நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதாரக் கொள்கை தேவை | தினகரன்

நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதாரக் கொள்கை தேவை

எமது தேசத்துக்கு உகந்த தேசியக் கொள்கையின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. எமது அரசியல் கலாசார பண்பாடுகளுக்கு ஒத்ததான தேசியக் கொள்கையே எமக்குத் தேவை. நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்கள் கடந்த நிலையில் இன்று வரையில் பொருத்தமானதும், நிலையானதுமான தேசியக் கொள்கையொன்றை வகுக்க முடியாத அவலம் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது. காலத்துக்குக் காலம் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்ற போது பதவிக்கு வரும் கட்சிகள் தமக்குச் சாதகமான கட்சிகளின் கோட்பாடுகளுக்கு அமைவாகவே கொள்கைகளை வகுத்துக் கொள்கின்றன. அதன் காரணமாக நாட்டை சரியான பாதையில் முன்னெடுக்க முடியாத நிலையே தொடர்கின்றது.

சில தினங்களுக்கு முன்னர் திஸ்ஸமகாராமையில் நடைபெற்ற ஏர்பூட்டு விழாவின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது நாட்டுக்குப் பொருத்தமான விதத்தில் பொருளாதாரக் கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார். விவசாயத்தில் பூரணமான தகைமை கொண்ட எமக்கு அத்துறையில் வெளிக்கோட்பாடுகள் அவசியமற்றதெனவும், விவசாயத்தில் தன்னிறைவு கொண்டிருந்த நாம் எமது அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததையும் ஜனாதிபதி நினைவூட்டியுள்ளார்.

நாடு எதிர்கொள்ளக் கூடிய பொருளாதார அவலத்தின் உச்சநிலை கவலை தரக் கூடியதாகும். எமக்குத் தேவையான உணவில் பெரும் தொகையை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். அரிசியைக் கூட இறக்குமதி செய்கின்றோம். எம்மிடம் கடலுணவு கூட தாராளமாகக் கிடைக்கின்றது. அப்படியிருந்தும் கூட நெத்தலி போன்ற கடலுணவுகளும் உருளைக்கிழங்கு, மற்றும் செத்தல் மிளகாயைக் கூட இறக்குமதி செய்கின்றோம். இந்த நிலையை தொடரவிட்டால் எம்மால் எப்படி பொருளாதாரத்தில் முன்னேற முடியும் என்பதை சிந்தித்துப் பாரக்க வேண்டியுள்ளது. எம்மிடம் உறுதியான விவசாயக் கொள்கையொன்று அவசியம்.

தனக்கென தேசியக் கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியம் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும், எந்தவொரு அரசும் அது குறித்து கவனம் செலுத்தவில்லை.

கடந்த காலத்தில் அனைவரும் இந்தத தவறையே செய்து வந்தனர். பெயரளவில் தேசியக் கொள்கை பற்றிப் பேசுகின்றனர். ஆனால் அதனைச் செயலால் உத்தரவாதப்படுத்தத் தவறி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராகப் பதவியேற்று கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உரை நிகழ்த்துகின்ற போது, பிராந்தியத்தில் வேகமாக வெற்றியை பெற்றுக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றியமைத்து சகல இன மக்களுக்கும் ஒரே விதமாகவும் சமமான நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தமது இலக்கு என்று கூறியுள்ளார்.

பிரதமரின் இந்த நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் வெறுமனே பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. எமக்கென நாட்டுக்கென தேசிய பொருளாதாரக் கொள்கையொன்றின் அவசியத்தை உணர வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் காலத்துக்குக் காலம் சவாலை எதிர்கொண்டவாறே உள்ளது. யுத்த காலத்தில் எதிர்கொண்ட சவால் காரணமாக நாட்டின் ஒரு பகுதி மிகமோசமாக பின்னடைவைக் கண்டது. அடுத்து சுனாமி அனர்த்தம் முழு நாட்டையும் பாரிய பின்னடைவுக்குள் தள்ளி விட்டது. அத்துடன் இயற்கை அனர்த்தங்கள் அடிக்கடி ஏற்பட்டு பொருளாதாரத்தை சீர்குலைத்து இவற்றுக்குப் புறம்பாக அரசியல் நெருக்கடிகளாலும் நாடு மோசமாக பாதிக்கப்படும்.

பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கைகளில் தெரிவிக்கப்படும் கணக்குகளை ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவே பார்க்க முடிகிறது. மக்கள் இதன் மூலம் தவறாக வழிநடத்தப்படுவதாகவே உணர முடிகிறது. மத்திய வங்கி அறிக்கைகள் கூட சில சந்தர்ப்பங்களில் கேள்விக்குள்ளாக்கப்படக் கூடிய வகையிலேயே காணப்படுகின்றன.

நாட்டின் பொருளாதாரத்தை சரியான வகையில் கட்டியெழுப்பினால் மட்டுமே மக்களையும், தேசத்தையும், மீண்டெழச் செய்ய முடியும். எமக்கான தேசிய வேலைத் திட்டத்தை வகுத்துச் செயற்பட வேண்டியது மிக முக்கியமானதொன்றாகும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

நாட்டுக்காக தேசியக் கொள்கைத் திட்டத்தின் அவசியத்தை இனியாவது உணர வேண்டும். அரசியலமைப்பில் இந்த பொதுத் தேசியக் கொள்கை உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். விவசாயம், வர்த்தகம், உள்ளூர் உற்பத்தி, அரசியல் என சகல அம்சங்களும் இந்த தேசியக் கொள்கையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பரந்தளவிலான நோக்கங்களை உள்வாங்கியதாக தேசியப் பொருளாதார கொள்கை அமைய வேண்டும். அது நாட்டுக்குப் பொருத்தமானதாகவும், சகலராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகவும் அமைவது இன்றியமையாததாகும்.

மிக முக்கியமான விடயத்தை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். வகுக்கப்படக் கூடிய தேசிய கொள்கைத் திட்டமானது, எவராலும் நிராகரிக்க முடியாத ஆட்சிகள் மாறினாலும் அதே தேசியக் கொள்கையையே பின்பற்றக் கூடியதாகவும் உறுதி செய்யப்படல் வேண்டும். இதன் பொருட்டு அனைத்துக் கட்சிகளையும் புத்திஜீவிகளையும், அரசியல் ஆய்வாளர்களையும் உள்ளடக்கிய பரந்துபட்ட குழுவொன்றின் மூலம் தேசியக் கொள்கைத் திட்டம் வகுக்கப்படுவதன் ஊடாக அது சக்திமிக்கதாக அமைய முடியும். இத்தகையதொரு தேசியக் கொள்கை வகுக்கப்படாத வரை எமது நாட்டில் அரசியல், பொருளாதார எழுச்சியை உத்தரவாதப்படுத்த முடியாது போகும். சகல தரப்பினரும் இவ்விடயத்தில் தூரநோக்குடன் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றோம்.


Add new comment

Or log in with...