சாதனை சிகரங்களை தொட்ட மாபெரும் கலைஞன் கமல் | தினகரன்


சாதனை சிகரங்களை தொட்ட மாபெரும் கலைஞன் கமல்

கமல் என்ற மாபெரும் கலைஞனுக்கு நேற்று வயது 64 . அவரது அரசியல் ஒருபுறம் இருக்கட்டும். அரசியலுக்கு அப்பால் கமலைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. நடிப்பு, இசை, இலக்கியம், நடனம் என்றெல்லாம் பல்வேறு துறைகளின் சிகரங்களைத் தொட்ட பெரும் கலைஞர் அவர்.

வயது செல்லச் செல்ல புதுமையை ஏற்றுக் கொள்ளத் திராணியற்று சினிமாத் துறையை விட்டு ஒதுங்கியோர் அதிகம் .

ஆனால் கமல் அவ்வாறானவர் அல்லர். புதுமைகள் அனைத்தையும் தனக்குள் புகுத்திக் கொண்டு என்றும் புதியவராக வலம் வருகிறார் கமல்.

இன்னும் இளமையாகிக் கொண்டே வருகிறார் அவர். ‘பிக் ​ெபாஸ்’ நிகழ்ச்சியின் பல சமயங்களில் அவர் சிரிக்கும்போது, ஏனோ, ‘களத்தூர் கண்ணம்மா’வில் ஜெமினிகணேசன் தூக்கிக் கொஞ்சும் காட்சியில் இருக்கும் சிரிப்புதான் நினைவுக்கு வரும்.

கமல் தன் கட்சியை ஆரம்பித்து ஆறு மாதங்களைக் கடந்து விட்டது. ஒரு Whistle Blower போல சில விஷயங்களை செய்தாலும், கமலுக்கு இன்னமும் அரசியல் என்பது கைகூடவில்லை. கொள்கை புத்தகம் கூட இன்னும் வெளிவரவில்லை, இப்போது முளைக்கும் காளான் கட்சிகளுக்கு அதெல்லாம் தேவையா என்கிற வாதத்தையும் முன்வைக்கலாம். ஆனால், எல்லாவற்றிலும் தன்னை முழுமையானவராகக் காட்டிக் கொள்ளும் ஒரு நபர் இதை எல்லாம் கவனிப்பார் என்றே நம்பலாம். கமல் இன்னும் களயதார்த்த அரசியலை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் பலர். ஊழல் என்பது ஒரு இடத்தில் மட்டுமே நிகழும் ஒரு பிரச்சினை அல்ல.

மேலும், அது மட்டுமே இங்கு பிரச்சினை அல்ல. 'நேர்மையான உணவு...எல்லோரும் சாப்பிடுங்கள்' என்றால், அதற்கு முதலில் உணவுக்குத் தேவையான பொருட்களை அதில் போட வேண்டும். நேர்மையை மட்டுமே உண்ண முடியாது. இலவசங்கள் தான் நாட்டை சுரண்டின. அரைவேக்காட்டுத்தன அரசியலைத்தான் தற்போது சில கட்சிகளும் வணிக ரீதியான படங்களும் சொல்லி வருகின்றன. கமலின் அரசியல் மேல் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன.சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகுபவர்களில் எத்தனை நடிகர்கள் பெரியவனாகி சோபிக்கிறார்கள் என்கிற எண்ணிக்கையை எடுத்துப் பார்த்தால், கமல் மட்டுமே தனித்து நிற்பார்.

 பதின்ம வயதில் அவருக்கும் ஹீரோவின் அண்ணன் (குறத்தி மகன்) போன்ற வேடங்கள்தான் கிடைத்தன. மலையாளக் கரையோரம்தான் கமலை முதலில் தனிநாயகனாக அறிமுகம் செய்தது. கலைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்தமைக்குக் கூட கேரளத் திரையுலகம்தான் விழா எடுத்து கௌரவித்தது.

தன் முதல் படத்தில் ஏவி.எம்மிடம் காரை சம்பளமாகக் கேட்டது முதல் கமலின் பல செய்கைகள் ஆச்சரியம்தான். ஏனோ இந்தக் கலைஞன் திரைக்குப் பின்னால் மட்டுமே இருந்திருந்தால், இன்னும் நிறைய நல்ல சினிமாக்கள் தமிழில் வந்திருக்குமோ என்கிற எண்ணம் எப்போதுமே இருந்ததுண்டு. காரணம் அவர் இயக்கிய ‘ஹே ராமு’ம்,‘விருமாண்டி’யும்.

அவர் திரைக்கதை எழுதும் அனைத்துப் படங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் முழுவடிவம் பெற்றிருக்கும்.

ஒரு புறம் தூக்குத் தண்டனை கூடாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யும் ‘விருமாண்டி’, மற்றொருபுறம் ‘தீவிரவாதிகளைச் சுட்டுத் தள்ளலாம்’ என்று சுபாஷ் சந்திரபோஸாக மாறும் சாதாரண மனிதன்.

‘விஸ்வரூபம்’ படத்தின் மீதோ, ‘ஹே ராமி’ன் மீதோ, ‘தேவர் மகனி’ன் மீதோ நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் திரைப்படமாக அவற்றுள் வரும் கதாபாத்திரங்கள் கதைக்கு நியாயம்தான் செய்திருக்கும்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பிலிருந்து இன்றுவரை, காங்கிரஸும் பாஜகவும் கைகோர்த்தது இல்லை. ஆனால்,அதையும் செய்ய வைத்தது கமலின் ‘ஹே ராம்’ திரைப்படம். கூட்டாக நின்று இரு கட்சியும் படத்தை தடை செய்ய போராடின. காந்தியைத் தவறாகச் சித்திரித்தது என்ற குற்றச்சாட்டு முதல் எண்ணற்ற சர்ச்சைகள். உண்மையில் காந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்திருக்க வேண்டும் எனப் பொதுமேடைகளில் பேசிய ஒரே நடிகர் கமல்தான். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும், குரல் கொடுத்தது தனி வரலாறு.

ஆனால், அவ்வளவு போராட்டங்களை மீறி வெளியான 'விக்ரம்' திரைப்படம் கமலை இரண்டாம் முறையாகப் பொருளாதாரத்தில் பூச்சியமாக்கியது. ஆனால், தன் படங்களின் தோல்வியின் போது ஒருமுறை கூட கமல் மக்களின் ரசனையைக் கேள்விக்கு உட்படுத்தியதே இல்லை.கமல் ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பர ​ெமாடலாக நடிக்கிறார் என்ற போதே, விமர்சனங்கள் பலவாறு எழுந்தன.அதை விட அதிகமாக, சின்னத்திரையில் பிக்​ெபாஸ் நிகழ்ச்சிய ஒருங்கிணைக்கும் போது வந்தது.

வாய்ப்புகள் குறைந்ததால், சின்னத்திரைக்குக் கமல் வந்து விட்டார் என்றது முதல், கமலின் செயற்கைத்தனம் அப்பட்டமாக இருக்கிறது என்றதுவரை எண்ணற்ற விமர்சனங்கள்...ஆனால், இதெல்லாம் இரு வாரங்கள் மட்டுமே.

மூன்றாவது வாரத்திலிருந்து, கமல் வரும் வார இறுதி நாட்களுக்காகவே ரசிகர்கள் காத்துக் கிடந்தார்கள். உண்மையில் பிக்​ெபாஸ் போன்ற நிகழ்ச்சி, கமலை பாமர ரசிகனிடமும் குடும்பங்களிடமும் கொண்டு சென்றது என்றால் அது மிகையல்ல.

ஆனந்த விகடனில் என்றோ படித்த நினைவு...சினிமாவுக்கு எந்தத் தொழில்நுட்பம் புதிதாக வந்தாலும் அதை முதலில் சென்று பார்ப்பதும், அதைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்துவதும் கமல்தான். புதிதாக வந்திறங்கிய ஒரு கருவியைக் காண இரவு முழுக்க காத்துக்கிடப்பதுதான், இந்த வயதிலும் கமலை அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற்றுகிறது.

கார்த்தி...


Add new comment

Or log in with...