நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும் | தினகரன்

நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும்

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாயின் கைதிகள் விடுவிப்பு, காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டுமென்பதை தமிழரசுக் கட்சியிடம் வலியுறுத்துவதாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை இரு தரப்பினரும் கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்த நிபந்தனைகள் முன்வைக்கப்படுவது அவசியம் என சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு, காணாமல்போனோர் விவகாரம் உள்ளிட்டவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும்.

இதில் கைதிகள் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு என்பவற்றை உடனடியாகச் செய்ய முடியும் என்பதால் அவற்றை முன்நிபந்தனையாக வைத்து ஆதரவு வழங்கும் தீர்மானத்தை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுக்க வேண்டும் எனக் கோருவதாகச் சுட்டிக்காட்டினார்.

இந்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் வரவு செலவுத் திட்டத்தின் போது அவர்களுக்கான ஆதரவை விலகிக்கொள்ள வேண்டும் எனவும் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரவிருப்பதாக சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

தற்போது தோன்றியுள்ள அரசியல் நெருக்கடிச் சூழலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டணியாக இணைந்தே முடிவெடுக்க வேண்டும்.

தமிழ் அரசுக் கட்சி தனிமையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு ஏனைய கட்சிகள் மீது அதனை திணிக்க முயலக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும் சிறந்த சந்தர்ப்பத்தை அவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...