சுமார் 3,000 தோட்டா மீட்பு சம்பவம்; மேஜர் உள்ளிட்ட மூவர் கைது | தினகரன்

சுமார் 3,000 தோட்டா மீட்பு சம்பவம்; மேஜர் உள்ளிட்ட மூவர் கைது

சுமார் 3,000 தோட்டா மீட்பு சம்பவம்; மேஜர் உள்ளிட்ட மூவர் கைது-T56-2958 Bullets-Army Major and 2 Army Soldiers Arrested

T56 ரக துப்பாக்கிகளின் 2,958 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட இராணுவத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) முற்பகல் 10 மணியளவில் சியம்பலாண்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சியம்பலாண்டுவ, தொம்பகஹவெல பிரதேசத்தில் வைத்து, வெல்லவாய நோக்கி சென்ற வேன் ஒன்றில் பயணித்த சந்தேகநபர்களின் பயணப்பொதியை பரிசோதித்தபோது, அதில் T56 ரக துப்பாக்கியிற்கான தோட்டாக்கள் 2,958 கைப்பற்றப்பட்டதோடு கைத்துப்பாக்கி (Pistol) இற்கு பயன்படுத்தப்படும் 9 மில்லி மீற்றர் வகை தோட்டாக்கள் 32 உம் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவத்தில், லத்து ரொஷான் எனும் ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கொஸ்கொட சுஜீ என்பவரின்  உதவியாளரான, தற்போது காலி சிறைச்சாலையில் உள்ள ஜயலத் சுத்தா என்பவரினால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, குறித்த தோட்டாக்கள் சியம்பலாண்டுவவிலிருந்து காலி நோக்கி கொண்டு செல்லப்பட்ட வேளையிலேயே இவ்வாறு தாம் கைது செய்யப்பட்டதாக சந்தேக நபரிடமிருந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அதற்கமைய இன்று (245)  சியம்பலாண்டுவ பொலிசாரால், குறித்த சம்பவம் தொடர்பில் பதவி பராக்கிரமபுர இராணுவ முகாமின் மேஜர் ஒருவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளியாபிட்டிய, மூணமல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த, 40 வயதான ஷிரந்த சஞ்ஜீவ திஸாநாயக்க எனும் இராணுவ மேஜர், மற்றும் ஹெட்டிபொலவையை வசிப்பிடமாகக் கொண்ட, அகில சம்பத் (29) லான்ஸ் கோப்ரல் மற்றும் மஹியங்கணை கல்வலவை வசிப்பிமாகக் கொண்ட, மலிந்த மதுசங்க (20) எனும் இராணுவ சிப்பாய் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இராணுவ மேஜர் தங்கியிருந்த வீட்டிற்கு பின்னாலிருந்த காட்டுப் பிரதேசத்தில் தோட்டாக்கள் வைக்கும் 4 பெட்டிகள், பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சியம்பலாண்டுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...