Friday, March 29, 2024
Home » வெள்ளத்தில் மூழ்கியது சென்னை மாநகரம்!

வெள்ளத்தில் மூழ்கியது சென்னை மாநகரம்!

மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ச்சியான பலத்தமழை!

by damith
December 5, 2023 11:25 am 0 comment

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. திரும்பிய திசையெல்லாம் மழைநீர் சூழ்ந்துள்ளதால், சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பள்ளிக்கரணை, மேடவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி வெள்ளத்தினால் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

பள்ளிக்கரணையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் தரைதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றை மீட்பதற்கு அதன் உரிமையாளர்கள் போராடினர்.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கார்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கயிறு உள்ள்ளிட்டவற்றின் மூலம் தரைத் தளத்தில் நின்று கொண்டிருக்கும் மற்றைய கார்களை பத்திரப்படுத்தினர். மிக்ஜாம் புயலால் சென்னையில் பலத்த காற்றுடன் நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம் நேற்றும் பலத்தமழை பெய்தது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ரயில் நிலையங்களிலும், தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கியதாலும், புயல் காற்று வீசுவதாலும் ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல்_ – அரக்கோணம், சென்னை – கடற்கரை_ செங்கல்பட்டு வழித்தடங்களில் புறநகர் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதே போல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், மைசூர் சதாப்தி, பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், பெங்களூர் ஏசி டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ், திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய 6 விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

விமான நிலையத்திலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT