கைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE) | தினகரன்


கைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)

தெமட்டகொடை சம்பவம் தொடர்பில் அர்ஜுன ரணதுங்க கைது-Arjuna Ranatunga Arrested by CCD Over CPC Shooting Incident

பாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்

தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (29) பிற்பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே அவரை, ரூபா 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற்கொண்டமை தொடர்பில் நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்ட அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெமட்டகொடை சம்பவம் தொடர்பில் அர்ஜுன ரணதுங்க கைது 4.40pm

பெற்றோலிய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர்

தெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் பிரிவினரால் இன்றையதினம் (29) அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்ததோடு, ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெமட்டகொடை சம்பவம் தொடர்பில் அர்ஜுன ரணதுங்க கைது-Arjuna Ranatunga Arrested by CCD Over CPC Shooting Incident

தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைமையகத்திற்கு அருகில் நேற்று (28) அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 34 வயதான பெற்றோலிய கூட்டுத்தான ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து குறித்த பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத் தொடர்பில், அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு வலியுறுத்தி, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒரு சங்கங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த கைது நடவடிக்கையை அடுத்து தற்போது குறித்த பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அர்ஜுன ரணதுங்க  சென்றிருந்த வேளை அங்கு அமைதியற்ற நிலை தோன்றியுள்ளது. இதன்போது அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தெமட்டகொடை சம்பவம் தொடர்பில் அர்ஜுன ரணதுங்க கைது-Arjuna Ranatunga Arrested by CCD Over CPC Shooting Incident

தனது அமைச்சு தொடர்பான விடயம் கருதி, குறித்த இடத்திற்கு சென்றிருந்த வேளையில், தடிகளுடன் வந்த சுமார் 50 இற்கும் மேற்பட்டோர் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக, அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

இதன்போது, ஒரு சிலர் தனது பாதுகாப்பு அதிகாரியின் ஆயுதத்தை பறிக்க முயற்சித்ததாகவும், அவ்வேளையில் தன்னை பாதுகாக்க துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தை அடுத்து, அவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு, விசேட அதிரடிப் படையின் சீருடை அணிவிக்கப்பட்டு அங்கிருந்து மீட்கப்பட்டு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தெமட்டகொடை சம்பவம் தொடர்பில் அர்ஜுன ரணதுங்க கைது-Arjuna Ranatunga Arrested by CCD Over CPC Shooting Incident


Add new comment

Or log in with...