Home » இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவராக உபுல் தரங்க நியமனம்

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவராக உபுல் தரங்க நியமனம்

by gayan
December 6, 2023 9:14 am 0 comment

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக் குழு தலைவராக இலங்கை அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறை அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதம் நேற்று முன்தினம் (04) நடைபெற்றபோது விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.

இதன்படி பிரமோத்ய விக்ரமசிங்கவுக்கு பதிலாகவே தரங்க புதிய தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரமோத்ய விக்ரமசிங்க 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த நாமல் ராஜபக்ஷவின் பரிந்துரை அடிப்படையில் தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு குறைந்தது சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தகுதிபெறத் தேவையான முதல் எட்டு இடங்களுக்குள் முன்னேறாமல் வெளியேறியது. இதனையடுத்து இலங்கை தேர்வுக் குழுவினர் மீதும் விமர்சனங்கள் வலுத்த நிலையிலேயே இந்த மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான தேர்வுக் குழுவில் முன்னாள் விக்கெட் காப்பாளர் ருமேஷ் களுவிதாரண, ஹேமன்த விக்ரமரத்ன, வருண வராகொட, எஸ்.எச்.யு. கர்னைன் மற்றும் பி.ஏ. திலகா நில்மினி குணரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எவ்வாறாயினும் புதிய தேர்வுக் குழுவில் இடம்பெறும் மற்ற உறுப்பினர்கள் விபரத்தை அமைச்சர் பெர்னாண்டோ வெளியிடவில்லை.

தரங்கவின் தேர்வுக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அஜந்த மெண்டிஸ் மற்றும் தரங்க பரணவிதான ஆகியோரும் இடம்பெற்றிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

தேர்வுக் குழுவை நியமிப்பதற்காக 10 பேரின் பெயரை இலங்கை கிரிக்கெட் பரிந்துரைத்திருப்பதாகவும் அது தொடர்பில் அவதானம் செலுத்தி புதிய கிரிக்கெட் தேர்வுக் குழு ஒன்றை நியமிப்பதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

38 வயதான உபுல் தரங்க கடந்த 2021 பெப்ரவரியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோதும், முதல்தர போட்டிகளில் தொடர்ந்து ஆடி வருகிறார். அவர் கடந்த நவம்பரில் பிரதான கழக மட்டப் போட்டியில் என்.சி.சி. அணிக்காக ஆடினார்.

இலங்கை ஒருநாள் அணித் தலைவராக செயற்பட்ட தரங்க, 2019 ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். 235 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 15 சதங்கள் மற்றும் 37 அரைச்சதங்களுடன் 6951 ஓட்டங்களை பெற்றுள்ளார். தவிர அவர் 31 டெஸ்ட் மற்றும் 26 டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி சிம்பாப்வேயுக்கு எதிராக எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. சிம்பாப்வே வரும் இலங்கை அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடவுள்ளது.

உபுல் தரங்கவின் தலைமையிலான புதிய தேர்வுக் குழுவின் முதல் பணியாக இந்தத் தொடருக்கான இலங்கை அணியை தேர்வு செய்வது அமையும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT