தமிழ் கூட்டமைப்பு தம்மையும் ஏமாற்றி தமிழரையும் ஏமாற்றுகிறது | தினகரன்

தமிழ் கூட்டமைப்பு தம்மையும் ஏமாற்றி தமிழரையும் ஏமாற்றுகிறது

அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் துர்ப்பாக்கிய நிலையிலேயே கடந்த காலங்களில் செயற்பட்டுள்ளதாகவும் யதார்த்தத்தை உணர்ந்து இம்முறை அரிய சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பிரதியமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் தாம் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு எந்தவித நிபந்தனையோ ஒப்பந்தமோ இல்லாது மூன்றரை வருடங்களாக அனைத்துக்கும் கையுயர்த்தி ஆதரவு தெரிவித்ததே அவர்கள் செய்த காரியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதன்போது தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களிலிருந்து மாறப்போவதில்லையென அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே பிரதியமைச்சர் வியாழேந்திரன் நேற்று இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த போது, பாராளுமன்றத்தில் இம்முறை எவ்விதத்திலும் தமிழ்க்கூட்டமைப்பு நடுநிலை வகிக்கப்போவதில்லை. மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லையென்றால் அவர்கள் மீண்டும் ரணில் விக்சிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்கப் போகின்றனர்.

அவ்வாறு அவர்கள் ஆதரவு வழங்கும்போது இதுவரை காலமும் எந்தவித ஒப்பந்தமுமில்லாமல் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது போலல்லாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புகளையும் எழுத்து மூலம் வழங்கி அத்தகைய ஒப்பந்தத்தை உறுதிசெய்துகொண்டு அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மீண்டும் கிடைத்துள்ள சிறந்த சந்தர்ப்பம் இது. அவர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்களா அல்லது ரணில் விக்கிரமசிங்கவும் ஆதரவு தெரிவிக்கின்றார்களா என்பது முக்கியமல்ல. ஆனால், இம்முறையும் அவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றாது நிபந்தனையுடனேயே ஆதரவு வழங்கவேண்டும். ஜனாதிபதியிடம் அவர்கள் கலந்துரையாடியபோது எழுத்து மூலமான உறுதிப்பாடொன்றை அவர்கள் கோரியிருந்தனர். அப்படியாயின் ரணில் விக்கிரமசிங்கவிடமும் அவர்கள் எழுத்து மூல ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவேண்டும். கடந்த தேர்தல்களில் ஜனாதிபதிக்கும் சரத் பொன்சேகாவுக்கும் கூட அவர்கள் நிபந்தனையில்லாமலேயே ஆதரவு வழங்கினர். இன்றுள்ள இக்கட்டான நிலையில் அதனை அவர்கள் சிந்திக்கவேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கையில்லா பிரேரணையின் போதும் அதன் பின்னரும் அவர்கள் வெறுமனே கையை உயர்த்தினார்களேயொழிய அதன்மூலம் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லையென்பதே உண்மை. என்றும் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...