நாகூர் பாபுக்கு 'மனோ' என பெயர் வைத்தவர் யார்? | தினகரன்


நாகூர் பாபுக்கு 'மனோ' என பெயர் வைத்தவர் யார்?

பிரபல பின்னணி பாடகர் மனோவின் இயற்பெயர் நாகூர் பாபு. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சட்டேனபல்லியில் 1965 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தை ரசூல், விஜயவாடா வானொலி நிலையத்தில் பணியாற்றியவர் . தாயார் ஷகீதா மேடை நடிகையாக இருந்தார். இதனால் சிறு வயதிலிருந்தே நடிப்பும் பாடும் திறனும் இவருக்கு இயல்பாகவே அமைந்தது.

பிரபல பாடகர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் கர்நாடக இசையை பயின்ற இவர். 1970 ஆம் ஆண்டில் ரங்கூன் ரவுடி மற்றும் கேது Gadda போன்ற தெலுங்கு படங்களில் துணை பாத்திரங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து நாடகங்களிலும் பதினைந்துக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது .

தந்தையின் உதவியால் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அறிமுகம் கிடைக்க அவரது இசையில் பாடுவதற்காக சென்னை வந்தார். இவர் அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்த இவர், 1984ஆம் ஆண்டுமுதல் தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணிபுரியத் ஆரம்பித்தார். அவரது இசையில் உருவான கற்பூரதீபம் என்கிற படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா இசையில் ஒரு பாடலை பாடினர்.

1986ஆம் ஆண்டு தமிழில் பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற "அண்ணே அண்ணே" பாடலைப் பாடும் வாய்ப்பை இவருக்கு வழங்கினார் இசைஞானி இளையராஜா. தொடர்ந்து எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் "செண்பகமே", "மதுரை மரிக்கொழுந்து வாசம்" பாடல்களைப பாடும் வாய்ப்புகளை இவருக்குத் தந்தார் இளையராஜா. இந்தப் பாடல்கள் இவருக்கு பெரும் புகழை தந்தன .

ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் படத்தில் "வா வா கண்ணா வா", "வேலையில்லாதவன்" போன்ற பாடல்கலை பாடினர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் காதலன் படத்தில் "முக்காலா முக்காபலா", முத்து படத்தில் "தில்லானா தில்லானா" பாடல்களை பாடினர். சிற்பி இசையில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் "அழகிய லைலா", வித்யாசாகர் இசையில் கர்ணா படத்தில் "ஏ ஸபா" போன்ற பாடல்களை பாடினர். இந்தப் பாடல்கள் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரது இசையிலும் பாடும் வாய்ப்பினைப் பெற்றார் இவர் .

கே.எஸ் சித்ரா, ஸ்வர்ணலதா, ஜானகி ஆகிருடன் இணைந்து ஏராளமான டூயட் பாடல்கள் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, இந்தி ஆகிய மொழிகளில் 1,200 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் இவர் 250 நாடகங்களிலும், 3000 மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்,

கமல் நடித்த அத்தனை படங்களுக்கும் தெலுங்கு மொழியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்தார் என்றால் ரஜினி நடித்த பல படங்களுக்கு தெலுங்கில் குரல் கொடுத்தவர் இவர் .

அனைத்து இசையமைப்பாளர்களுடனும் அவர் பணியாற்றினாலும் இசைஞானி இளையராஜா இசையில்தான் இவர் அதிகம் பாடியுள்ளார். நாகூர் பாபு என்கிற இவரது பெயரை மனோ என்று மாற்றி வைத்தவரும் இசைஞானி இளையராஜாதான்

கமல் நடித்த சிங்காரவேலன் படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள இவர் இப்போது சின்னத்திரையில் நடக்கும் இசைப் போட்டிகள் பலவற்றிற்கு நடுவராக இருக்கிறார்.

சின்னத் தம்பி படத்தில் பாடிய "தூளியிலே" என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்ற இவர். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் ஆந்திர அரசின் நந்தி விருது, கண்டசாலா விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவரது மனைவியின் பெயர் ஜமீலா. இவர்களுக்கு ஷாகீர், ராபி என்கிற இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மனோவின் பாடல்களில் மட்டுமின்றி பழகும் தன்மையிலும் இனிமை இருக்கும் இவரது வெற்றியின் இரகசியம் அதுதான் என்றால் அது மிகையில்லை.


Add new comment

Or log in with...