Wednesday, April 24, 2024
Home » இலங்கை பிரதான கழக போட்டிகளில் சோபிக்காத 4 அணிகள் தரம் குறைப்பு

இலங்கை பிரதான கழக போட்டிகளில் சோபிக்காத 4 அணிகள் தரம் குறைப்பு

by damith
December 5, 2023 8:04 am 0 comment

இலங்கையின் பிரதான கழகங்களுக்கு இடையிலான மூன்று நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பொலிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் சிங்கள விளையாட்டுக் கழகம் (எஸ்.எஸ்.சி) தகுதி பெற்றுள்ளன.

இந்த இரு அணிகளும் ஆடும் இறுதிப் போட்டி கொழும்பு என்.சி.சி. மைதானத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதேநேரம் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 22 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் சோபிக்கத் தவறிய நான்கு அணிகள் பிரிவு ஏ வில் இருந்து பிரிவு பி க்கு தரமிறக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரதான கழகங்களுக்கு இடையிலான மூன்று நாள் தொடரின் ஏ குழுவில் கடைசி இரு இடங்களை பிடித்த காலி கிரிக்கெட் கழகமும் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகமும் பி குழுவில் கடைசி இரு இடங்களை பிடித்த விமானப்படை விளையாட்டுக் கழகமும் செபஸ்டியனிட்ஸ் அணியும் தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நான்கு அணிகளும் தமது 10 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றியீட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏ குழுவில் பத்து போட்டிகளில் மூன்றில் வென்று ஒரு போட்டியில் கூட தோல்வியுறாது முதலிடத்தைப் பிடித்த எஸ்.எஸ்.சி. அணியும் பி குழுவில் 10 போட்டிகளில் 3 இல் வென்று ஒரு தோல்வியைக் கூட பெறாத பொலிஸ் அணியுமே இறுதிப் போட்டியில் ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு குழுக்களின் கீழ் இந்த முதல்தர போட்டிகளில் மொத்தம் 26 அணிகள் பங்கேற்று வந்தபோதும் ஒவ்வொரு ஆண்டும் அணிகளை குறைக்கும் நடைமுறையின் கீழ், 2023 இல் முதல்தர போட்டிகளில் பங்கேற்ற அணிகளின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டது. அதனை மேலும் குறைக்கும் வகையிலேயே இந்த ஆண்டு தொடரில் நான்கு அணிகள் தரமிறக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றத்துடன் அடுத்த ஆண்டின் முதல் தர பிரதான கழகங்களுக்கு இடையிலான மூன்று நாள் தொடரில் 18 அணிகள் ஆடவுள்ளன. அதேபோன்று பி பிரிவு தொடரில் 12 அணிகள் ஆடும். இம்முறை பி பிரிவில் ஆடிய அணிகளில் ஒவ்வொரு குழுவிலும் கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் என மொத்தம் 4 அணிகள் அடுத்த ஆண்டு தரமிறக்கம் செய்யப்படுகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT