நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த ரணில் முயற்சி | தினகரன்

நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த ரணில் முயற்சி

14 ஆம் திகதிக்கு முன்னர் எஞ்சிய வெற்றிடங்களுக்கும் அமைச்சர்கள் நியமனம்

எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக எஞ்சிய சகல அமைச்சுகள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்களான அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் தெரிவித்தனர்.

113 பெரும்பான்மை உறுதியாக இருப்பதாக தெரிவித்த அவர்கள், கணக்குகளை கூறி ஐ.தே.க தான் அறிக்கை விடுவதாகவும் குறிப்பிட்டனர். நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த கொழும்பு மாவட்ட எம்.பி ரணில் விக்கிரமசிங்கதான் முயல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பது எமது விடயமல்ல. ஐ.தே.க தான் பெரும்பான்மையை காண்பிக்க வேண்டும்

19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் 30 அமைச்சர்கள் நியமிக்கலாம். இதுவரை 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலா 9 இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது அமைச்சர்களுக்கு ஆசனம் ஒதுக்கவேண்டும்.

அதற்கு முன்னதாக எஞ்சிய வெற்றிடங்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

இன்னும் 13 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்படாதிருப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அமைச்சர்களை நியமிக்க 14 ஆம் திகதி வரை காலம் இருக்கிறது. கட்டம் கட்டமாக அமைச்சர்களை நியமிக்க முடியாது என எங்கும் குறிப்பிடப்படவில்லை.

2015இல் அமைச்சர்கள் நியமிக்க இருவாரங்கள் பிடித்தது என்றார்.

அமைச்சர்கள் நியமிக்கப்படாததால் அமைச்சுக்களினதும் அரச நிறுவனங்களினதும் செயற்பாடுகள் தடைப்பட்டிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சமரசிங்க, அமைச்சர்களின்றி செயலாளர்களினால் இரு வாரங்களுக்கு செயற்பட முடியாதா? எந்த நிறுவன செயற்பாடும் தடைப்படவில்லை.

செயலாளர்கள் தேவையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்றார்.

பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார இராஜினாமா செய்தது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரதி அமைச்சராக பதவி ஏற்கும் போது அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் எதுவும் தெரிந்திருக்கவில்லையா? என்ன காரணத்திற்காக அவர் மறுபக்கம் சென்றார் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அதனை வெளியிட மாட்டோம் . அவர் சென்றாலும் எமக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்றார்.

பாலித்த ரங்கே பண்டாரவுடன் எஸ்.பி திசானாயக்க எம்.பி தொலைபேசியில் உரையாடியது தொடர்பில் பதிலளித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அவர் எங்கும் பணம் தருவதாக கூறவில்லை. பணம் கொடுத்து எம்.பிகளை வாங்கவேண்டிய தேவை கிடையாது. அவ்வாறு பணம் தருவதாக கூறியிருந்தால் பொலிஸில் சென்று முறையிட முடியும் என்று தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

 


Add new comment

Or log in with...