மலையகத்தில் தீவிரமடைந்த சம்பள உயர்வு போராட்டம் | தினகரன்

மலையகத்தில் தீவிரமடைந்த சம்பள உயர்வு போராட்டம்

இயல்பு வாழ்வு ஸ்தம்பிதம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி மலையகத்தில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

நேற்றும் (22) பல தோட்டங்களிலும் நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நேற்று (22) முற்பகல் தலவாக்கலை நகரிலும் லோகி தோட்ட பகுதியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

தலவாக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனிக்குச் சொந்தமான ஹொலிரூட் தோட்டத்தைச் சேர்ந்த 4 பிரிவுகளிலிருந்து சுமார் 500 பேர் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் நேற்று முற்பகல் ஹொலிரூட் தோட்டத் தொழிற்சாலை முன்பாக பேரணியாக ஆரம்பித்து தலவாக்கலை நகரம் வரை ஊர்வலமாக வந்து தலவாக்கலை சுற்று வட்டத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூபா 1000 ஐ அடிப்படை வேதனமாக பெற்றுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பியதோடு, சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர். .

இதேவேளை, ஹற்றன் -_ நுவரெலியா பிரதான வீதியை வழிமறித்து லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் லோகி, - மிடில்டன், - கூம்வூட், - நானு ஓயா ஆகிய தோட்டங்களை சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டதோடு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்குச் சுமார் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.

இரு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மொத்தமாக 2 மணித்தியாலங்கள் மேற்படி வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹற்றன் சுழற்சி நிருபர்

 


Add new comment

Or log in with...