திட்டமிட்டபடி பாராளுமன்றம் 16 ஆம் திகதியே கூடும் | தினகரன்

திட்டமிட்டபடி பாராளுமன்றம் 16 ஆம் திகதியே கூடும்

7ஆம் திகதிக்கு ஜனாதிபதி உடன்படவில்லை

பாராளுமன்றத்தை எதிர்வரும் 07 ஆம் திகதி கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் கருஜயசூரியவுடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் உடன்படவில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றம் ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருக்கும் விதத்தில் 16 ஆம் திகதியே கூடுமெனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் பொருட்டு சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதி 7 ஆம் திகதி சபையை கூட்ட இணக்கம் தெரிவித்ததாக கூறியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக மாநாட்டின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையில் கடந்த 31 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்ட இணக்கம் தெரிவித்ததாக சபாநாயகர் அறிவித்திருக்கின்றார். அவரது கூற்றில் எந்தவிதமான உண்மையும் கிடையாது. ஜனாதிபதி ஏற்கனவே பாராளுமன்ற அமர்வை 16 ஆம் திகதி வரை ஒத்திவைத்து வர்த்தமானி அறிவித்தலில் ஒப்பமிட்டிருக்கின்றார், அதன்படி 16ஆம் திகதிதான் பாராளுமன்ற அமர்வு இடம்பெறும்.

ஐ.தே.கவும், ரணில் விக்கிரமசிங்கவும் இல்லாத பெரும்பான்மையைக் கூறிக்கொண்டு அவசரமாக பாராளுமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதிலிருந்து தப்புவதற்கு சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்த போது பேசியதை மூடிமறைத்து 7 ஆம் திகதி சபையை கூட்ட இணங்கியதாக ஐ.தே.க. தரப்புக்கு கூறியுள்ளார்.

உண்மையிலேயே ஜனாதிபதி அப்படி எந்த உத்தரவாதத்தையும் சபாநாயகரிடம் வழங்கவில்லை. திட்டமிட்டபடி 16 ஆம் திகதியே பாராளுமன்றம் கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...