கொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது | தினகரன்


கொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது

கொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது-Kottawa-Maththegoda People's Bank Robbery-4 Arrested

பாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்

கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (26) பிற்பல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், குறித்த மக்கள் வங்கி கிளையினுள் ஆயுதத்துடன் நுழைந்த மூவர் பெருந்தொகையான பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து கல்கிஸ்ஸை பிரிவின் விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர்கள் மூவர் மற்றும் கொள்ளை தொடர்பான விடயத்திற்கு உதவிய சந்தேகநபர் உள்ளிட்ட நால்வர் இன்று (30) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதுக்கை வேரகலவைச் சேர்ந்த 34, 38 வயதுடைய இருவரும் பாதுக்கை போபேயைச் சேர்ந்த ஒருவரும், 40 வயதுடைய பொத்துவில் பாணமையைச் சேர்ந்த 41 வயதான சந்தேக நபர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் வங்கியில் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுமார் ரூபா 97 இலட்சம் பணம் மற்றும் சுமார் ரூபா 4.93 கோடி பெறுமதியான தங்க ஆபரணங்கள் என்பன, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரின் வீட்டின் பின்புறமாக புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் கொள்ளையிட்ட பின்னர் குறித்த மக்கள் வங்கி கிளையின் CCTV கமெரா காட்சிகளை சேமிக்கின்ற உபகரணத்தை ( DVR) எடுத்துச் சென்று இருந்ததோடு மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் in உறவினர் ஒருவரான  38 வயதான பாதுக்கை வேரகலவைச் சேர்ந்த சந்தேகநபர், குறித்த உபகரணத்தை ஹங்வெல்ல பழைய வீதி பிரதேசத்தில் களனி ஆற்றில் வீசியமை தெரியவந்துள்ளது.

குறித்த உபகரணத்தை தேடும் பணிக்காக விசாரணைக் குழுவொன்று குறித்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்  கல்கிஸ்ஸை பிரிவின் விசேட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...