Friday, April 19, 2024
Home » இந்திய அரசின் நிதியுதவியில் மலையக பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகள்

இந்திய அரசின் நிதியுதவியில் மலையக பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகள்

அடுத்த வருடம் அமுலாகுமென்கிறார் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்

by gayan
December 6, 2023 6:50 am 0 comment

மலையக பாடசாலைகளுக்கும் ஏனைய பாடசாலைகளுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே, தாம் உள்ளதாகவும் அது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மலையக பிரதேச பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு கட்டம், கட்டமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

அத்துடன் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அடுத்த வருடத்தில் மலையக

பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மலையக பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் மற்றும் அங்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அதிகளவிலான ஆசிரியர்கள் அப்பிரதேசங்களில் இருந்தே உருவாவதற்கான நிலைமை ஏற்படும்.

அத்துடன் 2500 ஆசிரிய உதவியாளர்களை அங்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அடுத்த வருடத்தில் அது இடம்பெறும்.அந்த வகையில் கல்வி பொது தராதர உயர் தரத்தில் சித்தியடைந்தவர்கள் இதில் உள்வாங்கப்படுவார்கள்.

குறிப்பாக பாடசாலைகளின் அபிவிருத்திக்காக அடுத்த வருடத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி எமக்கு கிடைக்கவுள்ளது. குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அந்நிதியை செலவிட எதிர்பார்த்துள்ளோம். அந்த விடயத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு கூடிய கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கணினி, மடி கணினி, போட்டோ பிரதி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத் திட்டங்களையும் அங்கு முன்னெடுக்கப்படும். இதன் மூலம் சிறந்த எதிர்கால சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான நிலைமை அங்கு உருவாகும்.

அதே வேளை,கண்டி மாவட்டத்தில் சமய பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையில், இந்து சமயத்தை முஸ்லிம் ஆசிரியரும் முஸ்லிம் சமயத்தை இந்து ஆசிரியரும் கற்பிக்கும் நிலை காணப்படுவதாக அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச சபையில் தெரிவித்தார்.

இவ்வாறான எத்தகைய நிலையும் அங்கு காணப்படவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் அவ்வாறு இருந்தால் அது தொடர்பில் நான் கவனம் செலுத்துவேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT