Friday, March 29, 2024
Home » ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் முதற்கட்டமாக 14,935 பேர் இணைப்பு

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் முதற்கட்டமாக 14,935 பேர் இணைப்பு

by gayan
December 6, 2023 6:35 am 0 comment

 இலவச பாதணிகள் வழங்க ரூபா 2500 மில்லியன் நிதி

 பின்தங்கிய பாடசாலைகளில் பகலுணவு திட்டம்

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் சேவையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் காணப்படுவதால், முதற்கட்டமாக 14,935 ஆசிரியர்களை மாகாண மட்டத்தில் இணைத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் பின்தங்கிய பகுதி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாதணிகளை வழங்குவதற்கு 2500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சபையில் அவர் குறிப்பிட்டார்.

7 இலட்சத்து 47 ஆயிரம் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் இத்திட்டம் நிறைவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில், கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பரீட்சைகளை நடத்தினோம்.தொழிற்சங்க போராட்டங்களினால் பரீட்சைகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை விட 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்வியமைச்சுக்கு 52 பில்லியன் ரூபா மேலதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை சிறந்த முன்னேற்றமாகும்.

பின்தங்கிய பாடசாலைகளின் மாணவர்களுக்கு சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பகலுணவு வழங்கும் திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாத்திரம் 1.5 பில்லியன் ரூபா அதற்காக செலவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்காக 16 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டு சகல பாடசாலைகளுக்கும் பகலுணவு திட்டம் என்ற இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும்.

2023 ஆம் ஆண்டு இலவச பாடநூலுக்காக 13 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்காக 20 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான இலவச பாடநூல் விநியோகத்துக்காக அச்சகத் திணைக்களத்தின் ஊடாக 80 வீத நூல்கள்

அச்சிடப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரங்களில் பாடநூல் அச்சுப் பணிகள் நிறைவு பெறும். 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. இதற்கு முன்னர் பாடநூல்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT