அதி விரைவாக 10,000 ஓட்டங்கள் கடந்து விராத் கோலி சாதனை | தினகரன்

அதி விரைவாக 10,000 ஓட்டங்கள் கடந்து விராத் கோலி சாதனை

அதிவிரைவாக 10,000 ஓட்டங்கள் கடந்த முதல் வீரரானார் விராத் கோலி-Virat Kohli Fastest 10,000 Runs

பல சாதனைகள் பதிவு; போட்டி சமனிலையில் முடிவு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளாசிய சதம் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிக விரைவாக 10000 ஓட்டங்கள் கடந்த வீரர் என்ற மைல்கல்லை எட்டினார் விராத் கோலி.

நேற்று இந்தியாவின் விசாகபட்டினம் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியிலேயே இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.

இம்மைல்கல்லை எட்ட 81 ஓட்டங்கள் தேவை எனும் நிலையில் தனது இன்னிங்ஸை ஆரம்பித்த விராத் கோலி போட்டியின் 37 ஆவது ஓவரில் பெற்ற ஒரு ஓட்டத்துடன் இச்சாதனைக்கு சொந்தக்காரரானார்.

முன்னதாக இச்சாதனை முன்னாள் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 259 போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்தமையே இது வரை சாதனையாக அமைந்திருந்தது. எனினும் விராத் கோலி 205 போட்டிகளில் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இது தவிர மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 6 சதங்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கேதிராக 1,684 ஓட்டங்களை பெற்று அவ்வணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் பெற்ற வீரரானார்.

இது தவிர விராத் கோலி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிராக தொடர்ச்சியாக 3 சதங்கள் பெற்ற வீரர் என்ற சாதனையையும் நிலை நாட்டினார்.

இதன்போது, சொந்த மண்ணில் மிகவிரைவாக 4,000 ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்திக் கொண்டார் கோலி. இவ்வாறு இன்னும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகிய கோலி, நேற்றைய (24) போட்டியில் ஆட்டமிழக்காமல் பெற்ற 157 ஓட்டங்களுடன் அணித்தலைவராக 150 ஓட்டங்களை இருமுறை கடந்த இரண்டாவது வீரராக தனது பெயரை பதிவு செய்தார். இச்சாதனைக்கு முதன்மையானவராக இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திரம் அண்ட்ரூ ஸ்ட்ரோஸ் திகழ்கிறார்.

இவ்வாறு விராத் கோலியின் சாதனைப்போட்டியாக அமைந்த நேற்றைய போட்டி துரதிஷ்டவசமாக, சமநிலையில் முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 321 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக விராத் கோலி ஆட்டமிழக்காமல் 157 ஓட்டங்களையும் அம்பாதி ராயுடு 73 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அஸ்லி நேர்ஸ் மற்றும் மெக்கோய் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் சாமுவேல்ஸ் மற்றும் ரோச் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் பெற்றனர்.

322 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக சாய் ஹோப் மிகச் சிறப்பாக ஆடி, ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களைப் பெற்றதோடு ஹெட்மேயர் 94 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியின் இறுதி ஓவரில், 14 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில், யாதவ் வீசிய முதலாவது பந்தில் ஒரு ஓட்டம் பெறப்பட்டது (309), அதனைத் தொடர்ந்து இரண்டாவது பந்தில் 4 ஓட்டங்கள் உதிரிகளாக பெறப்பட்டது (313). மூன்றவாது பந்தில் 2 ஓட்டங்கள் பெறப்பட்டதை அடுத்து (315), மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 3 பந்துகளில் 7 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இறுதி ஓவரின் 4 ஆவது பந்துவீச்சில் நேர்ஸ் ஆட்டமிழந்ததையடுத்து, 2 பந்துகளில் 7 ஓட்டங்களை பெற வேண்டிய நிலைக்கு மேற்கிந்திய தீவுகள் அணி தள்ளப்பட்டது.

அந்த வகையில் 5 ஆவது பந்தில் 2 ஓட்டங்கள் பெறப்பட்டது (317). அதனைத் தொடர்ந்து ஒரு பந்தில் 5 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில், அவுட்சைட் ஓப் திசையில் அடித்த பந்தை ராயுடு மைதானத்தின் எல்லையில் தடுக்க முயன்ற போதும் அது 4 ஓட்டங்களாக மாறியது (321).

1.4lb.2.W.2.4

அதற்கமைய போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும் முஹமட் சமி, உமேஷ் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக விராத் கோலி தெரிவு செய்யப்பட்டார்.

இந்தியா 321/6 (50)
விராத் கோலி 157* (129)
அம்பாதி ராயுடு 73 (80)

அஸ்லி நேர்ஸ் 2/46 (10)
மேக்கோய் 2/71 (09)
சாமுவேல்ஸ் 1/36 (05)
கெமர் ரோச் 1/67 (10)

மேற்கிந்தியத்தீவுகள் 321/7 (50)
சாய் ஹோப் 123* (123)
ஹெட்மியர் 94 (64)

குல்தீப் யாதவ் 3/67 (10)
மொஹமட் சமி 1/59 (10)
உமேஷ் யாதவ் 1/78 (10)
சாஹல் 1/63 (10)

- அஸாfப் மொஹமட்


Add new comment

Or log in with...