Home » வடக்கு கிழக்கு மக்களின் நிலைப்பாட்டை அங்குள்ள எம்பிக்கள் பிரதிபலிப்பதில்லை

வடக்கு கிழக்கு மக்களின் நிலைப்பாட்டை அங்குள்ள எம்பிக்கள் பிரதிபலிப்பதில்லை

சபையில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச

by damith
December 5, 2023 9:10 am 0 comment

வடக்கு, கிழக்கில் அங்குள்ள தமிழ் பிரதிநிகளை விடவும் பத்து மடங்கு அதிகமான சேவையை, தாமே செய்துள்ளதாகவும் தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டை அங்குள்ள எம்பிக்கள் பிரதிபலிப்பதில்லை என்றும் நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே அவர்கள் பாராளுமன்றத்தில் இனவாதம் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சிங்கள மக்களை அழித்து நாட்டை பிளவுபடுத்துவது பிரபாகரனின் நோக்கமல்ல என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்து வரலாற்றை அழிக்கும் நோக்கிலேயே அவர் செயற்பட்டதாகவும் இந்து மத தமிழ் தலைவர்களை அவர் படுகொலை செய்தமைக்கும் அதுவே காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் தமிழ் பிரதிநிதிகள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் என சபையில் தெரிவித்த அவர், சுமந்திரனின் கருத்துக்கள் முற்றிலும் தவறானது என்றும் தன்னை கொலை செய்ய வந்தவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத சுமந்திரன்,ஏனையவர்களின் விடயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இளைஞர் விவகார, விளையாட்டுத் துறை மற்றும் மகளிர், சிறுவர் பாதுகாப்பு அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், நீதியமைச்சராக நான், பதவி வகிப்பதையிட்டு வெட்கமடைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ.சுமந்திரன் நீதியமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார். அது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

மட்டக்களப்பு பகுதியிலுள்ள பிக்கு ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் என்மீது குற்றம் சாட்டியுள்ளார்.

நீதியமைச்சரால் அவரை எவ்வாறு கைது செய்ய முடியும்?. வெறுக்கத்தக்க கருத்தை அந்த மத குரு குறிப்பிட்டிருந்தால் பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள். விசாரணைகளை பொலிஸ் மேற்கொள்ளும் என்று நான் குறிப்பிட்டேன், அத்துடன் மாவீரர் நிகழ்வுகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிபதிகள் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதையிட்டு நீதியமைச்சர் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீதிபதிகள் சுயாதீனமாக செயற்படுவதையிட்டு நீதியமைச்சர் ஏன் வெட்கப்பட வேண்டும் என கேட்க விரும்புகிறேன்.

உண்மையில், இதற்காக நான்,பெருமைப்பட வேண்டும். அதேவேளை, நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதையிட்டு நீதியமைச்சர் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுமந்திரன் எம்.பி முன்வைத்துள்ள இந்த மூன்று விடயங்களையும் சாதாரண பிரஜை ஒருவர் குறிப்பிட்டிருந்தால் அதற்கு பதிலளிக்கலாம், ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் இவ்வாறு குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என்றே நான் தெரிவிக்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் எம்.சு.சுமந்திரனை கொலை செய்வதற்கு புலம்பெயர் அமைப்பினர் 20 இலட்சம் ரூபா ஒப்பந்தம் செய்தார்கள்.சுமந்திரனின் உயிரின் பெறுமதி 20 இலட்சமா என்பது ஆச்சரியத்துக்குரியது.இந்த ஒப்பந்தத்துக்கு அமைய சுமந்திரனை கொலை செய்ய முற்பட்ட ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த ஐவருக்கும் எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னை கொலை செய்ய முற்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சுமந்திரன் குறிப்பிடுகிறார். ஆனால் ஏனையவர்களை கொன்றவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது என்கிறார். பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டின் சட்டம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT