Friday, March 29, 2024
Home » தாய்மொழியில் சட்டக் கல்வி கற்கும் வாய்ப்பு தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்

தாய்மொழியில் சட்டக் கல்வி கற்கும் வாய்ப்பு தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்

சபையில் ஸ்ரீதரன் எம்.பி கல்வியமைச்சரிடம் வேண்டுகோள்

by gayan
December 6, 2023 6:25 am 0 comment

தாய்மொழியில் சட்டக்கல்வியை கற்கும் வாய்ப்பு தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் இதற்கமைய யாழ். பல்கலைக்கழகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்வது அவசியமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி எஸ். ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யாழ். தீவக பாடசாலைகளில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன்

சேவை வழங்குகின்றர். இதனைக் கவனத்திற் கொண்டு அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கல்வியமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மிக முக்கியமான பல்கலைக்கழகமாக செயற்பட்டு வருகிறது. அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியியற் பீடத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வியியற் துறையை ‘பீடமாக’ உருவாக்குமாறு கடந்த ஆண்டும் நாம் வலியுறுத்தினோம். இருந்த போதும் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தில் கல்வியமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கிளிநொச்சி ஊற்றுக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வி டிலானி ரவிச்சந்திரன் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் சித்தியடைந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் 44 ஆவது இடத்தை அவர் பெற்றார். அவரது கல்வித் தகைமைக்கு அமைய ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கு தொழில்நுட்ப பிரிவுக்கு அவர் தெரிவானார். குடும்பத்தில் நிலவும் வறுமை காரணமாக அவரால் அப்போது பல்கலைக்கழக கல்வியை தொடர முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து முறையான கல்வித் தகைமை உள்ளதால் அந்த மாணவி தேசிய கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.எனினும், பல்கலைக்கழக கல்வியைத் தொடர அனுமதி கிடைத்துள்ளதால் தேசிய கல்வியற் கல்லூரிக்கான இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இம்மாணவி தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குவுக்கும் இரண்டு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பகுதியைச் சேர்ந்த இம்மாணவிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

2022 மற்றும் 2023 ஆம் கல்வியாண்டு மாணவர்களுடன் ஒன்றிணைந்து இந்த மாணவி பல்கலைக்கழக கல்வியைத் தொடர வாய்ப்பளிக்குமாறும் கல்விமைச்சரை அவர், கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அதிகாரிகள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்விடயத்தை அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக உறுதியளித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT