். எனினும் இதனைத் திருத்திக் கொள்ள வேண்டியது அனைவரதும் பொறுப்பு என நான் காண்கின்றேன்.

கேள்வி: - ஊடகப் பயன்பாடு தொடர்பில் பல்வேறு காலகட்டங்களில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. புதிய அரசாங்கத்தின் மீதும் குற்றச்சாட்டுக்கள் வரத் தொடங்கியுள்ளதே...

பதில்: - ஊடகத்துறையில் சில போக்குகள் ஏற்பட வேண்டும். ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் உறவைப் பேணிக் கொள்வதற்கு அரச ஊடகங்களுக்குப் பொறுப்பிருக்கின்றது. அதனை மிகவும் நேர்மையாக முன்னெடுக்க வேண்டும். அது 40 வீதமாக இருக்க வேண்டும்.

சில அரச ஊடகங்கள் அந்த உறவை 100 வீதம் நிறைவேற்றப் போய் தமது வாசகர்கள், நேயர்களை இழந்திருக்கின்றன. ஊடகத்திற்கு முக்கியமாவது வாசகர்களாகும். வாசகர்களின் நம்பிக்கை இல்லாமல் போனால் அந்த ஊடகத்தின் இருப்பு கேள்விக்குறியாகி விடும். மக்கள் பத்திரிகைகளைப் பார்க்காவிட்டால் தொலைக்காட்சி அல்லது வானொலியைச் சுற்றி உட்காராவிட்டால் அந்த ஊடகத்தினால் பலனில்லை.

கேள்வி: - தற்போதைய ஊடகவியலின் திசை எவ்வாறு அமைய வேண்டும்?

பதில்: - ஊடகவியலாளர்கள் இதனை விடவும் தொழிற்துறை மட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஊடகவியலாளர்களுக்கு கற்றுக் கொள்வதில் எல்லைகள் இருக்கக் கூடாது. ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமல்ல, அனைத்து பிரஜைகளுக்கும் இது பொருந்தும். ஊடகவியலாளர்களுக்கு இதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

எமது காலத்தில் கடன் வசதிகள் மூலம் பல்வேறு செயலமர்வுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஊடாக அந்த வசதிகளை வழங்கியிருக்கின்றோம். அடிக்கடி ஊடகவியலாளர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இன்று காணப்படும் நவீன ஊடகம், சமூக ஊடகங்களோடு மக்கள் எப்போதும் தொடர்பில் இருப்பதால் இதனால் ஊடகத்தினால் பெரும் போட்டியை வழங்க நேரிடுகின்றது.

இதன் காரணமாக ஊடகவியலாளர்கள் நவீனமடைய வேண்டும். ஆக்கத்திறன் மிக்கவர்களாக ஆக வேண்டும். அதே போன்று சமூக ஊடகங்கள் போன்றன எவ்வாறான விடயங்களைக் கூறினாலும் அவற்றைச் சரியான முறையில் தெரிந்து புரிந்து கொள்ள, அவற்றை விளங்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்க வேண்டும்.  

−நிர்மாணி பண்டாரநாயக்கா
(சிலுமின)
தமிழில்: -எம்.எஸ்.முஸப்பிர்
(புத்தளம் விஷேட நிருபர்)


Add new comment

Or log in with...