Wednesday, April 24, 2024
Home » கொட்டித் தீர்த்த பலத்த மழையினால் நீரில் மூழ்கியது சென்னை மாநகரம்!

கொட்டித் தீர்த்த பலத்த மழையினால் நீரில் மூழ்கியது சென்னை மாநகரம்!

மக்களை வீடுகளுக்குள் முடக்கியது மிக்ஜாம் புயல்!

by gayan
December 6, 2023 6:00 am 0 comment

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டி எடுத்துள்ளது. மிக்ஜாம் புயல் கரையை கடப்பதற்கு முன்பே சென்னை மிகப்பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு முதல் பலத்தமழை பெய்தது. அநேக இடங்களில் பலத்தமழை பதிவாகியுள்ள நிலையில், புயல் நேற்று கரையை கடக்கவிருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பொலிஸ்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்புத்துறை ஆகியன ஈடுபட்டுள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தொடர்மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாடசாலை, கல்லூரி, சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளதையடுத்து பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

மழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் தேங்கி இருக்கிறது. புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

மழையினால் சென்னையில் வசிக்கும் 3 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம் மூடப்பட்டதால் 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வீதிகளில் விழுந்த மரங்களை அகற்ற சென்னை மாநகராட்சி, தீயணைப்புத் துறை சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மழையுடன் சேர்த்து பலத்த காற்று வீசியதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சென்னை மீனம்பாக்கத்தில் மழையின் போது சுமார் 82 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. சென்னை நகரில் உள்ள நிவாரண முகாம்களில் நூற்றுக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தரைத்தளத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததால், மக்கள் முதல் மாடியில் உள்ள நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். புயல் காரணமாகசென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மற்றும் அதனை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு மேலோங்குகிறது. இதற்கு முக்கிய காரணம் அவ்வப்போது ஏற்படுகின்ற வெள்ளம் ஆகும்.

சென்னையில் 24 மணி நேரத்தில் 40 செ.மீ மழை பெய்துள்ளது.குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததே வெள்ளப் பாதிப்புக்கு மிக முக்கிய காரணம்.

“சென்னையின் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மழையை சமாளிக்கலாம். மீனவ கிராமமாக இருந்த பழைமையான நகரமான சென்னை பின்னாளில் வளர்ச்சி அடைந்து பெருநகரமாக மாற்றியமைக்கப்பட்டது. தற்போது, ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் 28 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். சென்னை தனது திறனை தாண்டி மக்கள் தொகையை தாங்கிக் கொண்டு இருப்பதால் மழைவெள்ளத்தை சமாளிக்க இயலவில்லை” என நிபுணர்கள் கூறுகின்றனர்.

“சென்னையில் பெய்த மழைக்கு எந்த நகரமும் தாக்குப்பிடிக்காது. இப்படி பேய் மழை பெய்தால் எந்த நகரமாக இருந்தாலும் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும். சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீ ஆக இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு 24 மணி நேரத்தில் பெய்து இருக்கிறது” என்று வளிமண்டலவியல் அதிகாரிகள் கூறினர். தொடர்மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் முடங்கிப் போயுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT