தோட்டத் தொழிலாளர்களுக்காக பெருகும் ஆதரவுக் குரல்கள்! | தினகரன்

தோட்டத் தொழிலாளர்களுக்காக பெருகும் ஆதரவுக் குரல்கள்!

மலையகப் பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்ைகக்கான சாத்விகப் போராட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்திருக்கிறது.

மலையகத்தின் பல்வேறு இடங்களிலும் தோட்டத் தொழிலாளர்களின் சாத்விகப் போராட்டங்கள் அதிகரித்து வருவது ஒருபுறமிருக்க, வடக்கு, கிழக்கிலும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென்று வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருப்பது விசேடமான அம்சம்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இதுவரை ஆதரவு உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்ததில்லை. தற்போது முதல் தடவையாக வடக்கு, கிழக்கில் இருந்து தோட்டத் தொழிலாளர்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. அதேசேமயம், மலையக தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொழிற்சங்கமான தமிழர் முற்போக்கு முன்னணி அண்மையில் தலவாக்கலையில் நடத்திய சம்பள உயர்வுக் கோரிக்கைப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் பங்கேற்றிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

‘அனைவருமே தொழிலாளர் சமூகம்’ என்பதன் பேரில் மலையகத் தொழிலாளர்களுக்காக வடக்கு, கிழக்கில் இருந்து ஆதரவுக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. தமிழர் என்ற ஒற்றுமை உணர்வின் கீழ் இவ்வாறு வடக்கு,கிழக்கில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

எவ்வாறாயினும் தமிழர் என்ற இன உணர்வின் அடிப்படையில் மலையக மக்களுக்காக இவ்விதம் வடக்கு, கிழக்கில் இருந்து ஆதரவுக் குரல் எழுப்பப்படுவது சிறப்பானதொரு விடயம்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கான நியாயமான சம்பளம் உட்பட அடிப்படை உரிமைகளுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகின்றனர். எனினும் அவர்களுக்கான நியாயமான சம்பளம் இதுவரை கிடைத்ததில்லை. ஆயிரம் ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று வரை அவர்கள் போராடிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.

அதேசமயம், இரு நூற்றாண்டு கால வரலாறு கொண்ட மலையக தோட்டத் தொழிலாளர் சமூகம் ‘லயன் காம்பரா’ வாழ்க்கையில் இருந்து இப்போதுதான் படிப்படியாக மீட்சி பெற்றுக் கொண்டிருக்கின்றது. மலையகத்தில் ஏற்பட்ட அரசியல் மறுமலர்ச்சியின் விளைவாகவே தோட்டத் தொழிலாளர்களுக்கான தனியான வீட்டுக் கனவு படிப்படியாக நிறைவேறி வருகின்றது. மலையகத்தில் உதயமான புதிய அரசியல் சக்திகளின் காத்திரமான அணுகுமுறையினால் கிடைத்துள்ள பலாபலன் இதுவென்பதை மறுப்பதற்கில்லை.

ஆனாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பள உயர்வுக் கோரிக்கையை இன்னும்தான் வென்றெடுக்க முடியாமலுள்ளது.

மலையகப் பெருந்தோட்டங்கள் முன்னர் அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்த போது, தோட்டத் தொழிலாளர்கள் தங்களது குறைந்தபட்சக் கோரிக்கைகளையேனும் போராடிப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை இருந்தது.

எனினும் மலையகத் தோட்டங்கள் தனியார் கம்பனிகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதன் பின்னர், எதனையும் போராடிப் பெறுவதென்பது முடியாத காரியமாகவே இருக்கின்றது. தொழிலாளர்களின் போராட்டங்களை அலட்சியப்படுத்துகின்ற மனப்போக்கை கம்பனிகளிடம் காணக் கூடியதாக இருக்கின்றது. எனவேதான் நியாயமான சம்பள உயர்வை அத்தொழிலாளர்களால் நீண்ட காலமாக பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. தொழிலாளர்களின் சம்பள உயர்வைத் தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்தமும் புதுப்பிக்கப்படாமல் தாமதித்தபடி செல்கின்றது.கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இதுவரை வெற்றியைத் தரவில்லை.

பெருந்தோட்டங்களை நிர்வகிக்கின்ற கம்பனிகள் தாங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகவே தொடர்ந்தும் கூறி வருகின்றன. அதனாலேயே தொழிலாளர்கள் கோருகின்றபடி சம்பளத்தை அதிகரிக்க முடியாதிருப்பதாகவும் அக்கம்பனிகள் கூறுகின்றன.

ஆனால் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பான செய்தியென்று தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சில தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

கம்பனிகள் மனம் வைத்தால் மாத்திரமே தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியும். சம்பளத்தை அதிகரிக்குமாறு மலையக தொழிற்சங்கங்களோ அல்லது அரசாங்கமோ கம்பனிகளை வற்புறுத்த முடியாது. ஆகவே மலையகத் தொழிற்சங்கங்கள் புரிந்துணர்வுடன் ஒன்றுபடுவதன் மூலமே சம்பள உயர்வுக் கோரிக்கையை வென்றெடுக்க முடியும்.

மலையக தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை அவற்றுக்கிடையே தோழமை, புரிந்துணர்வு, இணக்கப்பாடு என்பதெல்லாம் கிடையாது. எவ்வாறாயினும் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதிலேயே அத்தொழிற்சங்கங்கள் கண்ணுங்கருத்துமாக இருக்கின்றன.

ஒரு தொழிற்சங்கம் உரிமையை வென்றெடுத்துக் கொடுப்பதை மற்றைய தொழிற்சங்கம் ஒருபோதும் விரும்பப் போவதில்லை. தொழிற்சங்கங்களுக்கிடையே நிலவி வருகின்ற போட்டாபோட்டியும் மலையகத் தொழிலாளர்களின் இன்றைய அவல நிலைமைக்குக் காரணமெனக் கூறலாம்.

மலையகத் தொழிற்சங்கங்கள் அனைத்துமே ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க முன்வருமானால் தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை வென்றெடுப்பது சிரமமாக இருக்கப் போவதில்லை.

தொழிலாளர் சக்திகள் ஒன்றுபடுவதைப் போல, தொழிற்சங்கங்களும் ஒன்றுபடுவது அவசியம். அப்போதுதான் மலையகத் தொழிலாளர் வாழ்வில் சுபிட்சம் உருவாகும்.


Add new comment

Or log in with...