ஹெரோயின் விழுங்கி வந்த 67 வயது பெண் உள்ளிட்ட இருவர் கைது | தினகரன்

ஹெரோயின் விழுங்கி வந்த 67 வயது பெண் உள்ளிட்ட இருவர் கைது

ஹெரோயின் விழுங்கி வந்த 67 வயது பெண் உள்ளிட்ட இருவர் கைது-Herion Swallowed Pakistan Man And Women Arrested
(வைப்பக படம்)

ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது.

நேற்று (25) பிற்பகல் 2.50 மணியளவில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த குறித்த இரு சந்தேகநபர்களும் விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் பிரிவு அதிகாரிகளினால் சோதனையிட்ட போது அவர்கள் இருவரும் ஹெரோயினை கொண்ட பொதிசெய்யப்பட்ட உருண்டைகளை விழுங்கி, கடத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது குறித்த 67 வயதுடைய பெண்ணால் விழுங்கப்பட்ட 35 ஹெரோயின் உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், லாகூரைச் சேர்ந்த மற்றைய 44 வயதான சந்தேகநபர், தான் ஹெரோயின் உருண்டைகளை விழுங்கியுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளபோதும், இதுவரை அவரிடமிருந்து எவ்வித ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தற்போது வரை குறித்த பெண்ணிடமிருந்து 35 ஹெரோயின் உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதன் எடை 350 கிராம் எனவும் அதன் பெறுமதி ரூபா 40 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் இருவரையும் இன்றைய தினம் (26)  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, அவர்களை 7 நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் போதை பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...