Tuesday, April 23, 2024
Home » தெற்கு காசா பகுதியை நோக்கி இஸ்ரேல் படை முன்னேற்றம்

தெற்கு காசா பகுதியை நோக்கி இஸ்ரேல் படை முன்னேற்றம்

மக்கள் வெளியேற இடமின்றி அல்லல்

by damith
December 5, 2023 6:00 am 0 comment

தெற்கு காசாவில் தரைவழி தாக்குதல் ஒன்றுக்கு வழிவகுக்கும் வகையில் அங்குள்ள முக்கிய நகரான கான் யூனிஸில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பான இடங்கள் என்று நம்பப்படும் பகுதிகளிலும் குண்டுகள் விழுந்து வரும் நிலையில் மக்கள் அவநம்பிக்கையுடன் வெளியேறி வருகின்றனர்.

இஸ்ரேலிய இராணுவம் நேற்று (4) எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கான் யூனிஸில் மஞ்சள் நிறத்தில் அடையாளமிடப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை ஒரே நேரத்தில் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று அம்புக்குறிகளால் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளை குறிப்பிட்டு, மக்களை மத்தியதரைக் கடல் மற்றும் எகிப்து எல்லையை நோக்கி மேலும் வெளியேறிச் செல்லும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஏற்கனவே மற்ற இடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் எந்த வசதியும் இன்றி தங்கி இருந்த மக்களே கைகளில் சுமக்கக் கூடிய அளவான உடைமைகளுடம் மேலும் வெளியேறிச் செல்ல வேண்டிய நிலைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

வடக்கில் காசா நகரில் இருக்கும் தனது வீட்டை கைவிட்ட நிலையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது இது மூன்றாவது முறை என்று அபூ முஹமது என்பவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

“முந்தைய இரவில் இஸ்ரேலிய டாங்கிகள் கிழக்கு, வடக்காக இருந்தும் கடல் பக்கமாக (போர் கப்பல்கள்) மேற்கில் இருந்தும் கூட எம்மை சுற்றி வீடுகள் அதிரும் அளவுக்கு குண்டுகளை வீசியதோடு இந்த வெடிப்புகளால் வானம் சிவப்பாக மாறி பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர்” என்று அவர் விபரித்தார்.

“அவர்கள் எங்களை இங்கே கொல்ல திட்டமிட்டிருந்தால், காஸாவில் (நகரம்) எங்கள் வீடுகளில் இருந்து எங்களை ஏன் வெளியேற்றினார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இஸ்ரேல் இராணுவத்தினர் துண்டு பிரசுரங்கள் மூலம் இந்த இடத்தை விட்டு வெளியெறுமாறு தெரிவித்துவிட்டு, இரவு முழுவதும் தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சத்தம் கேட்டதாக கான் யூனிஸ் நகர வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் இராணுவம் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள். குண்டு வீசப்போகிறோம் என்று தொலைபேசியில் தனக்கு தெரிவித்தார்கள் என்று கூறிய விதவையும், நான்கு குழந்தைகளின் தாயுமான பெண்மணி ஒருவர் கடந்த 7ஆம் திகதி வடக்கு காசாவில் இருந்து கான் யூனிஸ் நகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தேன் என்றார்.

உண்மை என்னவென்றால், காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. வடக்கு பகுதியிலும் மக்களை கொல்கிறார்கள். தெற்கு பகுதியிலும் மக்களை கொல்கிறார் என விரக்தியோடு தெரிவித்தார்.

தெற்கை நோக்கி நகரும் இராணுவம்

இந்நிலையில் இஸ்ரேல் இராணுவம் தனது தரைப்படையை தெற்கு காசாவை நோக்கி நகர்த்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கவச வாகனங்கள் மற்றும் புல்டோசர்களுடன் இஸ்ரேலிய டாங்கிகள் இடம்பெயர்ந்த மக்கள் செறிந்து வாழும் கான் யூனிஸ் நகரை நெருங்கி இருப்பதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய வாகனங்கள் அல் கராரா கிராத்திற்குள் இரண்டு கிலோமீற்றர் உள்ளே இருப்பதாக 59 வயது அமீன் அபூ ஹவ்லி கூறியிருக்கும் அதேநேரம், இஸ்ரேலிய டாங்கிகள் காசா பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு நெடுஞ்சாலையான சலாஹ் அல் தீன் வீதியில் முன்னேறி வருவதாக 34 வயது முஆஸ் முஹமது தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் போர் வெடித்த நிலையில் இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசாவின் பெரும்பகுதியை ஆச்சிரமித்திருக்கும் நிலையிலேயே தற்போது தெற்கு பகுதி மீது அவதானம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில் ஏழு நாள் நீடித்த போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முறிந்த பின் நான்காவது நாளாக இஸ்ரேல் காசாவெங்கும் உக்கிர தாக்குதல்களை நடத்தியது. வீடுகள், வர்த்தக மையங்கள் மற்றும் அகதி முகாம்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது.

கிழக்கு காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதல்களில் 30க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.

இதன்போது அல் செய்தூன் மற்றும் அல் ஷ{ஜா பகுதிகளில் இருக்கும் பல வீடுகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் 50க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

முழு முற்றுகையில் உள்ள காசா மீது கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அங்குள்ள பாதிக்கும் அதிகமான விடுகள் அழிக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 16,000 ஐ நெருக்கி இருப்பதோடு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பெருமளவில் வந்து சேர்ந்துள்ளன என காசாவின் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் முனிர் அல் பேர்ஸ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உதவியையும் வழங்க முடியாத நிலையில் எங்கள் மருத்துவமனைகள் உள்ளன என மேலும் தெரிவித்துள்ள அவர் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படையினரால் எங்கள் மருத்துவமனையின் அனைத்து சாதனங்களும் அழிக்கப்பட்டுவிட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் அம்புலன்ஸ்களும் மருத்துவர்களும் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு போர்க்குணமிக்க கொலைகார எதிரி பொதுமக்களை கொல்வதே அவர்களின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இஸ்ரேலி படையினர் மற்றும் பலஸ்தீன போராளிகள் இடையே காசாவில் மோதல்கள் நீடித்து வரும் நிலையில் வடக்கு காசாவில் மேலும் 3 துருப்பினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று கூறியது. இதன்படி அங்கு கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் கல்கில்யா நகரில் இஸ்ரேல் இராணுவம் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதன்படி இந்த ஆண்டு ஆரம்பம் தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 464 ஆக அதிகரித்திருப்பபோது இதில் காசாவில் போர் வெடித்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 256 ஆகும். மேலும் 3,100 பேர் வரை காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவம் கல்கில்யா மற்றும் ஜெனின் நகரங்களில் ஊடுருவியதை அடுத்து பலஸ்தீனர்களுடன் மோதல் ஏற்பட்டதாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT