மக்களுக்கு சிறந்த சேவை செய்ய அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் | தினகரன்

மக்களுக்கு சிறந்த சேவை செய்ய அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்

கடந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு உரிய முறையில் சேவை செய்யப்படாத காரணமாக மீண்டும் ஒருமுறை இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்து இருப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இச் சந்தர்ப்பத்தில் எமது மக்களை ஏமாற்றத்துக்கு அல்லது அசௌகரியத்துக்குள்ளாக்காமல், உரிய நேரத்தில் உரிய சேவையை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேற்று (31) தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், மக்களுக்கு அவசியமான சேவைகளை வழங்கும்போது உத்தியோகத்தர்களுக்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படுமாயின், அவ்வாறான எல்லாப் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வதற்கு முன்வருவேன். அவசியமான எந்தவொரு வேளையிலும் பிரச்சினைகளை முன்வைக்க என்னிடம் வரலாம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அத்துடன் முறைகேடுகளின்றி மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு நாம் செயலாற்ற வேண்டும்.

அதற்காக உத்தியோகத்தர்களுக்கு அவசியமான ஒத்துழைப்பையும் வழிகாட்டலையும் உதவிகளையும் வழங்க நான் தயாராக உள்ளேன். அரசியலில் இவ்விடத்தில் எந்த ஒருவரும் இருக்கலாம் என்றபோதும் அரசாங்கத்தின் கொள்கைகளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் அர்ப்பணித்துச் செயலாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அமைச்சுக்கு அனுபவம் வாய்ந்த, சிறந்த, திறமையான செயலாளர் ஒருவர் ஜனாதிபதியினாலும் பிரதமரினாலும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இங்கிருக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மிகவும் அனுபவமுள்ளவர்கள். அதன் காரணமாக அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச்செல்வதற்கு அவசியமான ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் அல்லும்பகலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஒருவன் என்ற வகையில் உங்கள் அனைவருக்கும் இருக்கின்ற புதிய கருத்துக்களையும் நிலவுகின்ற பிரச்சினைகளையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னிடம் முன்வைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி, அமைச்சின் ஆலோசகர் கலாநிதி விக்னேஸ்வரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

 

 


Add new comment

Or log in with...