Home » மாணவர்களின் நடத்தைகளில் கூடுதல் அவதானம் அவசியம்!

மாணவர்களின் நடத்தைகளில் கூடுதல் அவதானம் அவசியம்!

by gayan
December 6, 2023 6:00 am 0 comment

நாட்டின் பல பிரதேசங்களுக்கும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் பரவியுள்ளது. இது ஒரு தொற்றுநோய் போன்ற நிலையை அடைந்துள்ளது. அதன் காரணத்தினால் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக ஆரோக்கிய ரீதியிலான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கையிலும் சமூக சீரழிவுகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் விரிவான அடிப்படையில் முன்னெடுத்துள்ளனர். அப்படியிருந்தும் போதைப்பொருள் துஷ்பியோகத்திற்குள் சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களையும் சேர்ந்தவர்களை உள்ளீர்க்கும் முயற்சிகள் சூட்சுமமான முறையில் இடம்பெற்ற வண்ணமுள்ளன. அவற்றில் பாடசாலைப் பிள்ளைகளை இலக்கு வைத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

ஹெரோயின், ஐஸ், கஞ்சா, பாபுல், மாவா, புகையிலைத்தூள் என்றபடி பல்வேறு வடிவங்களில் போதைப்பொருட்கள் காணப்படுகின்றன. பல வயது மட்டங்களையும் சேர்ந்தவர்கள் இப்போதைப்பொருட்களைப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பகுதியினர் இளம் வயதினர் ஆவர்.

போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்குள் இளம் வயதினரை உள்ளீர்ப்பதை இலக்காகக் கொண்ட பலவித முயற்சிகள் இடம்பெறுகின்றன. இளவயதினரை இப்பாவனைக்குள் உள்ளீர்த்துக் கொள்வதன் மூலம் அதன் வியாபாரத்தை நீண்ட காலத்திற்கு எவ்வித பிரச்சினைகளும் இன்றி முன்னெடுக்க முடியும். அதன் ஊடாக இலாபம் ஈட்டிக் கொள்ளலாம். ஆனால் வயதானவர்களை இலக்கு வைத்தால் அவர்களது மறைவோடு அதன் பாவனை முற்றுப் பெற்றுவிடும். இது இளம் பராயத்தினரை விடவும் இலாபம் அளிக்கக்கூடிய ஒன்றல்ல. அதனால்தான் இளம் பராயத்தினரை உள்ளீர்ப்பதற்கு போதைப்பொருள் வர்த்தகர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

அந்த வகையில் ஐஸ், பாபுல், மாவா, புகையிலைத் தூள் போன்ற போதைப்பொருள் பாவனைக்குள் பாடசாலை மாணவர்களை உள்ளீர்க்கும் முயற்சிகள் சூட்சுமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் நிமித்தம் விருந்துபசாரங்கள் கூட நடத்தப்படுகின்றன. சில பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு அருகில் உள்ள விற்பனை நிலையங்களிலும் இவ்வாறான போதைப்பொருட்கள், இனிப்பு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதன் விளைவாக உடல், உள ஆரோக்கிய ரீதியில் பலவித நெருக்கடிகளுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாக நேரிடும் என்பதை இவர்களில் பெரும்பகுதியினர் அறியாத நிலையில்தான் அதன் பாவனைக்கு உள்ளாகுகின்றனர். அத்தோடு சமூக சீரழிவுகளுக்கும் கூட இத்துஷ்பிரயோகம் துணைபுரிகின்றது.

இவ்வாறான நிலையில்தான் போதைப்பொருள் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தி அதிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினரும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்த போதைப்பொருள் விற்பனை நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றது. பாடசாலைகளுக்கு அருகிலுள்ள சிறுகடைகள், பஸ் தரிப்பிடங்கள், வெற்றிலை, பாக்கு விற்பனை செய்யும் இடங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்க இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினருக்கு தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறான இடங்களில் திடீர் தேடுதல்களை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் மாத்தளை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது மாணவர்களை இலக்கு வைத்து மாவா, பாபுல், புகையிலைத் தூள் போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்த ஏழு விற்பனை நிலையங்கள் கண்டறியப்பட்டதோடு அந்நிலையங்கள் சீல் வைத்து மூடப்பட்டுமுள்ளன. அந்நிலையங்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் பாவனைக்குள் உள்ளீர்க்கும் முயற்சிகளை முறியடிப்பதில் பெற்றோரும் சமூகநலன் விரும்பிகளும் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினருக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். இதனைத் தம் பொறுப்பாகக் கருதி செயற்பட வேண்டும். குறிப்பாக தம் பிள்ளைகளின் நடத்தைகள், செயற்பாடுகள் மற்றும் பயணங்கள் குறித்து பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக தவறானதும் பிழையானதுமான குற்றசெயல்களுக்குள் பிள்ளைகள் உள்ளீர்க்கப்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும். அதன் ஊடாக இந்நாட்டின் எதிர்காலப் பரம்பரையினரை ஆரோக்கியம் மிக்க சமூகமாகக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT