Thursday, March 28, 2024
Home » பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி நீதிபதிகளுக்கு எதிராக கருத்துக்கூற முடியாது

பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி நீதிபதிகளுக்கு எதிராக கருத்துக்கூற முடியாது

by damith
December 5, 2023 7:40 am 0 comment

* சட்டத்துறை, நீதித்துறையின் இணக்கப்பாடுகளே பிரதானம்

* ரிஷாட் பதியுதீன் எம்.பி மன்னிப்புக்கோர வேண்டும்

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிபதிகளுக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்க முடியாது என நீதி, அரசியலமைப்பு மறு சீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த வகையில் முஸ்லிம் நீதியரசர் ஒருவரை சபிப்பதாக சபையில் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எம்.பி, இதற்காக பாராளுமன்றத்தின் ஊடாக பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று அமைச்சர் சபையில் கேட்டுக்கொண்டார். தமது அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணையிலிருந்து விலகியுள்ள முஸ்லிம் நீதியரசரை சபிப்பதாக ரிஷாட் பதியுதீன் எம், பி சபையில் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது. இதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிபதிகளுக்கு எதிராக அவ்வாறு கருத்துக்களை முன்வைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து சபையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

நீதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனது வழக்கு விவகாரத்தை குறிப்பிட்டு மேற்படி ‘நீதியரசரை சபிப்பதாக ‘குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில், நீதியரசர் நவாஸ் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்.அவர் ஒருபோதும் மதத்தை முன்னிலைப்படுத்தி கடமையாற்றுபவர் அல்ல.கௌரவமான வகையில் அவர் தனது பணிகளை முன்னெடுத்துச் செல்பவர்.

ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவேளை, முதலாவதாக நீதியரசர் ஜனக் டி சில்வா அதிலிருந்து விலகிக் கொண்டார்.

வில்பத்து காடழிப்பு விவகாரத்தில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இவர் தீர்ப்பு வழங்கியதால், அந்த வழக்கிலிருந்து விலகியிருப்பார் என எண்ணத் தோன்றுகிறது. அதேபோன்று, இரண்டாவதாக நீதியரசர் சமயவர்தன தனிப்பட்ட காரணங்களை முன்னிலைப்படுத்தி வழக்கிலிருந்து விலகினார். மூன்றாவதாக நீதியரசர் யசந்த கோடாகொட வழக்கிலிருந்து விலகினார்.இவர் விலகியதற்கான காரணத்தை நான் குறிப்பிட விரும்பவில்லை. ஏனெனில், இதற்கான காரணத்தைக் குறிப்பிட்டால் அது ரிஷாட் பதியுதீனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இறுதியாக நீதியரசர் ஏ.எச்.நவாஸ் முன்னிலையில் குறித்த அடிப்படை உரிமை மீறல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அவரும் வழக்கிலிருந்து விலகினார். அவர் ஏன் விலகினார் என்பதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. அவர் மீது முன்வைக்கப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டை தொடர்ந்து, அவ்விடயம் தொடர்பில் நான்,ஆராய்ந்தேன்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்தினமிரவு இந்த வழக்கில் முன்னிலையாகிய சட்டத்தரணி ஒருவர் நீதிபதிக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு ‘உங்கள் முன்னிலையில் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் சிரேஷ்ட சட்டத்தரணிக்கு உண்டு’ என குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் மறுநாள் காலையில் அந்த சிரேஷ்ட சட்டத்தரணி தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ‘இந்த வழக்கில் முன்னிலையாக வேண்டாம்’ என்று நீதியரசர் நவாஸிடம் குறிப்பிட்டுள்ளார்.இதனை, நீதியரசர் நவாஸ் பிரதம நீதியரசரிடம் குறிப்பிட்டுள்ளார்.அதன் பின்னரே அவர் வழக்கு விசாரணையிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.

அந்த வகையில், நீதியரசர் நவாஸ் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்ட கருத்து பாரதூரமானது. முஸ்லிம்களுக்காக இவர் முன்னிலையாவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.நீதியரசர் நவாஸ் தொடர்பில் இவர் எமக்கு கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை.

நீதியரசர் நவாஸிற்கு எதிராக நான் பல வழக்குகளில் முன்னிலையாகியுள்ளேன்.அவர் இனவாதத்தை தோளில் சுமந்து கொண்டு சேவையாற்றுபவர் அல்ல.

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு நீதிபதிகளை விமர்சித்து,சபித்தால் எவ்வாறு சட்டத்துறையும், நீதித்துறையும் இணக்கமாக செயற்பட முடியும்? ராஜபக்ஷக்களின் வழக்குகளுக்கு நீதியரசர் நவாஸ் முன்னிலையாவதாகவும் ரிஷாட் எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT