வட மாகாண சபையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவு | தினகரன்

வட மாகாண சபையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவு

வடமாகாண சபையின் ஐந்துவருட பதவிக்காலம் இன்று (23) நள்ளிரவுடன் முடிவடைகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னரான கடந்த 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஆட்சிக்கு வந்த மாகாணசபையின் பதவிக்காலமே இன்று முடிவடைகிறது.

வடமாகாண சபையின் இறுதி அமர்வு இன்றையதினம் நடைபெறவுள்ளது. கடந்த ஐந்து வருடத்தில் வடமாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.

ஐந்து வருட காலத்தில் வடமாகாண சபை 440 பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளதுடன், 17 நியதிச் சட்டங்களில் 15 நியதிச் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் வடமாகாண சபையினால் பிரேரணைகளாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறையின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்ததாக காணப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. இவ்வாறு பிரிக்கப்பட்ட பின்னர் 2013ஆம் ஆண்டு முதன் முதலில் வடமாகாண சபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. வடமாகாண சபையில் உள்ள 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 7 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஓர் ஆசனத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் பெற்றுக் கொண்டன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட மாகாண சபையின் செயற்பாடுகள் கடந்த 5 வருடங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.

குறிப்பாக வடமாகாண சபையின் அமைச்சர்கள் ஊழல்களில் தொடர்புபட்டதாகக் கூறி பதவிவிலக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எடுத்த நடவடிக்கையால் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் பிளவு ஏற்பட்டதுடன், மாகாணசபை உறுப்பினர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் பனிப்போர் ஏற்பட்டது.

மாகாணசபைக்கு வழங்கப்பட்ட பெருந்தொகையான நிதி செலவு செய்யப்படாமையால் அது மத்திய அரசிடம் மீளத் திரும்பியதாக வடமாகாணசபையின் நிர்வாகத்தின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...