19 வது திருத்தத்தை முழுமையாக அறிவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம் | தினகரன்


19 வது திருத்தத்தை முழுமையாக அறிவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்

புதிய பிரதமர் நியமனத்தைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பிரதமர் நியமனத்துக்கான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கியிருக்கிறார்.

அதில் அவர் தன்மீதான கொலை முயற்சிக்குத் திட்டமிட்டது தொடக்கம் நாட்டின் நலனுக்கு எதிராகச் செயற்பட்டது வரையிலான பல குற்றச்சாட்டுகளை ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் மீது சுமத்தியுள்ளார். இதன் மூலம் ஏற்கனவே பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை தான் எதற்காக நீக்கியிருக்கிறேன் என்பதற்கான காரணத்தையும் நிறுவியிருக்கிறார்.

ஜனாதிபதியின் கூற்றுப்படி இவை பாரதூரமான குற்றச்சாட்டுகள். எதிர்காலத்தில் இவை தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளுக்கும் விவாதங்களுக்கும் இடமுண்டு.

ஆனால், இது தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் ரணில் விக்கிரசிங்க. தன்னைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கினாலும் தான் அலரிமாளிகையை விட்டு வெளியேற மாட்டேன் என அங்கேயே தங்கியிருக்கிறார். அது மட்டுமல்ல, பாராளுமன்றத்தில் தன்னுடைய பலத்தை நிரூபிக்க முடியும் எனவும் கூறியிருக்கிறார். கொழும்பில் (30.10.2018) தனக்கான ஆதரவுப் போராட்டமொன்றையும் நடத்தியிருக்கிறார்.

கொழும்பின் உயர் வர்க்கத்தினரும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதில் முக்கியமான பங்கேற்பாளர்களாக இருந்துள்ளனர்.

இவர்கள் எல்லாம் இந்த நெருக்கடி நிலை அல்லது மாற்றத்துக்கான சூழல் உருவாகும் வரையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? எங்கே இருந்தனர் என்ற கேள்விகளும் உண்டு. இப்பொழுது அரசியலமைப்புப் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நாடு முழுவதிலும் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் 19 ஆவது திருத்தம் என்றால் என்ன? அது எப்படியானது? என்பதை அக்குவேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருக்கிறார்கள்.

19 ஆவது திருத்தத்தைப் பற்றி ஒவ்வொரு குடிமக்களும் தெரிந்து கொள்வதற்கு நடந்துள்ள இந்த (பிரதமர் பதவி நீக்க) விவகாரம் வாய்ப்பளித்துள்ளது.

நெருக்கடிகள் தீவிர நிலையை எட்டும்போதே அதைப் பற்றிய புரிதலும் அதைத் தீர்ப்பதற்கான அக்கறையும் மக்களிடம் ஏற்படுகின்றன. மக்களிடம் மட்டுமல்ல, நாட்டிற்கும் அப்பொழுதே ஏற்படுகிறது. தூர நோக்கோடு சிந்திக்கும் நிலை இருந்தால் இப்படியெல்லாம் கொந்தளிப்பும் தடுமாற்றமும் சீரழிவும் பதற்றமும் இருக்காது.

தற்போது அரசியல் அதிகாரப் போட்டியில் மோதிக் கொண்டிருக்கும் ஐ.தே.கவும் சு. கவும் கடந்த எழுபது ஆண்டுகாலமாக மாறி மாறி ஆட்சி செய்து வந்திருக்கின்றன. இப்போதைய நிலையில், நடைமுறையில் புதிய பிரதமரான மகிந்த ராஜபக்ஷவிடமே அதிகாரம் உள்ளது. அவரின் கீழ் புதிய அமைச்சரவையும் உள்ளது.

'எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள் அமைச்சரவை பேச்சாளர்களான கெஹெலிய ரம்புக்வெல்லவும் மற்றும் மஹிந்த சமரசிங்கவும்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடும்போது 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்திற்கு 121 பேரைக் கொண்ட பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் புதிய அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமாயின் ஐக்கிய தேசியக்கட்சி பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையை கொண்டுவரலாம். அவ்வாறு கொண்டுவந்தால் நாங்கள் சரியான முறையின் அடிப்படையில் பெரும்பான்மையை நிரூபிப்போம். அதில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 113 பேர் ஆதரவளித்தால் நாம் வீடுசெல்ல தயாராக இருக்கின்றோம்' எனவும் கூறியிருக்கிறார்கள்.

இதேவேளை 'ஜனாதிபதி அரசியலமைப்பின் பிரகாரமே புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கின்றார். அதுதொடர்பில் யாருக்காவது பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் உயர்நீதிமன்றத்தை நாட முடியும். இல்லாவிடின் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எம்மை கோரமுடியும்' என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இதை ஒத்ததாக எதிர்த்தரப்புகளிலும் யாரும் கருத்துகளை முன்வைக்கக் கூடும். இந்த நிலைமைகளைக் குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரிய ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என கட்சித்தலைவர்களில் ஒரு சாரார் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் நாட்டின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு, நிர்வாக ஏற்பாடுகள் என்பவற்றைக் கவனத்திற் கொண்டே தாம் தீர்மானம் எடுத்திருப்பதாகவும் அதை நாட்டிலுள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டிருக்கிறார்.

இதற்கிடையில் எப்போதும் பொதுத் தேர்தலை நடத்தக் கூடிய நிலை ஒன்று ஏற்படக் கூடும் என்ற வகையில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்திருக்கிறார். அப்படியென்றால் நாடு உண்மையிலேயே தேர்தல் ஒன்றை எதிர்பார்க்கிறதா? என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. இதேவேளை தமது நிர்வாகம் பொறுப்பேற்ற கையோடு மாகாணசபைத் தேர்தல்கள் நடக்கலாம் என புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

கருணாகரன்


Add new comment

Or log in with...