Thursday, March 28, 2024
Home » திருவருகைக் காலம்

திருவருகைக் காலம்

by damith
December 5, 2023 10:50 am 0 comment

திருவருகைக் காலத்தில் பயணிக்கின்றோம். இக்காலம் நமது மீட்பராம் இயேசுவின் பிறப்பு விழாவுக்காக நம்மைத் தயாரிக்க அழைக்கின்றது.

திருவருகைக் காலத்தை ஆரம்பிக்கும் கடந்த முதலாவது ஞாயிறு வாசகங்கள் நாம் விழிப்பாய் இருந்து விடியல் பெறவேண்டும் என நமக்கு அறிவுறுத்துகின்றன.

அன்றைய முதல் வாசகத்தில் தாங்கள் விழிப்பற்று இருந்த காரணத்தினாலேயே கடவுளின் அன்புக்கு எதிராகப் பாவம் இழைத்தாகப் புலம்பி அழுகின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

நாம் வாழும் இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதரும் தன்னைக்குறித்து அறிந்துணர்ந்துகொள்ளாத காரணத்தினால்தான் பாவங்கள் மலிந்துபோயுள்ளன என்பதே உண்மை.

அப்படியானால், ஒவ்வொரு மனிதருக்கும் ‘தன்னை உணர்தல்’ என்பது மிகவும் அவசியமாகிறது. தான் யாரால் படைக்கப்பட்டிருக்கின்றோம், எதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றோம், எமது கடமைகளும் பொறுப்புகளும் என்ன என்பதை ஆய்ந்துரணர்த்து, தெளிந்துதேர்ந்து செயல்படும்போது ஒவ்வொரு மனிதரும் பாவம் என்னும் கொடிய நஞ்சிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

ஆனால் அது நடப்பதில்லை, காரணம், ஆணவம், அதிகாரவெறி, பொருளாசை, தனது சுயநலத்திற்காகத் தன் இனத்தை, நண்பர்களை, உடன்பணியாளர்களைக் காட்டிக்கொடுத்து, பிரிவுகளையும் பிளவுகளையும் உண்டாக்குவது, சண்டை சச்சரவுகளை வளர்ப்பது, சாதி வெறியாட்டம், மத வன்முறைகள் ஆகிய யாவும் பாவத்திற்கான வாய்க்கால்களாக அமைகின்றன. ஆக, தங்களைப் படைத்து, பராமரித்து, பாதுகாத்து, வழிநடத்தி, அடிமைத்தளையிலிருந்து மீட்டு பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குக் கொணர்ந்து வாழ்வளித்த இறைவனை அடிக்கடி மறந்து பாவத்தில் வீழ்ந்தனர்.

கடந்த ஞாயிறு நற்செய்தியில் இயேசு கூறும் அறிவுரை, திருவெளிப்பாட்டு உரையில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நிறைவேறும் காலத்தைக் குறித்துக்காட்டுவதாக இருக்கின்றது.

அவை நிகழும் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவிற்கு இவை நிகழும் காலம் ஓர் இரகசியம் என்பதும் உண்மை. ஏனென்றால், மானிட மகனின் வெற்றி வருகையின் மகத்துவம் இது! இயேசு வெளிப்படப்போகும் இந்த நாள்தான் மக்களைத் தீர்ப்பிடப்போகும் நாளாகவும் கருதப்பட்டது ( லூக் 21:34, 2 தெச 1:10; 2 திமொ 1:12, 4:8).

இந்தத் தீர்ப்புகள் இரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால், அது யாருக்கும் தெரியாது என்றும், மக்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றி அந்தத் தீர்ப்பு நாளை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும் என்பதும் இயேசு கூறும் இந்த வார்த்தைகளுக்குப் பொருத்தமாக அமைகின்றது.

காரணம் என்னவென்றால், கிறிஸ்தவ வாழ்வில் நிரந்தரமாக ஓர் ஒழுக்க நிலை இருக்கவேண்டும் என்பதும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒவ்வொரு நாளையும் கிறிஸ்துவின் வருகை நாளாகவே கருத வேண்டும் என்பதும் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.

இத்தகைய சிந்தனைகளை உள்வாங்கி நற்செய்தி வாசகத்தை நோக்கினால் கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில், அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.

அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில், வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.”

இயேசு, எருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவிக்கிறார். அதன்பிறகு, இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்தபோது பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் அவரிடம் தனியாக வந்து, “நீர் கூறியவை எப்போது நிகழும்? இவையனைத்தும் நிறைவேறப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும்” (காண்க மாற் 13:1-3) என்று கேள்விகள் எழுப்புகின்றனர். அப்போதுதான், வரப்போகும் கேடு, கொடும் வேதனைகள் குறித்தெல்லாம் அவர்களிடம் பேசுகிறார் இயேசு. அதனைத் தொடர்ந்து மானிட மகனின் வருகைப் பற்றி பேசும்போதுதான் ‘விழிப்பாய் இருங்கள்’ என்று அறிவுறுத்துகின்றார். குறிப்பாக, சீடர்கள் விழிப்பாய் இருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையை இயேசு நான்கு முறை விடுகின்றார் அப்படியென்றால், ‘விழிப்பாய் இருங்கள்’ என்ற வார்த்தை எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றது.

விழிப்பாய் இருப்பது பற்றி இயேசு கூறும் இவ்வுரையில், ஒரு வீட்டுத் தலைவரிடம் அவரது பணியாளர் எந்தளவுக்கு விழிப்பாய் இருக்க வேண்டும் என்பதை ஒரு சிறிய எடுத்துக்காட்டு வழியாக விளக்குகின்றார். எனவே, உண்மைத்தன்மை கொண்ட விழிப்புணர்வே வெற்றி என்னும் விடியலைத் தரும் என்பதையும் நம் மனங்களில் இருத்துவோம்.

அருட்பணி செல்வராஜ் சூசைமாணிக்கம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT