வடக்கு, கிழக்கில் டிசம்பர் 31 இற்குள் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு | தினகரன்

வடக்கு, கிழக்கில் டிசம்பர் 31 இற்குள் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு

பங்களிப்பு வழங்குமாறு ஆளுநர்களிடம் வேண்டுகோள்

வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளை இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாகாண ஆளுநர்களுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இதற்கமைய பாதுகாப்பு பிரிவினர் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறும் ஜனாதிபதி ஆளுநர்களுக்கு அறிவித்தார்.

2018 ஆம் ஆண்டுக்கான மாகாணசபை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ஆளுநர்களுக்கு இப்பணிப்புரையை விடுத்தார். ஜனாதிபதியுடனான இக்கலந்துரையாடலில் மாகாணங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் மாகாண சபைகளின் நிதி மற்றும் பௌதீக வளங்களின் முன்னேற்றம், வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதன்போது ஜனாதிபதி கிராம மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குத் தனது பூரண பங்களிப்பை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

வறுமையை ஒழிக்க செயற்படுத்தப்டும் முக்கிய திட்டமான 'கிராம சக்தி' தேசிய திட்டத்தின் நோக்கத்தை சரியான முறையில் நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை 2 ஆயிரத்து 400 குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் முன்னேற்றம் பற்றி சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாகவும் இதன்போது ஆராய்ந்தார்.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் ப.திகாம்பரம், மலையக மக்களுக்கு முதற் தடவையாக காணி உறுதிகளை வழங்கவும் வீடுகளை அமைக்கவும் முன்னெடுக்கப்பட்ட சேவைக்காக தோட்ட மக்கள் சார்பில் ஜனாதிபதிக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.


Add new comment

Or log in with...