Home » நிதித்துறையின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த கருத்திட்டம்

நிதித்துறையின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த கருத்திட்டம்

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 10 முடிவுகள்

by Prashahini
December 6, 2023 4:23 pm 0 comment

– அபராதத் தொகையை அதிகரித்தல்
– குற்றவியல் வழக்கு சட்டக்கோவையில் திருத்தம்
– இதயநோயாளர்களுக்கான ஊசிமருந்து விநியோக பெறுகை கோரல்

உலக வங்கியின் நிதியனுசரணையின் கீழ் நிதித்துறையின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தவிர நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 09 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிதித்துறையின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் கருத்திட்டம் உலக வங்கியின் நிதியனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக 2023.04.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த அங்கீகாரத்தின் பிரகாரம் இடம்பெற்ற கடன் உடன்பாட்டுக் கலந்துரையாடல்களில் இலங்கை பணவைப்புக் காப்புறுதித் திட்டம் மூலதனமிடல், மத்திய வங்கியின் நிறுவன ரீதியான இயலளவு விருத்தி மற்றும் குறித்த கருத்திட்ட அமுலாக்கலைக் கண்காணித்தல் போன்ற கூறுகளின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஏற்புடைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கை (Colombo Security Conclave), புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தலைமையக ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

இந்து சமுத்திரத்தின் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பொதுவான பாதுகாப்புக்குள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக உறுப்பு நாடுகளின் பெறுமதிகளுக்கு மதிப்பளித்து இயங்குகின்ற ஒரு பேரவையாக கொழும்பு பாதுகாப்பு பேரவை தாபிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பேரவையில் இந்தியா, மாலைதீவு, மொரிசீயஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் உறுப்பு நாடுகளாகவும், பங்களாதேசம் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகள் அவதானிப்பு நாடுகளாகவும் செயலாற்றுகின்ற பிராந்திய அமைப்பாகும்.

இப்பேரவையின் பணிகளை மிகவும் முறைமைப்படுத்துவதற்காக உடன்படிக்கையொன்றில் கையொப்பமிடுவதற்கும், கொழும்பு நகரில் தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள குறித்த அமைப்பின் செயலகத்திற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுப்பு நாடுகளிடையே கையொப்பமிடுவதற்கும், மற்றும் செயலகத்தின் பணிகளுக்குரிய தலைமையக ஒப்பந்தமொன்றில் இலங்கை மற்றும் தலைமையக ஜெனரலுக்கும் இடையே கையொப்பமிடுவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்களை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் மாலைதீவு கடியரசுக்கும் இடையிலான குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்களை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக 2022.09.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், மாலைதீவு தரப்பினர் ஒப்பந்த வரைபுக்கு பின்னர் ஒருசில மேலதிக திருத்தங்கள் முன்மொழியப்பட்டமையால், குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. பின்னர் இருதரப்பின் உடன்பாடுகளுக்கமைய திருத்தப்பட்ட புதிய ஒப்பந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்;டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், பின்னர் ஒப்பந்தத்தை இருநாடுகளின் இராஜதந்திர தூதுக்குழுவால் ஏற்று அங்கீகரிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களை ஒப்படைத்தல் தொடர்பாக இலங்கைக்கும் லெட்வியா குடியரசுக்கும் இடையிலான ஒப்பந்தம்

இலங்கை நீதிமன்றமொன்று வேறொரு நாட்டவருக்கு குற்றத் தீர்ப்பளித்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டால், குறித்த நபரின் தண்டனையை அவர் தனது நாட்டில் சிறைத்தண்டனைக் காலத்தை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் 1995 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குற்றவாளிகளைப் பரிமாற்றல் சட்டத்தில் ஏற்பாடுகள் உட்சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் ஏதேனுமொரு நாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் தனது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை இலங்கையிலுள்ள சிறைச்சாலையொன்றில் பூர்த்தி செய்வதற்குமான ஏற்பாடுகள் சட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இலங்கைக்கும் லெட்வியா குடியரசுக்கும் இடையிலான குற்றவாளிகளை பரிமாற்றல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு கலந்துரையாடல்களை மேற்கொண்டு உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ள குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. குருதியேற்ற மருத்துவ தொழில்வல்லுநர்கள் மற்றும் சிகிச்சை பணிக்குழாமினருக்கான இயலளவு விருத்தி வேலைத்திட்டத்தை நடாத்துதல்

குருதியேற்ற மாற்றுகை மருத்துவ தொழில்வல்லுநர்கள் மற்றும் சிகிச்சை பணிக்குழாமினருக்கு குருதியேற்ற மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான அறிவை மேம்படுத்தும் நோக்கில் கல்விசார் நிகழ்ச்சித்திட்டங்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 41.28 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டம் ஐரோப்பா, இந்தியா மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கொழும்பு தேசிய குருதியேற்ற சேவைகள் மற்றும் ஆசிய குருதியேற்ற சங்கம் ஆகிய பங்காளர்கள் இணைந்து நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த தரப்பினர்களிடையே கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. இதய நோயாளர்களுக்கான சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் எனொக்சபாரின் சோடியம் ஊசிமருந்து 1,145,000 விநியோகிப்பதற்கான பெறுகைக் கோரல்

இதய நோயாளர்களின் சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் முன்நிரப்பிய எனொக்சபாரின் சோடியம் ஊசிமருந்து 6000 IU 0.6 mapA+ சிறிஞ்சர் 1,450,000 விநியோகிப்பதற்கான இரண்டு பெறுகைகளின் கீழ் சர்வதேச போட்டி விலைமுறை கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கீழ்க்காணும் வகையில் பெறுகைகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனொக்சபாரின் சோடியம் ஊசிமருந்து 450,000 இனைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகை M/s Gulf Pharma (Pvt) Limited இற்கு வழங்குதல்
எனொக்சபாரின் சோடியம் ஊசிமருந்து 1,000,000 இனைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகை M/s Slim Pharmaceuticals (Pvt) Limited இற்கு வழங்குதல்

7. 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்கு சட்டக்கோவை திருத்தம்

அடையாளங் காணப்பட்ட சூழ்நிலையின் கீழ் சந்தேகநபர்/குற்றவாளி நீதிமன்றத்தில் தனிப்பட்ட ரீதியில் முன்னிலையாவதற்கான தேவையை வழக்கு விசாரணையின் போது நீக்க முடியுமா என்பதைத் தீர்மானிப்பதற்காக குற்றவியல் நீதிமன்றத்திற்கு இயலுமாகும் வகையில் சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்காக 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்கு சட்டக்கோவையைத் திருத்தம் செய்வதற்காக 2021.09.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு தற்போது வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்தை மேலும் மேம்படுத்தி 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்கு சட்டக்கோவையை திருத்தம் செய்வதற்கான புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. தண்டனைச் சட்டக்கோவை திருத்தம் (19 ஆம் அத்தியாயம்) – அபராதத் தொகையை அதிகரித்தல்

சமகால பணப் பெறுமதிக்கமைவாக தண்டனைச் சட்டக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகைகளை திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு 2022.12.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்பதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. உத்தேச இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களுக்கான ஒப்பந்தத்தின் (ETCA) 12 ஆவது சுற்றுக் கலந்துரையாடல்

முன்மொழியப்பட்டுள்ள இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களுக்கான ஒப்பந்தத்தின் (ETCA) 12 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் 2023.10.30 தொடக்கம் 2023.11.01 வரைக்கும் கொழும்பில் இடம்பெற்றுள்ளதுடன், அதில் ஏற்புடைய பல துறைகள் தொடர்பாக இருதரப்பு செயற்பாட்டுக் குழு உடன்பாடுகளை எட்டியுள்ளது. குறித்த உத்தேச ஒப்பந்தத்தின் 13 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் 2024.01.08 தொடக்கம் 2024.01.10 ஆம் திகதி வரை இந்தியாவில் நடாத்துவதற்கும், 2024 மார்ச் மாதமாகும் போது தொழிநுட்ப மட்டத்திலான கலந்துரையாடல்களை நிறைவு செய்வதற்கும் இருதரப்பினரும் உடன்பட்டுள்ளனர். 12 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.

10. தேசிய மதிப்பீட்டுக் கொள்கை 2024 ஆம் ஆண்டு தொடக்கம் அரச துறையில் நடைமுறைப்படுத்தல்

2024 ஆம் ஆண்டு தொடக்கம் தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அரச துறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அடிப்படை திட்டத்தை திறைசேரியின் கருத்திட்ட முகாமைத்தும் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் மூலம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மதிப்பீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய நிறுவனமொன்றை தாபிக்காமல், தற்போது காணப்படுகின்ற நிறுவன முறைமையின் கீழ் நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்கொள்ளப்பட்டுள்ள மதிப்பீடுகளின் பரிந்துரைகளை வருடாச்தம் அமைச்சரவைக்கும், பின்னர் ஏற்புடைய வகையில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் மதிப்பீட்டுச் செயன்முறையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுயாதீன் தீர்மானத்தை எட்டுவதற்கும் இயலுமாகும் வகையில் நிரந்தர தேசிய மதிப்பீட்டுக் குழுவை தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் தலைமையில் தேசிய மதிப்பீட்டுக் குழுவை நியமிப்பதற்கும், குறித்த குழு மதிப்பீடுகளின் போது வெளிக்கொணரப்படும் விடயங்கள் பற்றி தகவல்கள் மற்றும் பரிந்துரைகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT