வங்கக்கடலில் மற்றுமொரு தாழமுக்கம்; அடுத்த 48 மணி நேரத்தில் கடும் மழை | தினகரன்

வங்கக்கடலில் மற்றுமொரு தாழமுக்கம்; அடுத்த 48 மணி நேரத்தில் கடும் மழை

இலங்கையை அண்மித்த, தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை -குமரிக்கடல் இடையே இன்று வியாழக்கிழமை (8) கரையை கடக்கக் கூடும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று வியாழக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவே மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுளது. இந்தப் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும்.

வடக்கு, வட மத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சுமார் 100 மி. மீ மழைவீழ்ச்சி ஏற்படும்.

பெரும்பாலும் கடற் பிரதேசத்தில் 30 முதல் 40 கி. மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன் காங்கேசன்துறை முதல் பத்தளம் ஊடாக காலி வரையிலான ஆழ்கடலில் காற்றின் வேகம் 50 கி. மீற்றர் வேகத்தில் வீசும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் 70 முதல் 80 கி. மீ. ஆக அதிகரிக்கும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமானுக்கு அண்மித்ததாக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள அடுத்த தாழமுக்கம் காரணமாக யாழ் குடாநாடு உட்பட வட பகுதியில் கிழக்கிலும், புத்தளம், குருணாகலை, கண்டி, நுவரெலியா பகுதிகளிலும் இன்று கடும் மழை பெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவிக்கிறது.

 


Add new comment

Or log in with...