சபாநாயகரின் நிலைப்பாடு அரசியலமைப்புக்கு முரண் | தினகரன்


சபாநாயகரின் நிலைப்பாடு அரசியலமைப்புக்கு முரண்

சபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்திருக்கும் அறிக்கை அரசியலமைப்புக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருப்பதுடன், அரசியலில் தனிப்பட்ட ரீதியில் அவர் செயற்படுவதாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர்.

அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடுகளால் நாட்டில் ஏதாவது குழப்பநிலை ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். பிரதமரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது எனக் கூறுவதற்கு சபாநாயகருக்கு சட்டரீதியான எந்த அனுமதியும் இல்லையென அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவால் தெரிவுசெய்யப்பட்ட சபாநாயகர் நடுநிலை தவறிச் செயற்படுவதுடன், பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவருக்கு இல்லையென்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க, விஜயதாச ராஜபக்‌ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தனர்.

சபாநாயகர் பதவியில் இருப்பவர்கள் எந்தவொரு கட்சிக்கும் சார்பாக இல்லாமல் நடுநிலையாக செயற்படுவதே உலக வழக்கமாகவிருக்கும் நிலையில், சபாநாயகர் பதவியிலிருக்கும் கரு ஜயசூரிய பிழையான முன்னுதாரணமாக செயற்பட்டு வருகிறார். அவர் விடுத்திருக்கும் அறிக்கையானது அரசியலமைப்புக்கு முரணானது என்பது மாத்திரமன்றி நாட்டிலுள்ள மக்களை வீணாகக் குழப்பிவிடும் வகையிலும் அமைந்துள்ளது என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

அரசியலமைப்பு ரீதியான பிரச்சினைகளை அரசியலமைப்புக்கு அமையவே தீர்ப்பதற்கு இடமுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்த சகல நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கு உட்பட்டவை. யதார்த்தமான வரவுசெலவுத்திட்டமொன்றை தயாரிப்பதற்காகவே ஜனாதிபதி நம்பர் 16ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். தற்பொழுது இரண்டு நாட்கள் முன்னராக பாராளுமன்றத்தைக் கூட்ட முடிவெடுத்துள்ளார். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் தீர்மானத்தை மீறிச் செயற்படும் அதிகாரம் எதுவும் சபாநாயகருக்கு இல்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. இரண்டு மாதங்கள் வரை பாராளுமன்றத்தை ஒத்திவைக்கக் கூடியதாகவிருக்கும்போதும், குறைந்த அதிகாரத்தையே அவர் பயன்படுத்தியுள்ளார். பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் உரிமை சபாநாயகருக்கு இல்லை. பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பில் ஜனாதிபதி சபாநாயகருடன் கலந்துரையாடவேண்டும் என அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

சபாநாயகர் விடுத்திருக்கும் அறிக்கையில் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தனது தனிப்பட்ட நிலைப்பாட்டை அவர் சபாநாயகர் என்ற ரீதியில் முன்வைக்க முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அரசியலமைப்புக்கு அமைய நியமிக்கப்பட்டவர். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் ரணில் விக்ரமசிங்க ஏன் இன்னமும் உச்சநீதிமன்றத்தை நாடாமல் இருக்கிறார் என்றும் கேள்வியெழுப்பினார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க

சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியல் இலாபத்துக்காக நடந்துகொள்வது தவறானது. அவருடைய இந்த அறிக்கையானது பாராளுமன்றத்தில் பணியாற்றும் சகல அதிகாரிகளையும் சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பை நடத்தியது தவறானது. இதனால் அங்கு பணியாற்றும் சகல அதிகாரிகளும் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளனர். சபாநாயகர் அரசியலமைப்பை மீறிச் செயற்படுகிறார். அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமையவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். இதற்கு முன்னரும் பதவியிலிருந்த ஜனாதிபதிமார் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். பாராளுமன்றத்தை ஒத்திவைத்த தினத்துக்கு இரண்டு தினங்கள் முன்னதாகக் கூட்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட தினத்தில் சபாநாயகர் அதற்கு முரணான அறிக்கையை விடுத்திருப்பது சிறந்த முன்னுதாரணமாக அமையாது.

இதனால் தேவையற்ற பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படலாம். அது மாத்திரமன்றி சபாநாயகர் பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகளையும் சிக்கலுக்குள் மாட்டிவிட்டுள்ளார் எனவும் கூறினார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பில் பிரதமரை நியமிப்பது தொடர்பான சரத்து எந்தவிதமான மாற்றமும் இன்றி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

2004ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பியியும் இணைந்து அரசாங்கம் அமைத்தபோது பெரும்பான்மை இருக்கவில்லை. 108 ஆசனங்களைக் கொண்டிருந்த ஐ.ம.சு.முவின் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நியமித்தார். ஒன்றரை வருடங்கள் பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் செயற்பட்டு வந்த நிலையில் கரு ஜயசூரிய 18 பேருடன் வந்து அரசில் இணைந்துகொண்டார். அப்போது பாராளுமன்ற பெரும்பான்மை பற்றி அவர் ஏன் கேள்வியெழுப்பவில்லையென அமைச்சர் விஜயதாச கேள்வியெழுப்பினார்.

அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 47 பேர் கொண்ட ஐ.தே.கவை ஆளும் கட்சியாக்கி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பிரதமராக்கினார். அதன்போது பெரும்பான்மை பற்றி எதுவும்பேசாது அமைச்சுப் பொறுப்பை கரு ஜயசூரிய பெற்றுக் கொண்டிருந்தார். இவ்வாறான நிலையில் தற்பொழுது பிரதமர் பதவிக்கு பெரும்பான்மை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய கவலை வெளியிடுகிறார். அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதிக்கே அதிகாரங்கள் உள்ளன.

19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை பிரதமரிடம் கொண்டுவரவேண்டும் என்ற தேவை சிலருக்கு இருந்தது. எனினும், இதற்கு இடமளிக்கப்படவில்லை. அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதியே அரசாங்கத்தின் தலைவராவார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டவர் என நம்பும் ஒருவரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. எமது அரசியலமைப்பின் படி பாராளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானமொன்றைக் கொண்டுவர முடியாது. நம்பிக்கையில்லா தீர்மானத்தையே கொண்டுவர முடியும். இது இலங்கை அரசியலமைப்பிலோ அல்லது வெஸ்மின்ஸ்டர் முறையிலோ இல்லை.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அதனைக் கூட்டும் அதிகாரம் பிரதமருக்கோ அல்லது சபாநாயகருக்கோ இல்லை. ஜனாதிபதிக்கே பாராளுமன்றத்தைக் கூட்டமுடியும். அரசாங்கத்தை நீக்குவதாயின் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் அல்லது வரவுசெலவுத்திட்டத்தை தோற்கடிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

சபாநாயகரின் நிலைப்பாடானது மக்களைக் குழப்பிவிடும் செயற்பாடாகும். இதனால் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

திலங்க சுமதிபால எம்.பி

பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதால் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கு அதன் செயலாளர் நாயகமே பொறுப்பாக இருப்பார். புதிய பிரதமர் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் அதற்கான ஆசனம் மற்றும் அலுவலக அறை ஒதுக்கீடு தொடர்பில் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறான நிலையில் சபாநாயகரின் நிலைப்பாடு செயலாளர் நாயகம் உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்களை சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.

நாட்டின் உயர்ந்த சட்டமான அரசியலமைப்பை மீறும் வகையில் சபாநாயகர் நடந்துகொள்ள முடியாது.

எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது ஜனாதிபதி மூன்றாவது அமர்வை ஆரம்பித்துவைத்து கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பார்.

அதன் பின்னர் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்காக பாராளுமன்றத்தை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பார்.

இவ்வாறான நிலையில் சபாநாயகர் தற்பொழுது எடுத்திருக்கும் நிலைமையை கண்டிக்கின்றோம் எனவும் அவர் மேலும் கூறினார்.

மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...