வைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை | தினகரன்

வைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை

வைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை-Reconciliation-in-Economy

 

வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் சகவாழ்வு

இலங்கையில் மூன்ற தசாப்தங்களாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டம், இன வன்முறைகள், இன முரண்பாடுகள் எல்லாம் வைரமுத்து போன்ற ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த மனிதர்களையும் தங்களுடைய இனங்களுக்குள்ளே அவர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது.

வைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை-Reconciliation-in-Economy

“இங்கு வந்தாத்தான் அன்றைய நாளுக்கு எனக்குத் தொழில். எல்லா மீனும் இங்கே லாபத்துக்கு வாங்கலாம். முன்பெல்லாம் இங்கு நான் வந்ததில்லை. ஏதாவது செய்திடுவாங்க என்ற அச்சம் இருந்தது. இப்ப எந்த அச்சமும் இல்லாமலுக்கு நாங்களும் வாரம். அவங்களும் எங்கட பிரதேசத்துக்கு வந்து போகிறார்கள். இவ்வாறான சமாதான சூழ்நிலை இருக்கிறது எவ்வளவோ நல்லம். எல்லாரும் தொழில் செய்து வாழ்கையைக் கொண்டு போராங்க இல்லியா. இந்த நிலைமை தொடர்ந்து இருக்கணும் என்று தான் நான் பிரார்த்திக்கிறேன்.” என்று களுதாவளையைச் சேர்ந்த மீன் வியாபாரியான வைரமுத்து கூறினார்.

அம்பாறை மாவட்டம் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும் செறிந்து வாழும் மாவட்டமாகும். இங்குள்ள மக்கள் ஒவ்வொரு இனக் குழுமமாகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பிற இன மக்களோடு கலந்து பகிர்ந்து வாழ்வது இங்கு குறைவாகவே உள்ளது. அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படாமையே இதற்கான காரணமாகக் கொள்ள முடியும்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஆகிய கிராமங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களாகும். யுத்தகாலத்தில் தமிழ், சிங்கள மக்களின் தொடர்புகள் இங்கு குறைந்தே காணப்பட்டிருந்தது. இலங்கையில் ஆயுதப் போராட்டம் நிறைவுற்றாலும் மக்களிடையேயான உறவு தற்போது மெல்ல மெல்ல கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. அண்மைக் காலமாக மூவின மக்களும் தொழில் ரீதியாக வந்து போகும் பிரதேசங்களாக இவை மாறியுள்ளன. இங்கு மீன்களை கொள்வனவு செய்யும் இடமாகவும், அங்காடி வியாபாரிகள் தமது பொருட்களை வீதிகளில் போட்டு தொழில் செய்யும் இடமாகவும் மாறியுள்ளன். இங்கு வியாபாரத்தில் ஈடுபட வந்த வைரமுத்து போன்று நிறையப் பேர் தொழில் நிமித்தம் இங்கு வந்து செல்கின்றனர்.

வைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை-Reconciliation-in-Economy

“நான் யுத்தத்திற்குப் பிறகு 5 வருடங்களாக இங்கு வந்து தொழில் செய்கிறேன். வரும்போது மரக்கறிகளை கொண்டு வந்து இங்குள்ள வியாபாரிகளுக்குக் கொடுக்கின்றேன். போகும்போது மொத்தமாக மீன்களை வாங்கிச் சென்று எனது கிராமத்தில் விற்பனை செய்கிறேன். சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற எந்த இன வேறுபாடும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் இங்கு வந்து தொழில் செய்கிறேன். நான் ஒரு நாளைக்கு இங்கு வராவிட்டால் ஏதோ ஒன்று வாழ்கையில் குறைந்தது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. அவ்வாறு வேறுபாடில்லாமல் சந்தோசமாக இருக்கிறோம்” என்று கூறுகிறார் மொணராகலையைச் சேர்ந்த மீன் வியாபாரியான உபாலி ஆரியசிங்க.

வைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை-Reconciliation-in-Economy

பொருளாதார நடவடிக்கைகளுக்கு சகவாழ்வு என்பது மிக முக்கியமாகும். இவ்வாறு சகவாழ்வோடு மக்கள் வாழ்கின்ற போது எந்த இடத்திற்கும் சென்று மக்கள் தொழில் செய்து வாழ வாய்ப்பேற்படுகிறது. அந்த வாய்ப்பு உபாலி ஆரியசிங்க போன்றவர்களின் தொழில் நடவடிக்கைக்கு எவ்வாறு உதவியளிக்கிறது என்பதை நாம் கண்கூடாக காணமுடிகிறது. இவர் போன்று இந்த சகவாழ்வின் மூலம் நன்மை அடைபவர்களில் இன்னுமொருத்தர்தான் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த மீன் வியாபாரியான ஏ.டீ.ஏ. பாயிஸ். யுத்தத்தின் பிற்பாடு தாங்கள் சந்தோசமாக தொழில் செய்வதாக இவ்வாறு கூறுகிறார்:

“மாளிகைக்காடுத் துறையில் கிட்டத்தட்ட 40 மீன்வாடிகள் இருக்கின்றன. இவற்றில் மீன் வியாபாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு பல இடங்களிலிருந்தும் மீன்கள் கொண்டுவரப்படுகின்றன. இவற்றை வாங்குவதற்கு சிங்களம், தமிழ் மக்கள் என எல்லாரும் வருகின்றனர். நம்பிக்கையின் அடிப்படையில் கடனுக்குத் தான் அவர்களுக்கு நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். அவர்களும் நம்பிக்கையோடு அதைக் கொண்டு வந்து தருவார்கள். யுத்தத்திற்குப் பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தொழில் நடவடிக்கை போய்க் கொண்டிருக்கிறது.”

ஏ.டீ.ஏ. பாயிஸ் கடந்த யுத்தகாலத்தில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த ஒருவர். அவர் இப் பிரதேசத்தில் குடியேறி இன்று குடும்பமாக வாழ்கிறார். மிக நீண்ட காலமாக மீன் வியாபாரம் செய்யும் இவர் இப்பிரதேசத்தில் பிடிக்கப்படும் மீன்களையும் அதேபோன்று ஹம்பாந்தோட்டை, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் கொண்டுவரப்படும் மீன்களையும் வாங்கி மொத்தமாக, சிங்கள மற்றும் தமிழ் போன்ற மீன் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். அவர்களுக்கு கடனுக்கு மீன்களை வழங்கி பணம் அறவிடுகிறார் என்றால் இவர்களிடையே எந்தளவுக்கு சகவாழ்வு கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது என்பதை இங்கு காணமுடிகிறது.

வைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை-Reconciliation-in-Economy

“நான் மீன் வியாபாரம் செய்வதினூடாகத்தான் என் குடும்பத்தை வாழவைத்து வருகிறேன். இங்கிருந்து மீன்களை வாங்கிக் கொண்டு எமது பிரதேசத்தில் வியாபாரம் செய்வதற்கே இங்கு வருகின்றோம். முஸ்லிம் - சிங்களம் என்று எந்த வேறுபாடும் இல்லாமல்தான் வியாபாரம் செய்கிறோம். நாங்களும் அவர்களோடு அன்போடு நல்ல முறையில் நடந்து கொள்கிறோம். அவர்களும் எங்களுடன் வீண் பேச்சுக்கள் எதுவுமின்றி பண்போடும் வேற்றுமை இல்லாமலும் நடந்து கொள்கிறார்கள். இவ்வாறான மனிதர்களாக நாம் அனைவரும் இருக்க வேனும் என்று தான் எதிர்பார்க்கிறேன்.” என்று கூறுகிறார் திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்த மீன் வியாபாரியான சுசில் பிரியந்த.

இந்நாட்டில் தொழில் ரீதியாக பலர் பல்வேறு வகைகளில் தமது வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்கின்றனர். அதிலும் அன்றாடம் தொழில் செய்து தமது குடும்பத்தைக் காப்பாற்றுபவர்களுக்கு ஆரோக்கியமான சமூக சூழல் என்பது இன்றியமையாதது. அவ்வாறான மக்கள் தமக்கு தொழில் வாய்ப்பு எங்கு இருக்கிறதோ அங்கு சென்று தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வர். இவ்வாறு தொழில் புரிபவர்தான் சுசில் பிரியந்த. இவர் போன்று பலர் இத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு இன முரண்பாடுகளற்ற அமைதியான சூழல் அமைவது என்பது அவர்களது வாழ்வாதாரத்துக்கு எவ்வளவோ மிக முக்கியமானதாகும்.

இலங்கையில் சமூகம் ஒவ்வொன்றும் பரவலாகவும் குழுமமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந் நிலையில் ஒவ்வொரு சமூகமும் இன்னொரு சமூகத்தில் ஏதோவொன்றில் தங்கியிருக்கின்றன. அந்தந்த சமூகங்கள் தாம் வாழும் பிரதேசத்துக்கு ஏற்ப தொழில் வளங்களைக் கொண்டிருக்கின்றன. தொழில் பெறுவதற்காகவோ அல்லது தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்காகவோ அவர்கள் இன்னொரு சமூகத்தை நாடவேண்டியிருக்கிறது. அவர்கள் ஏனைய சமூகத்தோடு எப்படியும் உறவாட வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் கடந்த கால இன முரண்பாடும், யுத்தமும் அவர்களை பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளுக்குள் ஆளாக்கியிருக்கிறது. பிரியந்த போன்ற அன்றாட தொழில் புரிபவர்களின் ஆதங்கங்கள் அதை வெளிப்படுத்துகிறது.

வைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை-Reconciliation-in-Economy

“நான் அம்பாறை உஹனையைச் சேர்ந்தவன். எங்களுடைய கிராமத்தில் அறுவடை செய்யும் சோளகத்தை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறேன். முஸ்லிம், தமிழ் மக்கள் என்னிடம்; சோளம் வாங்க வருவார்கள். எனக்கு சிங்களம் மட்டும்தான் தெரியும். அதனால் எனக்கு இங்கு சிங்களம் தெரிந்த முஸ்லிம் நண்பர் ஒருவர் வியாபாரத்திற்கு உதவி செய்கிறார். அவர் தமிழில் கதைத்து என்னுடைய பொருட்களை விற்றுத் தருவார். என்னுடைய பிரதேசத்தில் நான் வியாபாரம் செய்வதை விட இங்கு விற்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. நான் கிழமைக்கு ஒரு முறை இங்கு வந்து வியாபாரம் செய்கிறேன். இந்த மக்களும் நான் தொழில் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.” என்று சோள வியாபாரியான சனே சேனாரத்ன கூறுகிறார்.

சிங்களம், தமிழ் என மொழி ரீதியாக சமூகங்கள் பிரிந்து காணப்பட்டாலும் அவர்களுக்கு பொருளாதாரத் தேவை என்பது பொதுவானதுதான். மொழி என்பது விடயங்களைப் புரிந்து கொள்வதற்கான ஊடகமாகவே காணப்படுகிறது. ஆனால் அது சமூகங்கள் பிரிந்து முரண்படும் ஒரு சாதனமாக அமைந்து விடக் கூடாது. இலங்கையில் மொழிப் பிரச்சினை பல உயிர்களையே காவு கொண்டு அமர்ந்து கிடக்கிறது.

மொழி தெரியாததை சேனாரத்ன ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை. அவர் தமது வியாபாரத்திற்குள்ள மொழித் தடையை சகோதர இன நண்பர் ஒருவரின் உதவியுடன் இலகுவாக்கியிருக்கிறார.; அதே போன்று ஏனைய இன மக்களோடு உறவாடுகிறார். அவர்களுடைய தேவையை நன்குணர்ந்து அதற்கான வசதிகளை செய்து கொடுக்கிறார். இவ்வாறு எல்லோரின் தேவையை உணர்ந்து செயற்படும்போது அங்கு மகிழ்ச்சியும், சந்தோசமும் மக்கள் மத்தியில் ஏற்படும் என்பது இங்குள்ளவர்களின் வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. 

வைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை-Reconciliation-in-Economy

“இந்த மாளிகைக்காடு பிரதேசத்தில் 49 வருடங்களாக இங்கே பிறந்து வாழ்ந்து வருகிறேன். இக் காலத்தில் பல இனக் கலவரங்களையும் வன்செயல்களையும் சந்தித்திருக்கிறேன். இதனால் எமது முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஏன் சிங்கள மக்களுக்கும் கூட பல பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அயல் கிராமமான காரைதீவு தமிழ் மக்கள் இங்கு வருவதற்கு அச்சப்படுவார்கள். அதேபோன்று முஸ்லிம் மக்கள் அங்கு போவதற்கு அச்சப்படுவார்கள். இந்த நிலைமைதான் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இன்று அந்த நிலைமை மாறி நாட்டின் பல பாகங்களிலிருந்து எல்லோரும் மீன்கள் மற்றும் பொருட்களை கொணர்ந்து இங்கு விநியோகிக்கிறார்கள். அதனை சிங்கள மக்களும் தமிழ் மக்களும் எந்தவித அச்சமும் தயக்கமும் இல்லாமல் சில்லறையாகவும் மொத்தமாகவும் வாங்கிச் செல்வதைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. என்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் வியாபாரியும், அந்நூர் ஜும்மாப் பள்ளித் தலைவருமான ஏ. பௌஸர்.

அம்பாறை மாவட்டம் 1989, 1990 ஆகிய ஆண்டுகளில் தமிழ் - முஸ்லிம் கலவரங்களை சந்தித்திருக்கிறது. யுத்தத்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் சிங்களம் - முஸ்லிம் முரண்பாடும் இம் மாவட்டத்தில் ஏற்பட்டது. கடந்த காலங்களில் யுத்தத்தால் இம் மாவட்டத்திலுள்ள மூவின மக்களும் கனிசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் உயிர் உடமை என அனைத்தையும் இழந்திருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் இவற்றையெல்லாம் கடந்து ஒற்றுமையாக வாழ்வதற்கான நகர்வை இம் மக்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.

அம்பாறை மாவட்டம் மூவின மக்கள்; வாழும் சக வாழ்வை அத்தியவசியமாக ஏற்படுத்த வேண்டிய மாவட்டமாகும். யுத்தம் நிறைவுற்றாலும் இன்னும் மக்களிடையே உறவாடும் நிலையில் பூரணத்துவம் காணப்படவில்லை. அதற்கான சந்தர்பங்கள் ஏற்படுத்தப் படுவதுதான் இங்கு முக்கியமானவையாகும். பௌஸர் போன்றவர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கிறது. நிலையான சமாதானம் ஏற்பட வேண்டும் என்பது அவருடையது மட்டுமல்ல அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

(ஏ. மொஹம்மட் பாயிஸ்)

 


Add new comment

Or log in with...