தெற்கு மக்களின் ஆதரவுடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு | தினகரன்

தெற்கு மக்களின் ஆதரவுடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு

அந்த வல்லமை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே இருக்கிறது

தமிழ் மக்கள் நலன் சார்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்து செயற்பட வேண்டுமென அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.

தெற்கு மக்களின் ஆதரவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரக்கூடிய வல்லமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய தலைவர்களுக்கு மட்டுமே உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய அரசியலமைப்புக்கு எவ்வித பங்களிப்பும் செய்யாததன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பிரதமர் மஹிந்தராஜபக்ஷவுக்கு கிடைக்குமாவென ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

"தெற்கு மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மீது அதீத நம்பிக்கையுண்டு.

எனவே தமிழர்களின் பிரச்சினைக்கு இவர்கள் தீர்வு முன்வைத்தால் மட்டுமே தெற்கு மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வந்தால் தெற்கிலுள்ளவர்கள் ஒருபோதும் அதற்கு இணங்க மாட்டார்கள்.தீர்வுக்கு பதிலாக பிரச்சினை மட்டுமே உருவாகும்," என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தற்போது 105 எம்.பிக்கள் உள்ளனர்.இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இவ்விடயம் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

"தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மீது எமக்கு தொடர்ந்தும் நம்பிக்கை இருக்கிறது. எனினும் மக்கள் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு வரமுடியாத இருவர் மட்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்தை வந்தடைவதற்காக தமது ஆதரவை அக்கட்சிக்கு வழங்கப்போவதாக கூறி வருகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமது இலாப நோக்கிற்காக பயன்படுத்துபவர்கள்," என்றும் அமைச்சர் இதன்போது விளக்கமளித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியதாவது-,

புதிய பிரதமருக்கு சார்பாக தற்போது 105 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவ்விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். கூட்டமைப்பில் இருவர் மட்டுமே ஆதரவு வழங்கப் போவதாக கூறி வருகின்றனர். அதற்காக நாம் கலக்கமடையவில்லை. கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்முடன் பேச்சு நடத்த முன்வராவிட்டாலும் கூட கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட ஏனையோர் மீது எமக்கு தொடர்ந்தும் நம்பிக்கை இருக்கிறது.

ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்கவுள்ள கூட்டமைப்பு எம்.பிக்கள் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு வரமுடியாதவர்கள். அது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

அதனால்தான் ஐ.தே.கவின் தேசியப் பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்தின் வருகையை எதிர்பார்த்து தமது ஆதரவை அக்கட்சிக்கு வழங்க முன்வருகிறார்கள் போலும். அவர்கள் தமிழர் பிரச்சினையை தமது சுய இலாபத்துக்காக பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இந்த அரசாங்கத்துக்கு நன்கு தெரியும். அதேபோன்று தமிழர் பிரச்சினைக்கான தீர்வையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும். காரணம் அவர்கள் ஒருபோதும் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள், நாட்டை விற்க மாட்டார்களென்ற நம்பிக்கை தெற்கு மக்களிடம் உண்டு. இதனால் தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வை பெற்றுக் கொடுத்தாலும் தெற்கு மக்கள் அதற்கு பூரண ஆதரவை வழங்குவார்கள்.

தெற்கின் ஆதரவுடன் தமிழர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும். ஆனால் ஐ.தே.க இதே தீர்வை பெற்றுத்தர முன்வந்தால் தெற்கு மக்கள் அதற்கு ஒருபோதும் இணங்க மாட்டார்கள். இறுதியில் தமிழ் மக்களுக்கு தீர்வின்றி நாட்டில் பிரச்சினை மட்டுமே உருவாகும்.

புதிய அரசியலமைப்புக்கு ஐ.தே.க இதுவரை எவ்வித பங்களிப்பையும் செய்யாமல் தமிழர்களை ஏமாற்றியே வந்துள்ளது.

எனவே இவ்விடயத்தில் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் ராஜபக்ஷவும் முன்வந்துள்ளனர். எனவே ஓரிருவரை தவிர்ந்த எஞ்சிய கூட்டமைப்பினர் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர கேட்டுக் கொண்டார்.

 


Add new comment

Or log in with...