தேசிய உணர்வுடன் கூடிய புரிந்துணர்வில் செயற்படுவோம் | தினகரன்

தேசிய உணர்வுடன் கூடிய புரிந்துணர்வில் செயற்படுவோம்

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து மக்களும் புரிந்துணர்வுடன் கூடிய தேசிய உணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் வலியுறுத்தியிருக்கின்றது. தீய சக்திகள் நாட்டை குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அந்த வலைக்குள் மக்கள் சிக்கிவிடக் கூடாது. நாட்டில் குழப்ப நிலையொன்று ஏற்படுமானால் அது பாரதூரமான விளைவுகளுக்குள் தேசத்தை தள்ளிவிடலாம். அதற்கு யாரும் துணை போய்விடக் கூடாது. ஒவ்வொருவரும் நாட்டின் பொது நலனில் அக்கறை கொண்டவர்களாகவே செயற்பட வேண்டும்.

புரிந்துணர்வையும், தேசிய ஐக்கியத்தையும் சீர்குலைப்பதற்கு சில குழுக்கள் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்புவதில் முனைப்புக்காட்டி வருகின்றன. நம்பகத்தன்மையற்ற விதத்தில் சில ஊடக வலைத்தளங்கள் பொய்ப்பிரசாரங்களையும், முறையற்ற தகவல்களையும் பரப்பி வருகின்றன. உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி நாட்டின் ஸ்திரத்தன்மைக்குப் பங்கமேற்படுத்தும் சக்திகளை முடக்குவதற்கு காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

 திட்டமிட்ட சதி வேலைகளில் ஈடுபடுவோர் விடயத்தில் மக்கள் விழிப்புடனிருக்க வேண்டும். தவறாக வழிநடத்தப்படும் கருத்துக்கள் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் முயற்சியில் சிறு குழுவொன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது. அடிப்படையற்ற பிரசாரங்களையும், தகவல்களையும் வெளியிடும் இவர்கள் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

சில இணையத்தளங்கள் போன்று சில ஊடகங்களும் கூட தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. எந்தவிதமான ஆதாரங்களுமற்ற விதத்திலேயே இத்தகவல்கள் அமையப்பெற்றுள்ளன. அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடும் தகவல்களையே மக்கள் நம்ப வேண்டும். எந்தத் தகவல் குறித்தும் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டிய கடப்பாடு மக்களைச் சார்ந்து காணப்படுகின்றது.

புரிந்துணர்வுடன் தேசிய உணர்வையும் உள்வாங்கி மக்கள் செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகளை தவிர வேறெதனையும் மக்கள் கவனத்தில் கொள்ள முற்படக் கூடாது. அரசியல் மாற்றமொன்று நிகழ்ந்திருக்கும் இன்றைய நிலையில் அதனை திசை திருப்பும் முயற்சிகளுக்கு மக்கள் துணை போய்விடக் கூடாது. அரசுக்கு பங்கமேற்படக் கூடிய விதத்தில் செயற்பட எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கக் கூடாது. சட்டத்தை மதித்துச் செயற்படுவதுதான் ஜனநாயக வழி முறையாகும்.

ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டிருப்பதானது அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே அமையப்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி எடுத்திருக்கும் நடவடிக்கையானது சட்டத்தையோ, அரசியலமைப்பையோ மீறியதாக எந்த விதத்திலும் கருத முடியாது. அவ்வாறு அரசியலமைப்பு மீறப்பட்டிருந்தால் உடனடியாகவே நீதிமன்றத்தை நாடி இருக்க முடியும். அரசியலமைப்பை மீறியதாக புலம்பிக் கொண்டிருப்போர் இதுவரையில் அதனைச் செய்யத்தவறிவிட்டனர். மக்களை தவறாக வழி நடத்த முற்படுவதைவிடுத்து ஜனநாயக வழிமுறையில் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனாதிபதி தமக்கிருக்கும் அதிகாரங்களுக்மைய அரசியலமைப்பு விதிகளுக்குட்பட்டு ஆட்சிமாற்றமொன்றை கொண்டு வந்திருக்கின்றார். இவ்வாறான நிலையில் ஜனநாயக நீரோட்டத்தில் செயற்படும் கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கௌரவமான முறையில் ஒதுங்கிக் கொள்வதோடு புதிய பிரதமருக்கு வழிவிட்டு அலரிமாளிகையிலிருந்து வெளியேறுவதே சிறப்பானதாகும்.

ஜனநாயக அரசியலில் முதிர்ச்சி பெற்ற ஒருவரான ரணில் விக்கிரமசிங்க இதுவரையில் பேணிவந்த கௌரவத்தையும், கனவான் அரசியலையும் தொடர்ந்து பேணும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமென்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

2015 ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலின்போது தோல்வியடைந்த சில மணி நேரத்துக்குள்ளேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமல் தோல்வியை ஏற்றுக்கொண்டு அலரிமாளிகையிலிருந்து வெளியேறியதை இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம். ஜனநாயக அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம். இதுதான் ஜனநாயக மரபாகும். இந்த முடிவை தோல்வி என்பதை விட மக்கள் தீர்ப்பு என்றுதான் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் சுதந்திர இலங்கையில் மாறி மாறி வெற்றி தோல்விகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்றாகவே இதனையும் நோக்க வேண்டும்.

அரசியலமைப்பு முறைக்கு முரண் என்று வாதிடுவதை விடுத்து ஜனாதிபதியின் முடிவை ஏற்று ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் ஜனநாயக விழுமியங்களை பேணிய ஒரு தலைவராக அவரைப் பார்க்க முடியும். ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தைப் பேணி நடந்துகொள்பவர் என்ற நற்பெயரைப் பெற்றுக் கொண்டவர் என்பதையும் இவ்வேளையில் நினைவூட்டிக் கொள்ள முடியும்.

நாட்டு மக்களையோ, சர்வதேசத்தையோ தவறாக வழிநடத்தி நாட்டில் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தாமல் அரசியல் ஸ்திரத்தன்மையைப் பேணக்கூடிய விதத்தில் செயற்பட வேண்டியதே இன்றைய நிலையில் அவசியமானதாகும். இதன் பொருட்டே தேசிய உணர்வுடன் செயற்படுமாறு நாட்டு மக்களை அரசு கேட்டிருக்கின்றது. அரசின் இந்த அழைப்பு நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல அரசியல் கட்சிகள், தலைவர்களுக்குமான அழைப்பாகக் கூட நோக்க வேண்டியதென்பதை சொல்லி வைக்க முடியும். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...